மத்தேயு 22:15-22

மத்தேயு 22:15-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு பரிசேயர் போய், இயேசுவின் வார்த்தையிலே அவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் திட்டமிட்டார்கள். பரிசேயர்கள் ஏரோதியர்களுடன் தங்கள் சீடரை இயேசுவினிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை சத்தியத்தின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். நீர் மனிதருக்கு முகதாட்சண்யம் காட்டாதவராய் இருப்பதால் ஆள்பார்த்து எதையும் செய்யமாட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா? இல்லையா? உம்முடைய அபிப்பிராயத்தை எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள். ஆனால் இயேசுவோ, அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்தவராய் அவர்களிடம், “வேஷக்காரர்களே! நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரியைச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தும் நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு வெள்ளிக்காசை அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார். அவர்கள் இதைக் கேட்டவுடன் வியப்படைந்து இயேசுவை விட்டுச் சென்றார்கள்.

மத்தேயு 22:15-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து, தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.

மத்தேயு 22:15-22 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர் பரிசேயர்கள், இயேசு போதனை செய்து கொண்டிருந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்கள். இயேசு ஏதேனும் தவறாகப் பேசினால் அவரைப் பிடித்துவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டார்கள். பரிசேயர்கள் இயேசுவை ஏமாற்ற சிலரை அவரிடம் அனுப்பினார்கள். தங்களுள் சிலரையும் ஏரோதியர்களில் சிலரையும் அவர்கள் இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் நேர்மையானவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனுடைய வழிகளைக்குறித்த உண்மைகளை நீர் போதிப்பதையும் அறிவோம். உம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்து நீர் கவலைப்படுவதில்லை. உமக்கு எல்லோரும் சமம். ரோமானியப் பேரரசர் சீசருக்கு வரி செலுத்துவது சரியா தவறா? உமது கருத்தைச் சொல்லும்” என்றார்கள். ஆனால் அவர்கள் தன்னை ஏமாற்ற முயற்சிப்பதை இயேசு அறிந்தார். ஆகவே இயேசு, “மாயமானவர்களே! எதற்காக என்னை ஏதும் தவறாகச் சொல்லவைக்க முயற்சிக்கிறீர்கள்? வரி செலுத்துவதற்கான நாணயம் ஒன்றைக் காட்டுங்கள்” என்று கூறினார். அவர்கள் ஒரு வெள்ளி நாணயத்தை இயேசுவிடம் காட்டினார்கள். பின் இயேசு, “நாணயத்தில் யாருடைய உருவம் உள்ளது? யாருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சீசரின் உருவமும் சீசரின் பெயரும்.” என்று பதிலளித்தனர். எனவே இயேசு அவர்களுக்குச் சொன்னார், “சீசருடையதை சீசருக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் கொடுங்கள்.” இயேசு கூறியதைக் கேட்ட அவர்கள் வியப்படைந்தார்கள். இயேசுவை விட்டு விலகிச் சென்றார்கள்.

மத்தேயு 22:15-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி, தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம். ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.