மத்தேயு 21:1-22

மத்தேயு 21:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே ஊருக்கு வந்தபோது, இயேசு இரண்டு சீடர்களை அனுப்பிச் சொன்னதாவது: “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். போனவுடன் ஒரு கழுதையும், அதனுடன் அதன் குட்டியும் கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள். யாராவது உங்களுக்கு ஏதாவது சொன்னால், நீங்கள் அவனிடம், ‘இவை கர்த்தருக்கு தேவை’ என்று சொல்லுங்கள். அவன் அவற்றை உடனே அனுப்பிவிடுவான்” என்றார். இறைவாக்கினன் மூலமாய் கூறப்பட்டது நிறைவேறும்படி இது நடைபெற்றது: “சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்: இதோ பார், உன் அரசர் உன்னிடம் வருகிறார், தாழ்மையுள்ள அவர் கழுதையின்மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் அமர்ந்து வருகிறார்.” சீடர்கள் போய், இயேசு தங்களுக்கு அறிவுறுத்தியபடியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும், அதன் குட்டியையும் கொண்டுவந்தார்கள். அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டதும், இயேசு அதன்மேல் ஏறி உட்கார்ந்தார். திரளான மக்கள் கூட்டம் வழியில் தங்களுடைய மேலுடைகளை வீதியில் விரித்தார்கள். மற்றவர்கள் மரங்களில் இருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள். அவருக்கு முன்னும், பின்னுமாகச் சென்ற மக்கள் கூட்டம்: “தாவீதின் மகனுக்கு ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “உன்னதத்தில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தார்கள். இயேசு எருசலேமுக்குள் சென்றபோது, பட்டணத்திலுள்ளவர்கள் எல்லோரும் குழப்பமடைந்து, “இவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் கூட்டம் அதற்குப் பதிலாக, “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்த இறைவாக்கினர்” என்றார்கள். இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்களை விற்கிறவர்களும், வாங்குகிறவர்களுமாகிய எல்லோரையும் வெளியே துரத்தினார். அவர் நாணயம் மாற்றுவோரின் மேஜைகளையும், புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். இயேசு அவர்களிடம், “எனது வீடு ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள், அதைக் கள்வரின் குகையாக்குகிறீர்கள்” என்றார். பார்வையற்றோரும் முடவரும் ஆலயத்தில் இயேசுவிடம் வந்தார்கள். அவர் அவர்களை குணமாக்கினார். அவர் செய்த இந்த புதுமையான காரியங்களையும், சிறுபிள்ளைகள் ஆலய முற்றத்திற்குள் நின்று, “தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்று ஆர்ப்பரிப்பதையும், தலைமை ஆசாரியரும் மற்றும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கண்டார்கள். அதனால் அவர்கள் கோபமடைந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “இந்தப் பிள்ளைகள் சொல்வது கேட்கிறதா?” என்றார்கள். இயேசு அதற்கு பதிலாக, “ஆம், “ ‘சிறுபிள்ளைகளின் உதடுகளிலிருந்தும் குழந்தைகளின் உதடுகளிலிருந்தும் துதிகளை ஏற்படுத்தினீர்,’ என்று எழுதியிருப்பதை, நீங்கள் ஒருபோதும் வேதவசனங்களில் வாசிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டு விலகி, பட்டணத்திலிருந்து பெத்தானியாவுக்குப் போய், அங்கே இரவு தங்கினார். மறுநாள் அதிகாலையில், இயேசு பட்டணத்திற்குத் திரும்பிப்போகையில் பசியாயிருந்தார். வீதி அருகே ஒரு அத்திமரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்பொழுது இயேசு, “நீ இனி ஒருபோதும் கனி கொடாதிருப்பாயாக!” என்று அதனிடம் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப்போயிற்று. சீடர்கள் இதைக்கண்டு வியப்படைந்து, “இவ்வளவு சீக்கிரம் இந்த அத்திமரம் எப்படிப் பட்டுப்போயிற்று?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், இந்த அத்திமரத்துக்குச் செய்யப்பட்டதுபோல உங்களாலும் செய்யமுடியும். அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொன்னால், அதுவும் அப்படியே நடக்கும். நீங்கள் விசுவாசித்தால், மன்றாட்டில் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொள்வீர்கள்” என்றார்.

மத்தேயு 21:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று, தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள். முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களுமாகிய திரளான மக்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது, நகரத்தார் அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு மக்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து: என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார். அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார். அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து, அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார். அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவிற்குப்போய், அங்கே இரவில் தங்கினார். காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.

மத்தேயு 21:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒலிவ மலைக்கு அருகில் பெத்பகேயுவில் அவர்கள் முதலில் தங்கினார்கள். அங்கு இயேசு தமது சீஷர்களில் இருவரை அழைத்து நகருக்குள் செல்லப் பணித்தார். அவர்களிடம் இயேசு, “அங்கே தெரியும் நகருக்குள் செல்லுங்கள். நீங்கள் நகருக்குள் நுழையும்பொழுது கழுதை ஒன்றை கட்டிப் போடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதனுடன் அதன் குட்டியையும் காண்பீர்கள். அவை இரண்டையும் அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாரேனும் உங்களை ஏன் கழுதைகளை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டால், அவர்களிடம், ‘இக்கழுதைகள் ஆண்டவருக்குத் தேவையாயிருக்கின்றன. விரைவில் இவைகளைத் திருப்பி அனுப்புவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார். தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னதின் முழுப்பொருளும் விளங்கும்படி இது நடந்தேறியது. “சொல்லுங்கள், சீயோன் நகர மக்களிடம், ‘இப்பொழுது உங்கள் மன்னவன் உங்களிடம் வருகிறார். பணிவானவர் அவர் கழுதையின் மேல் வருகிறார். ஆம் அவர் கழுதைக் குட்டியின் மேல் வருகிறார்’” இயேசு சொன்னபடியே அவரது சீஷர்கள் செய்தார்கள். அவர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுவிடம் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலாடைகளைப் போட்டார்கள். இயேசு அவற்றின் மேல் அமர்ந்து எருசலேம் நகர் செல்லும் பாதையில் பயணமானார். ஏராளமான மக்கள் வழியெங்கும் தங்கள் மேலாடைகளை வழியில் பரப்பினார்கள். மற்றவர்கள் மரக்கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள். சிலர் இயேசுவுக்கு முன்னால் நடந்தார்கள். மற்றவர்கள் அவருக்குப் பின்னே நடந்தார்கள். அவர்கள், “தாவீதின் குமாரனே வாழ்க! ‘கர்த்தரின் பெயரினால் வருகிறவரே வாழ்க! கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்டவரே, வாழ்க!’ “பரலோகத்திலுள்ள தேவனே வாழ்க!” என்றனர். பின்னர், இயேசு எருசலேம் நகருக்குள் சென்றார். நகரிலிருந்த அனைவரும் குழப்பமடைந்து, “யார் இந்த மனிதன்?” என்று வினவினார்கள். இயேசுவைத் தொடர்ந்து வந்த ஏராளமான மக்கள், “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்துள்ள தீர்க்கதரிசி” எனப் பதிலளித்தனர். இயேசு ஆலயத்திற்குள் நுழைந்தார். அங்கு பொருட்களை விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டுமிருந்த அனைவரையும் வெளியேற்றினார். பலவகையான நாணயங்களை மாற்றிக் கொண்டிருந்தவர்களின் மேஜைகளைக் கவிழ்த்தார். புறாக்களை வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களின் மேஜைகளையும் கவிழ்த்தார். அங்கிருந்த மக்கள் அனைவரிடமும் இயேசு, “ஏற்கெனவே வேத வாக்கியங்களில் ‘பிரார்த்தனை செய்வதற்கான இடம் என்னுடைய வீடு!’ என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்களோ தேவனுடைய வீட்டைக் கொள்ளைக்காரர்கள் பதுங்கும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். சில குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலிருந்த இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இயேசு குணப்படுத்தினார். தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவின் செயலைக் கண்டார்கள். இயேசு பெரும் செயல்களைச் செய்வதையும் பிள்ளைகள் அவரைப் புகழ்வதையும் கண்டார்கள். சிறுபிள்ளைகள் எல்லாரும், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும் ஆசாரியர்களையும் வேதபாரகர்களையும் கோபம்கொள்ளச் செய்தன. தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவிடம், “இப்பிள்ளைகள் சொல்வதைக் கேட்டீரா?” என்று வினவினார்கள். இயேசு அவர்களிடம், “ஆம், வேதவாக்கியம் கூறுகிறது, ‘நீரே (தேவன்) குழந்தைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் புகழ்பாடக் கற்பித்தீர்.’ நீங்கள் அந்த வேதவாக்கியங்களைப் படிக்கவில்லையா?” என்று பதிலுரைத்தார். பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டு விலகி பெத்தானியா நகருக்குச் சென்றார். அன்றைய இரவு இயேசு அங்கேயே தங்கினார். மறுநாள் அதிகாலை இயேசு மீண்டும் நகருக்குத் திரும்பிச்சென்று கொண்டிருந்தார். இயேசு மிகவும் பசியுடனிருந்தார். இயேசு சாலையோரம் அத்திமரம் ஒன்றைக் கண்டார். அத்திப்பழங்களை உண்பதற்காக அம்மரத்தின் அருகில் சென்றார். ஆனால், மரத்தில் பழம் எதுவும் இல்லை. வெறும் இலைகள் மட்டுமே இருந்தன. எனவே இயேசு மரத்தை நோக்கி, “இனி ஒருபொழுதும் உன்னிடம் பழம் உண்டாகாது” என்று கூறினார். உடனே அம்மரம் உலர்ந்து பட்டுப்போனது. இதைக் கண்ட சீஷர்கள் மிகவும் வியப்புற்றனர். அவர்கள் இயேசுவிடம், “எப்படி அத்திமரம் இவ்வளவு விரைவில் உலர்ந்து பட்டுப்போனது?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்களும் விசுவாசத்துட னும் சந்தேகிக்காமலும் இருந்தால், நான் இம்மரத்திற்குச் செய்ததைப் போலவே உங்களாலும் செய்ய இயலும். மேலும் உங்களால் இன்னும் அதிகமாகச் சாதிக்க இயலும். இம்மலையைப் பார்த்து ‘மலையே போய் கடலில் விழு’ என்று நீங்கள் விசுவாசத்துடன் சொன்னால் அது நடக்கும். நீங்கள் நம்பிக்கையோடு பிரார்த்தனையில் வேண்டுகிற எதுவும் கிடைக்கும்” என்று பதிலுரைத்தார்.

மத்தேயு 21:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று, தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது, சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து: என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார். அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார். அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து, அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார். அவர்களை விட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார். காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதினிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங்காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.