மத்தேயு 20:20-28
மத்தேயு 20:20-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது செபெதேயுவின் பிள்ளைகளின் தாய் தனது மகன்களைக் கூட்டிக்கொண்டு இயேசுவிடம் வந்தாள். அவள் முழங்காற்படியிட்டு, அவரிடம் ஒரு உதவியைக் கேட்டாள். “நீ விரும்புவது என்ன?” என்று அவர் அவளிடம் கேட்டார். அதற்கு அவள், “உமது அரசில் எனது இரு மகன்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதிக்கவேண்டும்” என்றாள். இயேசு அவர்களிடம், “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கப்போகும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “உண்மையாகவே எனது பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் எனது வலதுபக்கத்தில் உட்காருவதையோ, இடதுபக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் என் பிதாவினால் யாருக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார். இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், அந்த இரண்டு சகோதரர்கள் மேலும் கோபமடைந்தார்கள். இயேசு அவர்களை ஒன்றாகக் கிட்ட அழைத்து, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களின் உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்களோ அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்குப் பணிவிடை செய்கிறவனாக இருக்கவேண்டும். முதன்மையாயிருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும். மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும் பொருட்டாக என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார்.
மத்தேயு 20:20-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள். அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும். உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும். அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
மத்தேயு 20:20-28 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்னர், செபதேயுவின் குமாரர்களுடன் அவர்களின் தாய் இயேசுவைத் தேடி வந்தாள். அவள் இயேசுவின் முன் மண்டியிட்டு தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டினாள். இயேசு அவளிடம், “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டார். அவள், “எனது ஒரு குமாரன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது வலது பக்கம் இருக்கவும், மற்றொரு குமாரன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது இடது பக்கம் இருக்கவும் வாக்களியுங்கள்” என்று கேட்டாள். அதைக் கேட்ட இயேசு அவளது குமாரர்களிடம், “நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அனுபவிக்கப்போகும் துன்பத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார். “ஆம், எங்களால் முடியும்” என்று அவர்கள் பதில் சொன்னார்கள். இயேசு அவர்களிடம், “மெய்யாகவே எனக்கு ஏற்படும் துன்பம் உங்களுக்கும் ஏற்படும். ஆனால் என் வலது இடது பக்கங்களில் உட்காரப்போகிறவர்களை என்னால் முடிவு செய்ய இயலாது. அந்த இடம் யாருக்கு என்பதை என் பிதா முடிவு செய்துவிட்டார். அவர்களுக்காகவே அந்த இடங்களை அவர் தயார் செய்துள்ளார். அந்த இடங்கள் அவர்களுக்கே உரியவை” என்றார். இந்த உரையாடலைக் கேட்ட மற்ற பத்து சீஷர்களும் அவ்விரு சகோதரர்களின் மீதும் கோபம் கொண்டார்கள். இயேசு எல்லா சீஷர்களையும் ஒன்றாக அழைத்து, அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்களின் முக்கியமான தலைவர்கள் மக்களின் மீது முழு அதிகாரத்தை செலுத்த விரும்புகிறார்கள். ஆனால், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக ஆக விரும்பினால், அவன் உங்களுக்கு ஒரு வேலைக்காரனைப் போல ஊழியம் செய்ய வேண்டும். உங்களில் ஒருவன் முதலாவதாக வர விரும்பினால், அவன் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் ஊழியம் செய்ய வேண்டும். மனித குமாரனும் அப்படியே. தனக்கு மற்றவர்கள் ஊழியம் செய்வதற்காக அவர் வரவில்லை. மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவே மனித குமாரன் வந்தார். பலரது வாழ்வை இரட்சிப்பதற்கு தன் உயிரைக் கொடுக்கவே மனித குமாரன் வந்தார்” என்று கூறினார்.
மத்தேயு 20:20-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள். அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும்வந்தார் என்றார்.