மத்தேயு 19:16-30

மத்தேயு 19:16-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல செயல் என்ன?” எனக் கேட்டான். “நல்லது என்ன என்பதைப்பற்றி நீ ஏன் என்னிடம் கேட்கிறாய்? நல்லவர் ஒருவரே இருக்கிறார். நீ வாழ்விற்குள் செல்லவேண்டுமானால் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி” என்றார். “எந்தக் கட்டளைகள்?” என அவன் விசாரித்தான். இயேசு அதற்குப் பதிலாக, “கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட, உன்னில் அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிடம் அன்பாய் இரு என்பவைகளே” என்றார். அதற்கு அந்த வாலிபன், “இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன், இன்னும் எனக்கு என்ன குறைபாடு?” என்றான். இயேசு அதற்கு பதிலாக, “நீ குறைபாடற்றவனாய் இருக்க விரும்பினால், போய் உனது உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார். இதை அந்த வாலிபன் கேட்டபோது, துக்கத்துடன் திரும்பிப்போனான். ஏனெனில் அவன் பெரிய செல்வந்தனாய் இருந்தான். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் பரலோக அரசிற்குள் செல்வது மிகக் கடினமானது. மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் இறைவனின் அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதிற்குள் நுழைவது சுலபமாக இருக்கும்” என்றார். இதைச் சீடர்கள் கேட்டபோது, மிகவும் வியப்புற்று, “அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” எனக் கேட்டார்கள். இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, “மனிதனால் இது முடியாது. ஆனால் இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்” என்றார். பேதுரு அவரிடம் மறுமொழியாக, “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோமே! அப்படியானால், எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்றான். இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எல்லாக் காரியங்களும் புதுப்பிக்கப்படும் நாளில், மானிடமகனாகிய நான் எனது மகிமையின் அரியணையில் உட்கார்ந்திருப்பேன். என்னைப் பின்பற்றிய நீங்களும் பன்னிரண்டு அரியணைகளில் உட்கார்ந்து, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள். என் நிமித்தம் வீடுகளையோ, சகோதரர்களையோ சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறுமடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். ஆனால் முதலாவதாய் இருக்கும் அநேகர் கடைசியாகவும், கடைசியாய் இருக்கும் அநேகர் முதலாவதாய் இருப்பார்கள்” என்றார்.

மத்தேயு 19:16-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார். அவன் அவரைப் பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார். அந்த வாலிபன் அவரைப் பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். அதற்கு இயேசு: நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான். அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள். இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார். அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனிதகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; ஆனாலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராகவும், பிந்தினோர் அநேகர் முந்தினோராகவும் இருப்பார்கள் என்றார்.

மத்தேயு 19:16-30 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு மனிதன் இயேசுவை அணுகி, “போதகரே நித்திய ஜீவனைப் பெற நான் என்ன நல்ல செயலைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டான். இயேசு அவனிடம், “எது நல்லது என்பதை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட” என்று பதிலுரைத்தார். “எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன். அதற்கு இயேசு, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. உன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும். ‘தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்’” என்று பதில் சொன்னார். அதற்கு அந்த இளைஞன், “இவை அனைத்தையும் கீழ்ப்படிந்து நடந்திருக்கிறேன். வேறென்ன செய்ய வேண்டும்?” என்றான். இயேசு அவனிடம், “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார். ஆனால், இதைக் கேட்ட அம்மனிதன் மிகுந்த வருத்தமடைந்தான். மிகச் செல்வந்தனான அவன், தன் செல்வத்தை இழக்க விரும்பவில்லை. எனவே, அவன் இயேசுவை விட்டு விலகிச் சென்றான். பிறகு, இயேசு தம் சீஷர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். பரலோக இராஜ்யத்திற்குள் செல்வந்தர்கள் நுழைவது மிகக் கடினம். ஆம் பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது” என்று கூறினார். இதைக் கேட்டபோது சீஷர்கள் வியப்புற்றனர். அவர்கள், “பின் யார் தான் இரட்சிக்கப்படுவார்கள்?” என்று கேட்டனர். இயேசு தம் சீஷர்களைப் பார்த்து, “மனிதர்களால் ஆகக் கூடியதல்ல இது. ஆனால், எல்லாம் வல்ல தேவனால் ஆகும்” என்று சொன்னார். பேதுரு இயேசுவிடம், “நாங்கள் பெற்றிருந்த அனைத்தையும் துறந்து உம்மைப் பின்பற்றினோம். எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று வினவினான். இயேசு தன் சீஷர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள். மேலும் என்னைப் பின்பற்றுவதற்காக வீடு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் அல்லது நிலம் ஆகியவற்றைத் துறந்தவன், தான் துறந்ததை விடப் பல மடங்கு பலன் பெறுவான். அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். உயர்ந்த வாழ்க்கை வாழும் பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த வாழ்வை அடைவார்கள். மிகத் தாழ்ந்த வாழ்வை வாழும் பலர் மிக உயர்ந்த வாழ்வை அடைவார்கள்” என்றார்.

மத்தேயு 19:16-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.