மத்தேயு 16:21-24

மத்தேயு 16:21-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த வேளையிலிருந்து, இயேசு தம்முடைய சீடர்களுக்கு தாம் எருசலேமுக்குப் போகவேண்டும் என்றும், மக்கள் யூதரின் தலைவராலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் அநேக துன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்றும், அத்துடன் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்றும் சொல்லத் தொடங்கினார். அப்பொழுது பேதுரு, இயேசுவை தனியே அழைத்துக் கொண்டுபோய், “ஆண்டவரே, இது ஒருபோதும் நடக்கக்கூடாது! இது ஒருபோதும் உமக்கு நேரிடாது” என்று அவரைக் கண்டிக்கத் தொடங்கினான். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப்பார்த்து, “சாத்தானே, எனக்குப் பின்னாகப் போ. நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; நீ இறைவனின் காரியங்களை சிந்திக்காமல் மனிதனுக்கு ஏற்றக் காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார். இதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.

மத்தேயு 16:21-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.

மத்தேயு 16:21-24 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்பொழுதிலிருந்து இயேசு தம் சீஷர்களிடம் தாம் எருசலேம் செல்லவேண்டுமென சொல்லத் தொடங்கினார். மூத்த யூதத் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும் நியாயப் பிரமாண போதகர்களாலும் தமக்குப் பல இன்னல்கள் வரப்போவதை இயேசு விளக்கினார். மேலும், தம் சீஷர்களிடம் தாம் கொல்லப்படவிருப்பதையும் இயேசு கூறினார். பின்னர், மூன்றாம் நாள் தாம் உயிர்த்தெழவிருப்பதையும் கூறினார். இயேசுவுடன் தனிமையில் பேசிய பேதுரு அவரை விமர்சிக்கத் தொடங்கினான். பேதுரு, “தேவன் உம்மை அவற்றிலிருந்து காப்பாற்றட்டும். ஆண்டவரே! அவை உமக்கு ஒருபோதும் நிகழக்கூடாது!” என்று கூறினான். இயேசு அதற்குப் பேதுருவிடம், “என்னை விட்டு விலகிச் செல், சாத்தானே! நீ எனக்கு உதவி செய்யவில்லை! தேவனின் செயல்களைக் குறித்து உனக்குக் கவலையில்லை. மக்கள் முக்கியமெனக் கருதுகின்றவைகளையே நீ பொருட்படுத்துகிறாய்” என்று கூறினார். பின்பு இயேசு தமது சீஷர்களிடம், “என்னைப் பின்தொடர விரும்பும் யாரும் தன் சுயவிருப்பங்களைத் துறக்க வேண்டும். தனக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்தொடர வேண்டும்.

மத்தேயு 16:21-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்