மத்தேயு 16:13-28
மத்தேயு 16:13-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு செசரியா பிலிப்பு பகுதிக்கு வந்தபோது, அவர் தமது சீடர்களிடம், “மக்கள் மானிடமகனாகிய என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் எரேமியா, அல்லது இறைவாக்கினர்களில் ஒருவர் என்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சீமோன் பேதுரு, “நீர் கிறிஸ்து, வாழும் இறைவனின் மகன்” என்றான். அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால் வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கிற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது. எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. நான் உனக்கு பரலோக அரசின் திறவுகோல்களைத் தருவேன்; நீ பூமியில் எதைக் கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்” என்றார். அதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், தாம் கிறிஸ்து என்பதை யாருக்கும் சொல்லவேண்டாம் என எச்சரித்தார். அந்த வேளையிலிருந்து, இயேசு தம்முடைய சீடர்களுக்கு தாம் எருசலேமுக்குப் போகவேண்டும் என்றும், மக்கள் யூதரின் தலைவராலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் அநேக துன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்றும், அத்துடன் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்றும் சொல்லத் தொடங்கினார். அப்பொழுது பேதுரு, இயேசுவை தனியே அழைத்துக் கொண்டுபோய், “ஆண்டவரே, இது ஒருபோதும் நடக்கக்கூடாது! இது ஒருபோதும் உமக்கு நேரிடாது” என்று அவரைக் கண்டிக்கத் தொடங்கினான். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப்பார்த்து, “சாத்தானே, எனக்குப் பின்னாகப் போ. நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; நீ இறைவனின் காரியங்களை சிந்திக்காமல் மனிதனுக்கு ஏற்றக் காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார். இதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். தம் உயிரைக் காத்துக்கொள்கிறவர்கள் அதை இழந்துபோவார்கள். ஆனால் தமது உயிரை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். ஒருவர் உலகம் முழுவதையும் சொந்தமாக்கினாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனால், அதனால் அவருக்குப் பலன் என்ன? அல்லது ஒருவர் தம் ஆத்துமாவுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிடமகனாகிய நான் எனது தூதர்களுடன் தம்முடைய பிதாவின் மகிமையில் வரப்போகிறேன். அப்பொழுது நான் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்ததற்கு ஏற்ற வெகுமதியைக் கொடுப்பேன். “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் மானிடமகனாகிய நான் என்னுடைய அரசில் வருவதைக் காண்பதற்கு முன்னே மரணமடைய மாட்டார்கள்” என்றார்.
மத்தேயு 16:13-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்? மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 16:13-28 பரிசுத்த பைபிள் (TAERV)
செசரியா பிலிப்பு என்ற இடத்திற்கு இயேசு சென்றார். இயேசு தம் சீஷர்களிடம், “மனித குமாரனாகிய என்னை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு சீஷர்கள், “சிலர் உம்மை யோவான்ஸ்நானகன் என்கிறார்கள். சிலர் உம்மை எலியா என்கிறார்கள். மேலும் சிலர் உம்மை எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கிறார்கள்” எனப் பதில் அளித்தார்கள். பின் இயேசு தம் சீஷர்களிடம், “நான் யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சீமோன் பேதுரு, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான். இயேசு அவனிடம், “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார். எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது. பரலோக இராஜ்யத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். நீ இப்பூலோகத்தில் வழங்கும் நியாயத்தீர்ப்பு, (மெய்யாகவே) தேவனின் நியாயத்தீர்ப்பாகும். இப்பூலோகத்தில் நீ வாக்களிக்கும் மன்னிப்பு, தேவனின் மன்னிப்பாகும்” என்று சொன்னார். தான் கிறிஸ்து என்பதை ஒருவருக்கும் சொல்லக் கூடாது எனத் தமது சீஷர்களை இயேசு எச்சரித்தார். அப்பொழுதிலிருந்து இயேசு தம் சீஷர்களிடம் தாம் எருசலேம் செல்லவேண்டுமென சொல்லத் தொடங்கினார். மூத்த யூதத் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும் நியாயப் பிரமாண போதகர்களாலும் தமக்குப் பல இன்னல்கள் வரப்போவதை இயேசு விளக்கினார். மேலும், தம் சீஷர்களிடம் தாம் கொல்லப்படவிருப்பதையும் இயேசு கூறினார். பின்னர், மூன்றாம் நாள் தாம் உயிர்த்தெழவிருப்பதையும் கூறினார். இயேசுவுடன் தனிமையில் பேசிய பேதுரு அவரை விமர்சிக்கத் தொடங்கினான். பேதுரு, “தேவன் உம்மை அவற்றிலிருந்து காப்பாற்றட்டும். ஆண்டவரே! அவை உமக்கு ஒருபோதும் நிகழக்கூடாது!” என்று கூறினான். இயேசு அதற்குப் பேதுருவிடம், “என்னை விட்டு விலகிச் செல், சாத்தானே! நீ எனக்கு உதவி செய்யவில்லை! தேவனின் செயல்களைக் குறித்து உனக்குக் கவலையில்லை. மக்கள் முக்கியமெனக் கருதுகின்றவைகளையே நீ பொருட்படுத்துகிறாய்” என்று கூறினார். பின்பு இயேசு தமது சீஷர்களிடம், “என்னைப் பின்தொடர விரும்பும் யாரும் தன் சுயவிருப்பங்களைத் துறக்க வேண்டும். தனக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்தொடர வேண்டும். தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் எவனும் அதை இழப்பான். எனக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறவன், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான். தன் ஆத்துமாவை இழந்தவனுக்கு, இவ்வுலகம் முழுவதும் கிடைத்தாலும் ஒரு பயனும் இல்லை. என்ன விலை கொடுத்தாலும் இழந்த ஆத்துமாவை மீட்க இயலாது. தமது தந்தையின் மகிமையுடனும் தேவதூதர்களுடனும் மீண்டும் தேவகுமாரன் வருவார். அப்பொழுது, ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்த செயல்களுக்குத் தக்கபடி தேவ குமாரன் வெகுமதியளிப்பார். நான் உண்மையைச் சொல்கிறேன். இங்குள்ள சிலர் தாங்கள் இறப்பதற்கு முன்பு மனித குமாரன் தன் இராஜ்யத்தின் ஆட்சியுடன் வருவதைக் காண்பார்கள்.” என்றார்.
மத்தேயு 16:13-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.