மத்தேயு 16:13-17

மத்தேயு 16:13-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு செசரியா பிலிப்பு பகுதிக்கு வந்தபோது, அவர் தமது சீடர்களிடம், “மக்கள் மானிடமகனாகிய என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் எரேமியா, அல்லது இறைவாக்கினர்களில் ஒருவர் என்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சீமோன் பேதுரு, “நீர் கிறிஸ்து, வாழும் இறைவனின் மகன்” என்றான். அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால் வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கிற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது.

மத்தேயு 16:13-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

மத்தேயு 16:13-17 பரிசுத்த பைபிள் (TAERV)

செசரியா பிலிப்பு என்ற இடத்திற்கு இயேசு சென்றார். இயேசு தம் சீஷர்களிடம், “மனித குமாரனாகிய என்னை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு சீஷர்கள், “சிலர் உம்மை யோவான்ஸ்நானகன் என்கிறார்கள். சிலர் உம்மை எலியா என்கிறார்கள். மேலும் சிலர் உம்மை எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கிறார்கள்” எனப் பதில் அளித்தார்கள். பின் இயேசு தம் சீஷர்களிடம், “நான் யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சீமோன் பேதுரு, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான். இயேசு அவனிடம், “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார்.

மத்தேயு 16:13-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.