மத்தேயு 15:21-39

மத்தேயு 15:21-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு அவ்விடம் விட்டு தீரு, சீதோன் பகுதிக்குச் சென்றார். அப்பகுதியிலிருந்த ஒரு கானானியப் பெண் அவரிடத்தில் வந்து, “ஆண்டவரே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்! எனது மகளுக்குப் பிசாசு பிடித்திருப்பதினால் மிகவும் வேதனைப்படுகிறாள்” என்று கதறினாள். ஆனால் இயேசு அதற்குப் பதிலாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. எனவே அவரது சீடர்கள் அவரிடம் வந்து, “இவளை அனுப்பிவிடும் இவள் நமக்குப் பின்னால் கதறிக் கொண்டே வருகிறாளே!” என வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது இயேசு, “நான் இஸ்ரயேலில் வழிதவறிப்போன ஆடுகளுக்காக மட்டுமே அனுப்பப்பட்டேன்” என்று சொன்னார். அந்தப் பெண் வந்து, இயேசுவின்முன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே எனக்கு உதவிசெய்யும்!” என்றாள். இயேசு அவளைப் பார்த்து, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார். அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆனால் நாய்க்குட்டிகள் எஜமானின் மேஜையில் இருந்து விழும் அப்பத்துண்டுகளைத் தின்னுமே” என்றாள். அப்பொழுது இயேசு, “பெண்ணே, உன் விசுவாசம் பெரியது! நீ வேண்டியது கொடுக்கப்பட்டது” என்றார். அந்நேரமே, அவளுடைய மகள் சுகமடைந்தாள். இயேசு அவ்விடம் விட்டு, கலிலேயா கடலருகே வந்தார். அங்கே அவர் ஒரு மலைப்பகுதிக்கு ஏறிச்சென்று உட்கார்ந்தார். மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடத்தில் வந்தார்கள். அவர்கள் முடவரையும், பார்வையற்றோரையும், அங்கவீனரையும், ஊமையரையும், அவர்களுடன் மற்ற அநேக நோயாளிகளையும் கொண்டுவந்து அவருடைய பாதத்தில் கிடத்தினார்கள்; இயேசு அவர்களை குணமாக்கினார். ஊமையர் பேசுவதையும், அங்கவீனர் சுகமடைவதையும், முடவர் நடப்பதையும், பார்வையற்றோர் பார்ப்பதையும் மக்கள் கண்டு வியப்படைந்தார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனைத் துதித்தார்கள். இயேசு தமது சீடரைத் தம்மிடமாய்க் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்காக இரக்கப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். சாப்பிடுவதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை. நான் இவர்களைப் பசியோடு அனுப்ப விரும்பவில்லை, அனுப்பினால் இவர்கள் வழியில் சோர்ந்து விழுவார்களே” என்றார். அவரது சீடர்கள் அவரிடம், “இவ்வளவு பெரிய கூட்டத்திற்குக் கொடுக்கத் தேவையான உணவை சற்று தூரமான இந்த இடத்திலே எங்கிருந்து பெறமுடியும்?” என்று கேட்டார்கள். “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று இயேசு கேட்டார். “ஏழு அப்பங்களும், சில சிறு மீன்களும் இருக்கின்றன” என்று பதிலளித்தார்கள். இயேசு மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார். பின்பு அவர் ஏழு அப்பங்களையும், மீன்களையும் எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தியபின், அவற்றைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளைச் சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை நாலாயிரமாயிருந்தது. அவர்களைத்தவிர பெண்களும், பிள்ளைகளுங்கூட இருந்தார்கள். இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டபின், படகில் ஏறி மகதான் நாட்டின் எல்லைகளுக்கு வந்தார்.

மத்தேயு 15:21-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார். அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள். இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள். இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார். ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார். அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள். அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள். பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள். அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.

மத்தேயு 15:21-39 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு அவ்விடத்தை விட்டு தீரு மற்றும் சீதோன் பிரதேசங்களுக்குச் சென்றார். அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்! என் மகளைப் பிசாசு பிடித்திருக்கிறது. அவள் மிகவும் துன்பப்படுகிறாள்” என்றாள். ஆனால் இயேசு அவளுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “அந்தப் பெண்ணைப் போகச் சொல்லும். நம்மைத் தொடந்து வந்து கதறுகிறாள்” என்று கெஞ்சினார்கள். இயேசு, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார். அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு, “ஆண்டவரே, எனக்கு உதவும்” எனக் கூறினாள். இயேசு, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார். அதற்கு அப்பெண், “ஆம் ஆண்டவரே! ஆனால் எஜமானனின் மேஜையிலிருந்து சிதறும் அப்பத்துண்டுகளை நாய்கள் உண்ணுகின்றனவே” என்றாள். பின்னர் இயேசு அவளை நோக்கி, “பெண்ணே, உனக்கு மிகுந்த விசுவாசம் இருக்கின்றது! நான் செய்ய வேண்டுமென்று நீ விரும்பியதை நான் செய்கின்றேன்” என்று கூறினார். அதே நேரத்தில் அப்பெண்ணின் குமாரத்தி குணப்படுத்தப்பட்டாள். பின் இயேசு அவ்விடத்தைவிட்டு விலகி, கலிலேயா ஏரிக்கரைக்குச் சென்றார். இயேசு ஒரு குன்றின்மீதேறி அங்கே அமர்ந்தார். ஏராளமான மக்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் நோயாளிகள் பலரையும் அழைத்து வந்து, அவர்களை இயேசுவின் முன் கொண்டு வந்தனர். அங்கு முடவர்களும் குருடர்களும் செவிடர்களும் இன்னும் பலவகை நோயாளிகளும் இருந்தனர். இயேசு அவர்கள் அனைவரையும் குணமாக்கினார். ஊமையர் பேசியதைக் கண்ட மக்கள் வியப்புற்றனர். முடவர்கள் மீண்டும் நடந்தனர். குருடர்கள் பார்வை பெற்றனர். மக்கள் அனைவரும் இஸ்ரவேலின் (யூதர்களின்) தேவனுக்கு அதற்காக நன்றி கூறினார்கள். இயேசு தம் சீஷர்களை அருகில் அழைத்து, “இம்மக்களுக்காக நான் வருந்துகிறேன். இவர்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அவர்களுக்கு உணவு ஏதுமில்லை. அவர்களைப் பசியுடன் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. வீட்டிற்குத் திரும்பும்பொழுது அவர்கள் சோர்வடையலாம்” என்றார். இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “இவர்கள் அனைவருக்கும் போதுமான அப்பத்துக்கு நாம் எங்கே போக முடியும்? எந்த நகரமும் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றார்கள். இயேசு, “எத்தனை அப்பங்கள் உங்களிடம் உள்ளன?” என்று கேட்டார். அதற்கு அவரது சீஷர்கள், “எங்களிடம் ஏழு அப்பங்களும் சில மீன்களும் உள்ளன” என்றனர். இயேசு மக்களைத் தரையில் உட்காரச் சொன்னார். இயேசு ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்துக் கொண்டார். பின் அவர் அவ்வுணவுக்காகத் தேவனுக்கு நன்றி கூறி, அவ்வுணவைத் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்கு உணவை அளித்தனர். மக்கள் அனைவரும் திருப்தியாய் உண்டனர். அதன் பின்னர், எஞ்சிய உணவைச் சீஷர்கள் ஏழு கூடை நிறைய நிறைத்தார்கள். அங்கு சுமார் 4,000 ஆண்கள் உணவருந்தினர். மேலும் பல பெண்களும் குழந்தைகளும் உணவு உண்டார்கள். அவர்கள் உண்டபின், இயேசு அவர்களைத் திரும்பிச் செல்லப் பணித்தார். இயேசு ஒரு படகில் ஏறி, மக்தலாவின் பிரதேசத்திற்குச் சென்றார்.

மத்தேயு 15:21-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார். அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள். அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள். ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள். அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்