மத்தேயு 15:12-20
மத்தேயு 15:12-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள். அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான். அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா? வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
மத்தேயு 15:12-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “இவற்றைப் பரிசேயர்கள் கேட்டு, கோபித்துக்கொண்டார்கள் என்பது உமக்குத் தெரியுமா?” என்றார்கள். அதற்கு இயேசு, “எனது பரலோக பிதா நடாத எல்லாச் செடிகளும் வேரோடே பிடுங்கிப்போடப்படும். அவர்களை விட்டுவிடுங்கள்; அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடன் குருடனுக்கு வழிகாட்டினால், இருவரும் குழியிலே விழுவார்களே” எனப் பதிலளித்தார். அப்பொழுது பேதுரு, “இந்த உவமையை எங்களுக்கு விளக்கமாகச் சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளாதவர்களாய் இருக்கிறீர்களா?” என்று அவர்களிடம் கேட்டார். “வாய்க்குள் போவதெல்லாம் வயிற்றுக்குள் போய் உடலைவிட்டு வெளியேறுகிறது என்று தெரியாதா? ஆனால் வாயிலிருந்து வெளியே வருகிறவைகள் இருதயத்திலிருந்து வந்து மனிதரை அசுத்தப்படுத்தும். ஏனெனில் இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், கொலை, விபசாரம், முறைகேடான பாலுறவு, களவு, பொய்ச்சாட்சி, அவதூறு ஆகியவை வெளிவருகின்றன. இவையே மனிதனை அசுத்தப்படுத்தும்; கை கழுவாமல் சாப்பிடுவது மனிதரை அசுத்தப்படுத்தாது” என்றார்.
மத்தேயு 15:12-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள். அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான். அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா? வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும். எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும். இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
மத்தேயு 15:12-20 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்னர். அவரது சீஷர்கள் இயேசுவிடம் வந்து, “நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாயுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். குருடர்கள் குருடர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார். அப்பொழுது பேதுரு, “நீர் மக்களுக்கு முதலில் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டான். அதற்கு இயேசு, “புரிந்து கொள்வதில் இன்னமுமா சிரமம்? ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு அனைத்தும் அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலை விட்டு வெளியேறுகிறது. ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார்.