மத்தேயு 14:22-33

மத்தேயு 14:22-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில், தனக்கு முன்பாகவே சீடரை படகில் ஏறி மறுகரைக்குப் போகும்படி செய்தார். அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, இயேசு தனிமையாக மன்றாடுவதற்கென மலையின்மேல் ஏறினார். இரவு வேளையானபோது, அவர் அங்கே தனிமையாய் இருந்தார். ஆனால் சீடர்கள் சென்ற படகு, கரையை விட்டு மிகத் தொலைவில் போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால் படகு அலைக்கழிக்கப்பட்டது. அதிகாலை மூன்றாம்மணி நேரத்தில், இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடம் சென்றார். அவர் கடலின்மேல் நடப்பதை சீடர்கள் கண்டபோது, திகிலடைந்து, “அது பேய்!” என்று சொல்லி, பயத்துடன் சத்தமிட்டார்கள். உடனே இயேசு அவர்களிடம்: “தைரியமாய் இருங்கள்! இது நான்தான், பயப்படவேண்டாம்” என்றார். அதற்கு பேதுரு, “ஆண்டவரே, நீர்தான் என்றால், நானும் தண்ணீர்மேல் நடந்து உம்மிடம் வரும்படி சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “வா” என்றார். அப்பொழுது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின்மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான். ஆனால் அவன் காற்றைக் கண்டபோது பயமடைந்து மூழ்கத்தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான். உடனே இயேசு தமது கையை நீட்டி பேதுருவைப் பிடித்தார். “அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார். அவர்கள் படகில் ஏறியபோது காற்று அமர்ந்து போயிற்று. படகிற்குள் இருந்தவர்கள் அவரை வழிபட்டு, “உண்மையாகவே, நீர் இறைவனின் மகன்!” என்றார்கள்.

மத்தேயு 14:22-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார். அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது. அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார். பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான். காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கும்போது: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

மத்தேயு 14:22-33 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு இயேசு தமது சீஷர்களைப் படகில் ஏறச் சொன்னார். இயேசு அவர்களை ஏரியின் மறுகரைக்குப் போகச் சொன்னார். தாம் பின்னர் வருவதாக அவர்களிடம் கூறினார். மக்களிடம் விடை பெற்றுக்கொண்ட இயேசு குன்றின்மீது ஏறினார். தனியே பிரார்த்தனை செய்வதற்காக இயேசு அங்கு சென்றார். அந்தச் சமயம், படகு ஏற்கெனவே வெகு தொலைவு சென்றிருந்தது. படகு அலைகளினால் தொல்லைகளுக்கு உள்ளானது. படகு சென்ற திசைக்கு எதிராகக் காற்று வீசியது. அதிகாலை, மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை இயேசுவின் சீஷர்கள் படகிலேயே இருந்தனர். இயேசு தண்ணீரின் மேல் நடந்து அவர்களிடம் வந்தார். இயேசு தண்ணீரின் மேல் நடப்பதைக் கண்ட சீஷர்கள் பயந்து போனார்கள், “அது ஒரு ஆவிதான்” என்று அவர்கள் பயத்தில் அலறினார்கள். உடனே இயேசு அவர்களிடம், “கவலை கொள்ளாதீர்கள். நான்தான்! பயப்படாதீர்கள்” என்று கூறினார். அதற்குப் பேதுரு, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று சொன்னான். இயேசு அவனிடம், “வா, பேதுரு” என்று கூறினார். பின்னர், பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீரின் மேல் இயேசுவை நோக்கி நடந்தான். ஆனால், தண்ணீரின் மேல் நடந்து சென்றபொழுது பேதுரு காற்றடிப்பதையும் அலைகள் வீசுவதையும் கண்டான். பயந்து போன பேதுரு, நீரில் மூழ்க ஆரம்பித்தான். உடனே பேதுரு, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று அலறினான். உடனே இயேசு தமது கையால் பேதுருவைப் பற்றிக்கொண்டார். இயேசு அவனிடம், “உன் விசுவாசம் சிறியது. நீ ஏன் சந்தேகம் கொண்டாய்?” என்று சொன்னார். பேதுருவும் இயேசுவும் படகில் ஏறியதும் காற்று அமைதியடைந்தது. அதன் பிறகு படகிலிருந்த சீஷர்கள் இயேசுவை வணங்கி, “உண்மையிலேயே நீர் தேவகுமாரன்தான்” என்று சொன்னார்கள்.

மத்தேயு 14:22-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்