மத்தேயு 14:13-36
மத்தேயு 14:13-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள். இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.
மத்தேயு 14:13-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு நடந்தவற்றைக் கேள்விப்பட்டபோது, யாருக்கும் தெரியாமல் தனிமையான இடத்திற்கு படகில் ஏறிச்சென்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள், பட்டணத்திலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு கரையில் இறங்கியவுடன், அங்கே மக்களின் பெரிய கூட்டத்தைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் நோயுள்ளவர்களைச் குணமாக்கினார். மாலை வேளையானபோது, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “இது சற்று தூரமான ஒரு இடம். ஏற்கெனவே நேரமாகிவிட்டது. மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும். அவர்கள் கிராமங்களுக்குப் போய், அங்கே தங்களுக்கு வேண்டிய சாப்பாட்டை வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள். அதற்கு இயேசு, “அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். “இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன” என அவர்கள் சொன்னார்கள். “அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர் மக்களை புற்தரையில் உட்காரும்படிச் செய்தார். பின்பு அவர், அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. இவர்களைத் தவிர, பெண்களும் பிள்ளைகளுங்கூட இருந்தார்கள். பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில், தனக்கு முன்பாகவே சீடரை படகில் ஏறி மறுகரைக்குப் போகும்படி செய்தார். அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, இயேசு தனிமையாக மன்றாடுவதற்கென மலையின்மேல் ஏறினார். இரவு வேளையானபோது, அவர் அங்கே தனிமையாய் இருந்தார். ஆனால் சீடர்கள் சென்ற படகு, கரையை விட்டு மிகத் தொலைவில் போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால் படகு அலைக்கழிக்கப்பட்டது. அதிகாலை மூன்றாம்மணி நேரத்தில், இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடம் சென்றார். அவர் கடலின்மேல் நடப்பதை சீடர்கள் கண்டபோது, திகிலடைந்து, “அது பேய்!” என்று சொல்லி, பயத்துடன் சத்தமிட்டார்கள். உடனே இயேசு அவர்களிடம்: “தைரியமாய் இருங்கள்! இது நான்தான், பயப்படவேண்டாம்” என்றார். அதற்கு பேதுரு, “ஆண்டவரே, நீர்தான் என்றால், நானும் தண்ணீர்மேல் நடந்து உம்மிடம் வரும்படி சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “வா” என்றார். அப்பொழுது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின்மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான். ஆனால் அவன் காற்றைக் கண்டபோது பயமடைந்து மூழ்கத்தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான். உடனே இயேசு தமது கையை நீட்டி பேதுருவைப் பிடித்தார். “அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார். அவர்கள் படகில் ஏறியபோது காற்று அமர்ந்து போயிற்று. படகிற்குள் இருந்தவர்கள் அவரை வழிபட்டு, “உண்மையாகவே, நீர் இறைவனின் மகன்!” என்றார்கள். அவர்கள் மறுகரைக்குச் சென்று, கெனேசரேத்து என்னும் இடத்தில் கரை இறங்கினார்கள். அந்த இடத்து மக்கள், இயேசுவை அடையாளம் கண்டபோது, சுற்றுப்புறங்களுக்கு எல்லாம் செய்தி அனுப்பினார்கள். அவர்களோ, தங்களில் நோயாளிகளை எல்லாம் அவரிடம் கொண்டுவந்தார்கள். நோயாளிகள் இயேசுவின் மேலுடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அவர் அனுமதிக்க வேண்டுமென, அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.
மத்தேயு 14:13-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு அதைக்கேட்டு, அந்த இடத்தைவிட்டு, படகில் ஏறி, வனாந்திரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள். இயேசு வந்து, திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கினார். மாலைநேரமானபோது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்திரமான இடம், நேரமுமானது; மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அப்பொழுது, அவர் மக்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுத்தார்கள். பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள். இயேசு மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார். அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது. அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார். பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான். காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கும்போது: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். பின்பு, அவர்கள் கடலைக்கடந்து, கெனேசரேத்து நாட்டிற்கு வந்தார்கள். அந்த இடத்து மனிதர்கள் அவரை யார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர்கள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட எல்லோரும் குணமானார்கள்.
மத்தேயு 14:13-36 பரிசுத்த பைபிள் (TAERV)
யோவானுக்கு நேர்ந்ததைக் கேள்வியுற்ற இயேசு, ஒரு படகில் புறப்பட்டுச் சென்றார். யாருமற்ற ஒரு தனியிடத்திற்குத் தன்னந்தனியே சென்றார். இயேசு புறப்பட்டுச் சென்றதை மக்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்களும் தங்கள் நகரங்களை விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு சென்ற இடத்திற்கு அவர்கள் தரை வழியே சென்றனர். இயேசு அங்கு வந்த பொழுது, அங்கே ஏராளமான மக்களைக் கண்டார். அவர்களுக்காக வருத்தமுற்ற இயேசு, அங்கிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார். அன்று பிற்பகல், இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “மனிதர் யாரும் இங்கு வசிப்பதில்லை. மேலும் நேரமுமாகிவிட்டது. மக்களைத் திருப்பி அனுப்புங்கள். அப்பொழுதுதான் அவர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று உணவை வாங்க முடியும்” என்று சொன்னார்கள். இயேசு, “மக்கள் திரும்பிச் செல்லவேண்டியத் தேவையில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்” என்று பதிலளித்தார். அதற்குச் சீஷர்கள், “ஆனால், நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தானே உள்ளன” என்று பதில் சொன்னார்கள். “அப்பத்தையும் மீனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று இயேசு கூறினார். பிறகு, அங்கிருந்த மக்களை இயேசு புல்வெளியில் அமரச் சொன்னார். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கையிலெடுத்துக் கொண்டார். இயேசு வானத்தைப் பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களைச் சீஷர்களிடம் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் திருப்தியாக உண்டார்கள். மக்கள் உண்டது போக எஞ்சிய உணவைப் பன்னிரெண்டு கூடைகளில் நிரப்பினார்கள். அங்கு சுமார் ஐயாயிரம் ஆண்கள் உணவு உண்டனர். மேலும், பல பெண்களும் குழந்தைகளும் கூட உணவு உண்டனர். பிறகு இயேசு தமது சீஷர்களைப் படகில் ஏறச் சொன்னார். இயேசு அவர்களை ஏரியின் மறுகரைக்குப் போகச் சொன்னார். தாம் பின்னர் வருவதாக அவர்களிடம் கூறினார். மக்களிடம் விடை பெற்றுக்கொண்ட இயேசு குன்றின்மீது ஏறினார். தனியே பிரார்த்தனை செய்வதற்காக இயேசு அங்கு சென்றார். அந்தச் சமயம், படகு ஏற்கெனவே வெகு தொலைவு சென்றிருந்தது. படகு அலைகளினால் தொல்லைகளுக்கு உள்ளானது. படகு சென்ற திசைக்கு எதிராகக் காற்று வீசியது. அதிகாலை, மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை இயேசுவின் சீஷர்கள் படகிலேயே இருந்தனர். இயேசு தண்ணீரின் மேல் நடந்து அவர்களிடம் வந்தார். இயேசு தண்ணீரின் மேல் நடப்பதைக் கண்ட சீஷர்கள் பயந்து போனார்கள், “அது ஒரு ஆவிதான்” என்று அவர்கள் பயத்தில் அலறினார்கள். உடனே இயேசு அவர்களிடம், “கவலை கொள்ளாதீர்கள். நான்தான்! பயப்படாதீர்கள்” என்று கூறினார். அதற்குப் பேதுரு, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று சொன்னான். இயேசு அவனிடம், “வா, பேதுரு” என்று கூறினார். பின்னர், பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீரின் மேல் இயேசுவை நோக்கி நடந்தான். ஆனால், தண்ணீரின் மேல் நடந்து சென்றபொழுது பேதுரு காற்றடிப்பதையும் அலைகள் வீசுவதையும் கண்டான். பயந்து போன பேதுரு, நீரில் மூழ்க ஆரம்பித்தான். உடனே பேதுரு, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று அலறினான். உடனே இயேசு தமது கையால் பேதுருவைப் பற்றிக்கொண்டார். இயேசு அவனிடம், “உன் விசுவாசம் சிறியது. நீ ஏன் சந்தேகம் கொண்டாய்?” என்று சொன்னார். பேதுருவும் இயேசுவும் படகில் ஏறியதும் காற்று அமைதியடைந்தது. அதன் பிறகு படகிலிருந்த சீஷர்கள் இயேசுவை வணங்கி, “உண்மையிலேயே நீர் தேவகுமாரன்தான்” என்று சொன்னார்கள். அவர்கள் ஏரியைக் கடந்து, கெனசெரேத்து என்ற இடத்தை அடைந்தார்கள். அங்கிருந்த மக்கள் இயேசுவைக் கண்டனர். அவர்கள் அவர் யார் என்பதை அறிந்திருந்தனர். எனவே, அவர்கள் அப்பிரதேசத்தைச் சுற்றியிருந்த மற்றவர்களிடம் இயேசு வந்திருப்பதைக் கூறினார்கள். நோயாளிகள் அனைவரையும் இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவரது மேலாடையைத் தொடுவதற்கு மட்டுமாவது அனுமதித்து குணம் பெறத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவிடம் மக்கள் கெஞ்சிக் கேட்டனர். இயேசுவின் மேலாடையைத் தொட்ட நோயாளிகள் அனைவரும் குணமடைந்தனர்.