மத்தேயு 14:13-21

மத்தேயு 14:13-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு நடந்தவற்றைக் கேள்விப்பட்டபோது, யாருக்கும் தெரியாமல் தனிமையான இடத்திற்கு படகில் ஏறிச்சென்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள், பட்டணத்திலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு கரையில் இறங்கியவுடன், அங்கே மக்களின் பெரிய கூட்டத்தைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் நோயுள்ளவர்களைச் குணமாக்கினார். மாலை வேளையானபோது, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “இது சற்று தூரமான ஒரு இடம். ஏற்கெனவே நேரமாகிவிட்டது. மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும். அவர்கள் கிராமங்களுக்குப் போய், அங்கே தங்களுக்கு வேண்டிய சாப்பாட்டை வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள். அதற்கு இயேசு, “அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். “இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன” என அவர்கள் சொன்னார்கள். “அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர் மக்களை புற்தரையில் உட்காரும்படிச் செய்தார். பின்பு அவர், அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. இவர்களைத் தவிர, பெண்களும் பிள்ளைகளுங்கூட இருந்தார்கள்.

மத்தேயு 14:13-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு அதைக்கேட்டு, அந்த இடத்தைவிட்டு, படகில் ஏறி, வனாந்திரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள். இயேசு வந்து, திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கினார். மாலைநேரமானபோது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்திரமான இடம், நேரமுமானது; மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அப்பொழுது, அவர் மக்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுத்தார்கள். பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.

மத்தேயு 14:13-21 பரிசுத்த பைபிள் (TAERV)

யோவானுக்கு நேர்ந்ததைக் கேள்வியுற்ற இயேசு, ஒரு படகில் புறப்பட்டுச் சென்றார். யாருமற்ற ஒரு தனியிடத்திற்குத் தன்னந்தனியே சென்றார். இயேசு புறப்பட்டுச் சென்றதை மக்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்களும் தங்கள் நகரங்களை விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு சென்ற இடத்திற்கு அவர்கள் தரை வழியே சென்றனர். இயேசு அங்கு வந்த பொழுது, அங்கே ஏராளமான மக்களைக் கண்டார். அவர்களுக்காக வருத்தமுற்ற இயேசு, அங்கிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார். அன்று பிற்பகல், இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “மனிதர் யாரும் இங்கு வசிப்பதில்லை. மேலும் நேரமுமாகிவிட்டது. மக்களைத் திருப்பி அனுப்புங்கள். அப்பொழுதுதான் அவர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று உணவை வாங்க முடியும்” என்று சொன்னார்கள். இயேசு, “மக்கள் திரும்பிச் செல்லவேண்டியத் தேவையில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்” என்று பதிலளித்தார். அதற்குச் சீஷர்கள், “ஆனால், நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தானே உள்ளன” என்று பதில் சொன்னார்கள். “அப்பத்தையும் மீனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று இயேசு கூறினார். பிறகு, அங்கிருந்த மக்களை இயேசு புல்வெளியில் அமரச் சொன்னார். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கையிலெடுத்துக் கொண்டார். இயேசு வானத்தைப் பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களைச் சீஷர்களிடம் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் திருப்தியாக உண்டார்கள். மக்கள் உண்டது போக எஞ்சிய உணவைப் பன்னிரெண்டு கூடைகளில் நிரப்பினார்கள். அங்கு சுமார் ஐயாயிரம் ஆண்கள் உணவு உண்டனர். மேலும், பல பெண்களும் குழந்தைகளும் கூட உணவு உண்டனர்.

மத்தேயு 14:13-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள். இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.