மத்தேயு 14:1-12

மத்தேயு 14:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள், ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு, ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான். அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள். அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.

மத்தேயு 14:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அக்காலத்திலே காற்பங்கு அரசனாகிய ஏரோது இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். ஏரோது தனது வேலைக்காரர்களிடம், “அவன் யோவான் ஸ்நானகனே; அவன் உயிரோடு திரும்பவும் எழுந்துவிட்டான்! அதனாலேயே, அவனிடத்தில் அற்புத வல்லமைகள் செயல்படுகிறது” என்று சொன்னான். தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் நிமித்தமே, ஏரோது யோவானைக் கைதுசெய்து, அவனைக் கட்டி, சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம்: “அவளை நீ வைத்திருப்பது சட்டத்திற்கு மாறானது” என்று சொல்லியிருந்தான். ஏரோது யோவானைக் கொலைசெய்ய விரும்பினான். ஆனால் மக்களுக்குப் பயந்திருந்தான். ஏனெனில் மக்கள் அவனை இறைவாக்கினன் என்று எண்ணினார்கள். ஏரோதின் பிறந்தநாள் அன்று, ஏரோதியாளின் மகள் அவர்களுக்காக நடனமாடி, ஏரோதை மிகவும் மகிழ்வித்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அதை அவளுக்குத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அவள் தனது தாயின் தூண்டுதலினால், “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள்” என்று கேட்டாள். அரசன் மிகவும் துக்கமடைந்தான். ஆனால் தனது ஆணையின் நிமித்தமும், தனது விருந்தினர்களின் நிமித்தமும், அவன் அவளுடைய வேண்டுதலை நிறைவேற்றும்படி உத்தரவிட்டான். அவ்வாறே, சிறையில் யோவானின் தலைவெட்டப்பட்டது. அவனுடைய தலை ஒரு தட்டில் வைக்கப்பட்டு, அந்தச் சிறுமியிடம் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அவள் அதைத் தன் தாயிடம் கொண்டுபோனாள். அப்பொழுது யோவானின் சீடர்கள் வந்து, அவனது உடலை எடுத்து அடக்கம்பண்ணினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள்.

மத்தேயு 14:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு, தன் வேலைக்காரர்களைப் பார்த்து: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான்; ஆகவே, இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத்திருந்தான். ஏனென்றால்: நீர் அவளை உன் மனைவியாக வைத்துக்கொள்வது நியாயமில்லை என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், மக்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். அப்படியிருக்க, ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். அதினிமித்தம் ஏரோது: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அவள் தன் தாயினால் சொல்லப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். ராஜா துக்கமடைந்தான். ஆனாலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு, ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான். அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள். அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து, பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள்.

மத்தேயு 14:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது இயேசுவைப்பற்றி மக்கள் பேசியவைகளைக் கேள்வியுற்றான். எனவே, ஏரோது தன் வேலைக்காரர்களிடம், “இந்த மனிதனே உண்மையில் யோவான் ஸ்நானகன். மரணத்திலிருந்து அவன் மீண்டும் எழுந்திருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவனால் இத்தகைய அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்று கூறினான். இதற்கு முன்னர், ஏரோது யோவானைக் கைது செய்திருந்தான். ஏரோது யோவானைச் சங்கிலியால் கட்டி சிறையிலிட்டிருந்தான். ஏரோதியாளின் நிமித்தம் யோவானை ஏரோது கைது செய்திருந்தான். ஏரோதுவின் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள். “நீ ஏரோதியாளை உன்னோடு வைத்திருப்பது சரியல்ல” என்று யோவான் ஏரோதுவிடம் கூறியதால் யோவானை ஏரோது கைது செய்தான். யோவான் தீர்க்கதரிசியென மக்கள் நம்பியிருந்தார்கள். எனவே, யோவானைக் கொல்ல விரும்பிய ஏரோது பயந்தான். ஏரோதின் பிறந்த நாளன்று, ஏரோதியாளின் குமாரத்தி ஏரோதுவையும் அவன் நண்பர்களையும் மகிழ்விக்க நடனமாடினாள். அவள் நடனத்தால் ஏரோது மிக மகிழ்ந்தான். எனவே, அவள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்தான். தன் குமாரத்தி எதைக் கேட்கவேண்டும் என்பதை ஏரோதியாள் முன்னமே அறிவுறுத்தியிருந்தாள். ஆகவே, அவள் ஏரோதுவிடம், “எனக்கு யோவான்ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தாருங்கள்” என்று கூறினாள். இதனால் மன்னன் ஏரோது மிகுந்த துக்கம் கொண்டான். ஆனால் தன் குமாரத்தி எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்திருந்தான். ஏரோதுவுடன் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் அவன் வாக்குறுதியைக் கேட்டிருந்தார்கள். எனவே, அவள் விரும்பியதை நிறைவேற்ற ஏரோது கட்டளையிட்டான். சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டுவதற்கு அவன் ஆட்களை அனுப்பினான். அவர்கள் யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து அதை அவளிடம் கொடுத்தனர். பின்னர், அப்பெண் அத்தலையைத் தன் தாய் ஏரோதியாளிடம் எடுத்துச் சென்றாள். யோவானின் சீஷர்கள் அவனது உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். பின், அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.