மத்தேயு 13:1-58

மத்தேயு 13:1-58 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள். அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்து, உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார். இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள். அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான். மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக்கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான். அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார். பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார். இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு, தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.

மத்தேயு 13:1-58 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதே நாளில், இயேசு வீட்டைவிட்டு வெளியே போய், கடலின் அருகே உட்கார்ந்திருந்தார். அப்பொழுது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடிவந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள். இயேசு அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகள் மூலம் சொன்னார். அவைகளில் இது ஒன்றாகும்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும் வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின. வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை நெருக்கிப்போட்டன. ஆனால் வேறுசில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன. கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார். அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலம் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக உரைத்தது: “பரலோக அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கோ அது கொடுக்கப்படவில்லை. இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும். அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். இதனாலேயே, அவர்களுடன் நான் உவமைகள் மூலம் பேசுகிறேன்: “ ‘அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், அவர்கள் கேட்டும் கேளாதவர்களாகவும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்.’ ஏசாயாவின் இறைவாக்கு இவ்வாறு அவர்களில் நிறைவேறியது: “ ‘நீங்கள் எப்பொழுதும் காதாரக் கேட்டும் ஒருபோதும் உணரமாட்டீர்கள்; நீங்கள் எப்பொழுதும் கண்ணாரக் கண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள். ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்; நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’ உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை காண்கின்றன; உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், நீதிமான்களும் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை. “ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்: யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும். கற்பாறையான இடங்களில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருப்பார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்துபோவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டு அதை விளங்கிக்கொள்கிறவர்கள். இவர்கள் நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுப்பார்கள்.” இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது. எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான். கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன. “வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள். “அதற்கு எஜமான், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான். “வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள். “அதற்கு எஜமான், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கிவிடக் கூடும். அறுவடைவரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்பொழுது நான் அறுவடை செய்கிறவர்களிடம்: முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதற்குப் பின்பு கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்.’ ” இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒருவன் தனது நிலத்தில் விதைத்த கடுகுவிதையைப் போன்றது. அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது, தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார். இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு புளிப்புச்சத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார். இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; இயேசு அவர்களுக்கு உவமைகள் இல்லாமல் எதையுமே பேசவில்லை. இறைவாக்கினன் மூலம் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: “நான் உவமைக் கதைகளால் என் வாயைத் திறப்பேன். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.” அதற்குப் பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லும்” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மானிடமகனாகிய நானே. வயல் என்பது உலகம், நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள். களைகளோ தீயவனின் பிள்ளைகள். அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். “களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். மானிடமகனாகிய நான் எனது தூதரை அனுப்புவேன். அவர்கள் போய் எனது அரசில் இருக்கிற பாவத்திற்கு காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கிறவர்கள் எல்லோரையும் பிடுங்கிப் போடுவார்கள். இறைத்தூதர் அவர்களை எரியும் சூளைக்குள் எறிந்துவிடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும். அப்பொழுது நீதிமான்களோ தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப்போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். “பரலோக அரசு, ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒருவன் கண்டுபிடித்தபோது, அவன் அதைத் திரும்பவும் மறைத்து வைத்துவிட்டு, பின்பு போய் தனது மகிழ்ச்சியின் நிமித்தம், தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அந்த வயலை வாங்குகிறான். “மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது. பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான். “மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லா விதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. வலை நிரம்பியபோது, மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் உட்கார்ந்து, நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள். கெட்டவற்றையோ எறிந்துவிட்டார்கள். இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து அவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்துபோடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும். “இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக்கொண்டீர்களா?” என்று இயேசு சீடர்களை கேட்டார். “ஆம்” என அவர்கள் பதிலளித்தார்கள். “ஆகவே, பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு மோசேயின் சட்ட ஆசிரியனும், தனது பொக்கிஷ அறையிலிருந்து புதியவைகளையும், பழையவைகளை வெளியே கொண்டுவருகின்ற ஒரு வீட்டின் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்றார். இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், அங்கிருந்து சென்றார். அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார், அவர்கள் வியப்படைந்தார்கள். “இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும், அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?” என்று கேட்டார்கள். அவர்கள், “இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா? இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி, அவரைக்குறித்துக் கோபமடைந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது சொந்த வீட்டிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார். அவர்களுடைய விசுவாசக் குறைவின் நிமித்தம், இயேசு அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.

மத்தேயு 13:1-58 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள். அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன. சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன. வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயின. சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது. சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன, சில விதைகள் நூறாகவும், சில விதைகள் அறுபதாகவும், சில விதைகள் முப்பதாகவும் பலன் தந்தன. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார். அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த மக்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாகக் கேட்டு, தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே. உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும், உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது. மனிதர்கள் தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள்: நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார். இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை. என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும். அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான். மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான். அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது. அது நிறைந்தபோது, மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார். பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இப்படி இருக்கிறபடியால், பரலோகராஜ்யத்திற்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபண்டிதன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான் என்றார். இயேசு இந்த உவமைகளைச் சொல்லிமுடித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா? இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார். அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.

மத்தேயு 13:1-58 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில் சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார். ஏராளமான மக்கள் அவரைச் சூழ்ந்தனர். எனவே இயேசு ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் ஏரிக்கரையோரம் அமர்ந்தார்கள். பிறகு உவமைகளின் மூலமாக இயேசு மக்களுக்குப் பலவற்றையும் போதித்தார். இயேசு, “ஒரு விவசாயி விதைகளை விதைக்கப் போனான். அவன் விதைகளைத் தூவியபோது, சில விதைகள் பாதையோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவை யாவற்றையும் தின்றுவிட்டன. சில விதைகள் பாறைகளின் மேல் விழுந்தன. அங்கு போதுமான அளவிற்கு மண் இல்லை. எனவே, விதைகள் வேகமாக முளைத்தன. ஆனால் சூரியன் உதித்ததும், அவை கருகிப்போயின. ஆழமான வேர்கள் இல்லாமையால் அச்செடிகள் காய்ந்தன. இன்னும் சில விதைகள் முட்புதர்களுக்கிடையில் விழுந்தன. களைகள் முளைத்து அந்த விதைகளின் செடிகள் வளராதவாறு தடுத்தன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அந்நிலத்தில், விதைகள் முளைத்து நன்கு வளர்ந்தன. சில செடிகள் நூறு மடங்கு தானியங்களைக் கொடுத்தன. சில அறுபது மடங்கும் சில முப்பது மடங்கும் தானியங்களைக் கொடுத்தன. நான் சொல்வதைக் கேட்கிறவர்களே, கவனியுங்கள்” என்று இயேசு கூறினார். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “மக்களுக்குப் போதனை செய்ய நீங்கள் ஏன் இந்த உவமைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டனர். இயேசு மறுமொழியாக, “பரலோக இராஜ்யத்தின் இரகசியங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை மற்றவர்கள் அறிய முடியாது. சிறிது புரிந்தவன் மேலும் விளக்கம் பெறுவான். தேவையானதை விடவும் அவனுக்கு அதிகம் கிடைக்கும். அதிகம் புரியாதவன், தான் அறிந்ததையும் இழப்பான். அதனால் தான் நான் மக்களுக்கு உவமைகளின் மூலம் போதனை செய்கிறேன். மக்கள் பார்க்கிறார்கள்; கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பார்ப்பதுமில்லை, புரிந்துகொள்வதுமில்லை. எனவே ஏசாயா தீர்க்கதரிசி இவர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு சொன்னது உண்மை என்பதை இம்மக்கள் காட்டுகிறார்கள்: “‘மக்களே! நீங்கள் கவனித்து கேட்பீர்கள். ஆனாலும் புரிந்துகொள்ளமாட்டீர்கள். மக்களே! நீங்கள் நோக்கி பார்ப்பீர்கள். ஆனாலும், நீங்கள் பார்ப்பதைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள். ஆம், இறுகியிருக்கிறது இம்மக்களின் மனம். காதுகளிருந்தும் கேட்பதில்லை. உண்மையைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். தங்கள் காதால் கேளாதிருக்கவும் தங்கள் கண்ணால் பார்க்காதிருக்கவும் தங்கள் மனதால் அறியாதிருக்கவும் இவ்வாறு நடந்துள்ளது. குணம் பெற என்னிடம் வராதிருக்குமாறும் இவ்வாறு நடந்துள்ளது.’ ஆனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கண்களால் பார்ப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். காதால் கேட்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நான் உண்மையைச் சொல்லுகிறேன், பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் நீங்கள் இப்பொழுது காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் காணவில்லை. நீங்கள் இப்பொழுது கேட்பவற்றைக் கேட்பதற்குப் பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் கேட்கவில்லை. “எனவே, விவசாயியைப் பற்றிய உவமையின் பொருளைக் கவனியுங்கள்: “சாலையின் ஓரம் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது பரலோக இராஜ்யத்தைப் பற்றிக் கேள்வியுற்றும் அதைப் புரிந்துகொள்ளாத மனிதனைக் குறிக்கிறது. அவனது மனதில் விதைக்கப்பட்டவற்றைச் சாத்தான் கவர்ந்துகொள்கிறான். “பாறைகளின் மேல் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டு உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அவன் போதனைகளைத் தன் மனதில் ஆழமாகப் பதிய வைத்துத் கொள்வதில்லை. அவன் போதனைகளைத் தன் மனதில் குறைந்த காலத்திற்கே வைத்திருக்கிறான். போதனைகளை ஏற்றுக்கொண்டதினால் உபத்திரவமோ, துன்பமோ ஏற்படும்பொழுது, அவன் விரைவாக அதை விட்டு விடுகிறான். “முட்புதருக்கிடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையினால் போதனைகள் தன்னுள் நிலையாதிருக்கச் செய்பவனைக் குறிக்கிறது. எனவே, போதனைகள் அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை. “ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அவ்விதை போதனைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் நூறு மடங்கும் சில சமயம் அறுபது மடங்கும் சில சமயம் முப்பது மடங்கும் பலன் தருகிறான்” என்றார். பிறகு, இயேசு மற்றொரு உவமையின் மூலம் போதனை செய்தார், “பரலோக இராஜ்யம் தனது வயலில் நல்ல விதையை விதைத்த மனிதனைப் போன்றது. அன்றைக்கு இரவில், அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவனது பகைவன் வந்து கோதுமை விதைகளுக்கிடையில் களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பிறகு, கோதுமை விதைகள் முளைவிட்டன. செடிகள் முளைத்தன. ஆனால், அதே சமயம் களைகளும் முளைத்தன. அவனது வேலைக்காரர்கள் அவனிடம் சென்று, ‘நல்ல விதைகளையே நீங்கள் உங்கள் வயலில் விதைத்தீர்கள். ஆனால், களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள். “அதற்கு அவன், ‘ஒரு பகைவன் களைகளை விதைத்துவிட்டான்’ என்றான். “வேலைக்காரர்கள், ‘நாங்கள் களைகளை நீக்க வேண்டுமா?’ என்று கேட்டார்கள். “அதற்கு அந்த விவசாயி, ‘தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் களையெடுக்கும்பொழுது கோதுமை செடிகளையும் பிடுங்குவீர்கள். களைகளும் கோதுமையும் அறுவடைக் காலம்வரையிலும் ஒன்றாக வளரட்டும். அறுவடையின்பொழுது அறுவடை செய்பவர்களிடம் நான், முதலில் களைகளைத் தீயிலிடுவதற்காகச் சேர்த்துக் கட்டுங்கள், பின்னர் கோதுமையைச் சேகரித்து என் களஞ்சியத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று சொல்வேன்’ எனப் பதில் சொன்னான்” என்று இயேசு கூறினார். பிறகு இயேசு மக்களுக்கு வேறொரு உவமையைக் கூறினார், “பரலோக இராஜ்யமானது கடுகைப் போன்றது. ஒருவன் தன் வயலில் கடுகு விதையை விதைக்கிறான். விதைகளிலெல்லாம் மிகச் சிறியது கடுகு. ஆனால், அது முளைக்கும்பொழுது மிகப் பெரிய செடிகளில் ஒன்றாக வளர்கிறது. அது மரமாக வளர்ந்து பறவைகள் அதன் கிளைகளில் கூடு கட்டுகின்றன” என்றார். இயேசு மக்களுக்கு மேலும் ஒரு உவமையைக் கூறினார், “பரலோக இராஜ்யமானது ஒரு பெண் மாவுடன் கலக்கும் புளித்த பழைய மாவைப் போன்றது. புளித்த மாவானது அனைத்து மாவையும் புளிக்க வைக்கிறது” என்றார். இவை அனைத்தையும் மக்களுக்குப் போதிப்பதற்காக இயேசு உவமைகளைக் கையாண்டார். எப்பொழுதும் மக்களுக்குப் போதனை செய்ய இயேசு உவமைகளையேக் கையாண்டார். இது தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னபடியே நடந்தது, “நான் உவமைகளின் வழியாகப் பேசுவேன், உலகம் வந்தது முதல் இரகசியமாயுள்ளவற்றை நான் சொல்வேன்” இயேசு மக்களை விட்டு வீட்டிற்குள் சென்றார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்து, “வயலில் முளைத்த களையின் உவமை கூறும் உண்மைப் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டனர். இயேசு மறுமொழியாக, “நல்ல விதைகளை வயலில் விதைத்தவன் மனித குமாரன் தான். இவ்வுலகமே வயல். நல்ல விதைகள் பரலோகத்திற்குரிய நல்ல பிள்ளைகள். களைகள் பிசாசின் பிள்ளைகள். பிசாசே களைகளை விதைத்தப் பகைவன். உலகின் முடிவுக் காலமே அறுவடைக் காலம். தேவதூதர்களே அறுவடை செய்பவர்கள். “களைகள் பிடுங்கப்பட்டு தீயிலிடப்படுகின்றன. உலகின் முடிவுக் காலத்திலும் அப்படியே இருக்கும். மனித குமாரன் தனது தேவதூதர்களை அனுப்புவார். அவரது தூதர்கள் பாவம் செய்கிறவர்களைக் கண்டு பிடிப்பார்கள். அத்தூதர்கள் அவர்களை மனிதகுமாரனின் இராஜ்யத்திலிருந்து வெளியேற்றுவார்கள். அவர்களை அத்தேவ தூதர்கள் சூளையின் நெருப்பில் தள்ளுவார்கள். அங்கு அவர்கள் வேதனையால் கூக்குரலிடுவார்கள்; தங்கள் பற்களைக் கடிப்பார்கள். நல்ல மனிதர்கள் சூரியனைப்போல ஒளி வீசுவார்கள். அவர்கள் பிதாவின் அரசாட்சியில் இருப்பார்கள். என் வார்த்தைகளைக் கேட்பவர்களே, இதை கவனித்துக்கொள்ளுங்கள். “பரலோக இராஜ்யம் புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தைப் போன்றது. புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தை ஒருவன் ஒருநாள் கண்டு பிடித்தான். புதையல் கிடைத்ததால் அவன் மிக மகிழ்ந்தான். மீண்டும் அவன் அச்செல்வத்தைப் புதைத்து வைத்து அந்த நிலத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றான். “மேலும், பரலோக இராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடும் வியாபாரியைப் போன்றது. ஒரு நாள் அவ்வியாபாரி மிகச் சிறந்த முத்து ஒன்றைக் கண்டான். அம்முத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த அனைத்தையும் அந்த வியாபாரி விற்றான். “பரலோக இராஜ்யம் ஏரியில் விரிக்கப்பட்ட வலையைப் போன்றது, ஏரியில் விரிக்கப்பட்ட ஒரு வலை, பலவகையான மீன்களைப் பிடித்தது. நிரம்பிய வலையை, மீனவர்கள் கரைக்கு இழுத்தனர். நல்ல மீன்களை மீனவர்கள் ஒரு கூடையிலிட்டனர். பின், தகுதியற்ற மீன்களைத் தூர எறிந்தனர். இவ்வுலகின் முடிவுக் காலத்திலும் அவ்வாறே நடக்கும். தேவதூதர்கள் வந்து நல்ல மனிதர்களைத் தீயவர்களிடமிருந்து பிரிப்பார்கள். அந்தத் தேவதூதர்கள் தீயவர்களைச் சூளையின் நெருப்பில் எறிவார்கள் அங்கு அவர்கள் வலியினால் கூக்குரலிட்டுப் பற்களைக் கடிப்பார்கள்.” பிறகு, இயேசு தம் சீஷர்களிடம், “உங்களுக்கு இவைகள் புரிகின்றனவா?” என்று கேட்டார். சீஷர்கள், “ஆம், எங்களுக்குப் புரிகின்றன” என்று பதிலுரைத்தனர். பின்பு இயேசு தம் சீஷர்களிடம், “பரலோக இராஜ்யத்தைப்பற்றி அறிந்த வேதபாரகர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீட்டின் சொந்தக்காரனைப் போன்றவர்கள். வீட்டின் சொந்தக்காரன் தன் வீட்டில் புதியதும் பழையதுமான பொருட்களைச் சேமித்து வைத்திருக்கிறான். அவன் புதியதும் பழையதுமான பொருட்களைக் கொண்டு வருகிறான்” என்றார். இந்த உவமைகளைக் கூறி முடித்த இயேசு, அவ்விடத்தை விட்டு அகன்று, தாம் வளர்ந்த நகருக்குச் சென்றார். ஜெப ஆலயங்களில் இயேசு மக்களுக்குப் போதித்தார். மக்கள் வியப்புற்று, “இம்மனிதன் இந்த ஞானத்தையும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்? தச்சுத் தொழிலாளியின் குமாரன்தானே இவன். இவன் தாய் மரியாள். யாக்கோபு, யோசே, சீமோன் மற்றும் யூதா ஆகியோர் இவன் சகோதரர்கள். இவனது எல்லா சகோதரிகளும் நம்முடன் உள்ளார்கள். அப்படியிருந்தும், இந்த ஞானத்தையும் அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமையையும் இம்மனிதன் எங்கிருந்து பெற்றானோ?” என்று பேசிக்கொண்டார்கள். அது மட்டுமின்றி, இயேசுவை ஏற்றுக்கொள்ள மக்கள் மறுத்தனர். “மற்றவர்கள் ஒரு தீர்க்கதரிசிக்கு மதிப்பு கொடுக்கிறார்கள். ஆனால், அத்தீர்க்கதரிசியின் சொந்த நகரத்து மக்களே அவனுக்கு மதிப்பு கொடுக்க மறுக்கிறார்கள்” என்று இயேசு அம்மக்களுக்குச் சொன்னார். அம்மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைக்கவில்லை. எனவே, இயேசு மேலும் பல அற்புதங்களை அங்கு நடத்தவில்லை.