மத்தேயு 13:1-32

மத்தேயு 13:1-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதே நாளில், இயேசு வீட்டைவிட்டு வெளியே போய், கடலின் அருகே உட்கார்ந்திருந்தார். அப்பொழுது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடிவந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள். இயேசு அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகள் மூலம் சொன்னார். அவைகளில் இது ஒன்றாகும்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும் வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின. வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை நெருக்கிப்போட்டன. ஆனால் வேறுசில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன. கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார். அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலம் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக உரைத்தது: “பரலோக அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கோ அது கொடுக்கப்படவில்லை. இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும். அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். இதனாலேயே, அவர்களுடன் நான் உவமைகள் மூலம் பேசுகிறேன்: “ ‘அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், அவர்கள் கேட்டும் கேளாதவர்களாகவும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்.’ ஏசாயாவின் இறைவாக்கு இவ்வாறு அவர்களில் நிறைவேறியது: “ ‘நீங்கள் எப்பொழுதும் காதாரக் கேட்டும் ஒருபோதும் உணரமாட்டீர்கள்; நீங்கள் எப்பொழுதும் கண்ணாரக் கண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள். ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்; நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’ உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை காண்கின்றன; உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், நீதிமான்களும் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை. “ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்: யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும். கற்பாறையான இடங்களில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருப்பார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்துபோவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டு அதை விளங்கிக்கொள்கிறவர்கள். இவர்கள் நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுப்பார்கள்.” இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது. எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான். கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன. “வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள். “அதற்கு எஜமான், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான். “வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள். “அதற்கு எஜமான், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கிவிடக் கூடும். அறுவடைவரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்பொழுது நான் அறுவடை செய்கிறவர்களிடம்: முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதற்குப் பின்பு கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்.’ ” இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒருவன் தனது நிலத்தில் விதைத்த கடுகுவிதையைப் போன்றது. அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது, தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார்.

மத்தேயு 13:1-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள். அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன. சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன. வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயின. சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது. சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன, சில விதைகள் நூறாகவும், சில விதைகள் அறுபதாகவும், சில விதைகள் முப்பதாகவும் பலன் தந்தன. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார். அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த மக்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாகக் கேட்டு, தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே. உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும், உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது. மனிதர்கள் தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள்: நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.

மத்தேயு 13:1-32 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில் சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார். ஏராளமான மக்கள் அவரைச் சூழ்ந்தனர். எனவே இயேசு ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் ஏரிக்கரையோரம் அமர்ந்தார்கள். பிறகு உவமைகளின் மூலமாக இயேசு மக்களுக்குப் பலவற்றையும் போதித்தார். இயேசு, “ஒரு விவசாயி விதைகளை விதைக்கப் போனான். அவன் விதைகளைத் தூவியபோது, சில விதைகள் பாதையோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவை யாவற்றையும் தின்றுவிட்டன. சில விதைகள் பாறைகளின் மேல் விழுந்தன. அங்கு போதுமான அளவிற்கு மண் இல்லை. எனவே, விதைகள் வேகமாக முளைத்தன. ஆனால் சூரியன் உதித்ததும், அவை கருகிப்போயின. ஆழமான வேர்கள் இல்லாமையால் அச்செடிகள் காய்ந்தன. இன்னும் சில விதைகள் முட்புதர்களுக்கிடையில் விழுந்தன. களைகள் முளைத்து அந்த விதைகளின் செடிகள் வளராதவாறு தடுத்தன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அந்நிலத்தில், விதைகள் முளைத்து நன்கு வளர்ந்தன. சில செடிகள் நூறு மடங்கு தானியங்களைக் கொடுத்தன. சில அறுபது மடங்கும் சில முப்பது மடங்கும் தானியங்களைக் கொடுத்தன. நான் சொல்வதைக் கேட்கிறவர்களே, கவனியுங்கள்” என்று இயேசு கூறினார். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “மக்களுக்குப் போதனை செய்ய நீங்கள் ஏன் இந்த உவமைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டனர். இயேசு மறுமொழியாக, “பரலோக இராஜ்யத்தின் இரகசியங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை மற்றவர்கள் அறிய முடியாது. சிறிது புரிந்தவன் மேலும் விளக்கம் பெறுவான். தேவையானதை விடவும் அவனுக்கு அதிகம் கிடைக்கும். அதிகம் புரியாதவன், தான் அறிந்ததையும் இழப்பான். அதனால் தான் நான் மக்களுக்கு உவமைகளின் மூலம் போதனை செய்கிறேன். மக்கள் பார்க்கிறார்கள்; கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பார்ப்பதுமில்லை, புரிந்துகொள்வதுமில்லை. எனவே ஏசாயா தீர்க்கதரிசி இவர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு சொன்னது உண்மை என்பதை இம்மக்கள் காட்டுகிறார்கள்: “‘மக்களே! நீங்கள் கவனித்து கேட்பீர்கள். ஆனாலும் புரிந்துகொள்ளமாட்டீர்கள். மக்களே! நீங்கள் நோக்கி பார்ப்பீர்கள். ஆனாலும், நீங்கள் பார்ப்பதைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள். ஆம், இறுகியிருக்கிறது இம்மக்களின் மனம். காதுகளிருந்தும் கேட்பதில்லை. உண்மையைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். தங்கள் காதால் கேளாதிருக்கவும் தங்கள் கண்ணால் பார்க்காதிருக்கவும் தங்கள் மனதால் அறியாதிருக்கவும் இவ்வாறு நடந்துள்ளது. குணம் பெற என்னிடம் வராதிருக்குமாறும் இவ்வாறு நடந்துள்ளது.’ ஆனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கண்களால் பார்ப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். காதால் கேட்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நான் உண்மையைச் சொல்லுகிறேன், பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் நீங்கள் இப்பொழுது காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் காணவில்லை. நீங்கள் இப்பொழுது கேட்பவற்றைக் கேட்பதற்குப் பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் கேட்கவில்லை. “எனவே, விவசாயியைப் பற்றிய உவமையின் பொருளைக் கவனியுங்கள்: “சாலையின் ஓரம் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது பரலோக இராஜ்யத்தைப் பற்றிக் கேள்வியுற்றும் அதைப் புரிந்துகொள்ளாத மனிதனைக் குறிக்கிறது. அவனது மனதில் விதைக்கப்பட்டவற்றைச் சாத்தான் கவர்ந்துகொள்கிறான். “பாறைகளின் மேல் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டு உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அவன் போதனைகளைத் தன் மனதில் ஆழமாகப் பதிய வைத்துத் கொள்வதில்லை. அவன் போதனைகளைத் தன் மனதில் குறைந்த காலத்திற்கே வைத்திருக்கிறான். போதனைகளை ஏற்றுக்கொண்டதினால் உபத்திரவமோ, துன்பமோ ஏற்படும்பொழுது, அவன் விரைவாக அதை விட்டு விடுகிறான். “முட்புதருக்கிடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையினால் போதனைகள் தன்னுள் நிலையாதிருக்கச் செய்பவனைக் குறிக்கிறது. எனவே, போதனைகள் அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை. “ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அவ்விதை போதனைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் நூறு மடங்கும் சில சமயம் அறுபது மடங்கும் சில சமயம் முப்பது மடங்கும் பலன் தருகிறான்” என்றார். பிறகு, இயேசு மற்றொரு உவமையின் மூலம் போதனை செய்தார், “பரலோக இராஜ்யம் தனது வயலில் நல்ல விதையை விதைத்த மனிதனைப் போன்றது. அன்றைக்கு இரவில், அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவனது பகைவன் வந்து கோதுமை விதைகளுக்கிடையில் களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பிறகு, கோதுமை விதைகள் முளைவிட்டன. செடிகள் முளைத்தன. ஆனால், அதே சமயம் களைகளும் முளைத்தன. அவனது வேலைக்காரர்கள் அவனிடம் சென்று, ‘நல்ல விதைகளையே நீங்கள் உங்கள் வயலில் விதைத்தீர்கள். ஆனால், களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள். “அதற்கு அவன், ‘ஒரு பகைவன் களைகளை விதைத்துவிட்டான்’ என்றான். “வேலைக்காரர்கள், ‘நாங்கள் களைகளை நீக்க வேண்டுமா?’ என்று கேட்டார்கள். “அதற்கு அந்த விவசாயி, ‘தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் களையெடுக்கும்பொழுது கோதுமை செடிகளையும் பிடுங்குவீர்கள். களைகளும் கோதுமையும் அறுவடைக் காலம்வரையிலும் ஒன்றாக வளரட்டும். அறுவடையின்பொழுது அறுவடை செய்பவர்களிடம் நான், முதலில் களைகளைத் தீயிலிடுவதற்காகச் சேர்த்துக் கட்டுங்கள், பின்னர் கோதுமையைச் சேகரித்து என் களஞ்சியத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று சொல்வேன்’ எனப் பதில் சொன்னான்” என்று இயேசு கூறினார். பிறகு இயேசு மக்களுக்கு வேறொரு உவமையைக் கூறினார், “பரலோக இராஜ்யமானது கடுகைப் போன்றது. ஒருவன் தன் வயலில் கடுகு விதையை விதைக்கிறான். விதைகளிலெல்லாம் மிகச் சிறியது கடுகு. ஆனால், அது முளைக்கும்பொழுது மிகப் பெரிய செடிகளில் ஒன்றாக வளர்கிறது. அது மரமாக வளர்ந்து பறவைகள் அதன் கிளைகளில் கூடு கட்டுகின்றன” என்றார்.

மத்தேயு 13:1-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள். அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்து, உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.