மத்தேயு 11:20-24
மத்தேயு 11:20-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சில பட்டணங்களில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தும், அப்பட்டணத்து மக்கள் மனந்திரும்பவில்லை. அதனால் அவர் அந்தப் பட்டணங்களைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார். “கோராசினே, உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள். ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும். கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே சோதோம் நாட்டுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்” என்றார்.
மத்தேயு 11:20-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: கோராசீனே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 11:20-24 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு, தாம் பெரும்பாலான அற்புதங்களை நிகழ்த்திய நகரங்களை இயேசு விமர்சித்தார். ஏனென்றால் அந்நகரங்களிலுள்ள மக்கள் அதற்குப்பின் தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு பாவம் செய்வதை நிறுத்தவில்லை. இயேசு, “கோராசின் நகரமே, பெத்சாயிதா நகரமே, இது உங்களுக்கு மிகவும் கொடுமையானது. உங்களுக்கு நான் பல அற்புதங்களை நிகழ்த்தினேன். அதே அற்புதங்களைத் தீரு மற்றும் சீதோன் நகரங்களில் நடத்தியிருந்தால், அம்மக்கள் வெகு நாள் முன்பே மனந்திருந்தியிருப்பார்கள். தங்கள் பாவங்களுக்காகத் தம் வருத்தத்தைத் தெரிவிக்க சாக்குத்துணி ஆடையை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டிருப்பார்கள். நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளன்று தீரு மற்றும் சீதோன் மக்களைவிடவும் உங்களுக்கு மிகத் துன்பம் ஏற்படும் என்று நான் சொல்கிறேன். “கப்பர்நகூம் மக்களாகிய நீங்கள் வானம் வரை உயர்த்தப்படுவீர்களோ? இல்லை! நீங்கள் மரணக் குழியில் தள்ளப்படுவீர்கள். உங்களிடம் பல அற்புதங்களைச் செய்தேன் நான். அந்த அற்புதங்களைச் சோதோம் நகரில் நிகழ்த்தியிருந்தால், அந்நகர மக்கள் பாவம் செய்வதை நிறுத்தியிருப்பார்கள். இன்னும் ஒரு நகரமாகவே அது இருந்திருக்கும். ஆனால் நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளன்று சோதோம் நகர மக்களைக் காட்டிலும் மிகத் துன்பம் உங்களுக்கு ஏற்படும் என்று சொல்கிறேன்” என்று கூறினார்.
மத்தேயு 11:20-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது, தமது பலத்தசெய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார். கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.