மத்தேயு 10:5-10
மத்தேயு 10:5-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு இந்தப் பன்னிரண்டு பேருக்கும் இவ்வழிமுறைகளைச் சொல்லி அனுப்பினார்: “நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போகவேண்டாம், சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்லவேண்டாம். இஸ்ரயேலின் வழிதவறிப்போன ஆடுகளிடத்திற்கே போங்கள். நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகிறது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள். நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், குஷ்டவியாதி உள்ளோரைச் சுத்தப்படுத்துங்கள், பிசாசுகளை விரட்டுங்கள். இலவசமாக நீங்கள் பெற்றீர்கள், இலவசமாகவே கொடுங்கள். “நீங்கள் போகும்போது, எவ்வித தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் மடிப்பையில் கொண்டுபோக வேண்டாம்; பயணத்திற்கென்று பையையோ, மாற்று உடையையோ, பாதரட்சைகளையோ, ஊன்றுகோலையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாள் தன் உணவுக்குப் பாத்திரவானாயிருக்கிறான்.
மத்தேயு 10:5-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள். போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள். உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.
மத்தேயு 10:5-10 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம், “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள். தொழு நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டுங்கள். இவ்வல்லமைகளை உங்களுக்குத் தாராளமாய் வழங்குகிறேன். எனவே, மற்றவர்களுக்குத் தாராளமாய் உதவுங்கள். உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள். பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப்படவேண்டும்.
மத்தேயு 10:5-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.