மத்தேயு 10:34-39

மத்தேயு 10:34-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்கவேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, ஒரு போர்வாளைக் கொண்டுவருவதற்காகவே வந்தேன். “எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்; ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’   “தம் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல. தம் வாழ்வைக் காக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.

மத்தேயு 10:34-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன். எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே. தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.

மத்தேயு 10:34-39 பரிசுத்த பைபிள் (TAERV)

“பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நான் வந்திருப்பதாய் நினைக்காதீர்கள். சமாதானத்தை ஏற்படுத்த நான் வரவில்லை. ஒரு பட்டயத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்துள்ளேன். கீழ்க்கண்டவை நடந்தேறவே நான் வந்துள்ளேன்: “‘மகன் தன் தந்தைக்கும், மகள் தன் தாய்க்கும், மருமகள் தன் மாமியாருக்கும், எதிராவார்கள்.’ தன் குடும்பத்து மக்களே ஒருவருக்கு ஒருவர் எதிராவார்கள். “என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைப் பின்பற்றும்பொழுது உண்டாகும் துன்பத்தை ஏற்றுக்கொள்ளாதவன், என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் வாழ்வை அதிகம் நேசிக்கிறவன், மெய்யான வாழ்வை இழக்கிறான். எனக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறவன், மெய்யான வாழ்வை அடைவான்.”

மத்தேயு 10:34-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.