மத்தேயு 10:1-42

மத்தேயு 10:1-42 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு தமது பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரவழைத்து, அசுத்த ஆவிகளை விரட்டவும், எல்லா விதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார். இவை அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள்: முதலாவது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரன் அந்திரேயா; செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான்; பிலிப்பு, பர்தொலொமேயு; தோமா, வரி வசூலிப்பவனான மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரே. இயேசு இந்தப் பன்னிரண்டு பேருக்கும் இவ்வழிமுறைகளைச் சொல்லி அனுப்பினார்: “நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போகவேண்டாம், சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்லவேண்டாம். இஸ்ரயேலின் வழிதவறிப்போன ஆடுகளிடத்திற்கே போங்கள். நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகிறது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள். நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், குஷ்டவியாதி உள்ளோரைச் சுத்தப்படுத்துங்கள், பிசாசுகளை விரட்டுங்கள். இலவசமாக நீங்கள் பெற்றீர்கள், இலவசமாகவே கொடுங்கள். “நீங்கள் போகும்போது, எவ்வித தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் மடிப்பையில் கொண்டுபோக வேண்டாம்; பயணத்திற்கென்று பையையோ, மாற்று உடையையோ, பாதரட்சைகளையோ, ஊன்றுகோலையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாள் தன் உணவுக்குப் பாத்திரவானாயிருக்கிறான். நீங்கள் எந்தப் பட்டணத்திற்கோ கிராமத்திற்கோ சென்றாலும் அங்கே தகுதியுள்ள ஒருவனைத் தேடி, நீங்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்படும்வரை அவனுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள். அந்த வீட்டிற்குள் செல்லும்போது, உங்கள் வாழ்த்துக்களை அறிவியுங்கள். அந்த வீடு தகுதியுள்ளதாக இருந்தால், உங்கள் சமாதானம் அவ்வீட்டில் தங்கட்டும்; இல்லையானால், உங்கள் சமாதானம் உங்களிடம் திரும்பிவரும். யாராவது உங்களை வரவேற்காமலோ, உங்கள் வார்த்தைக்குச் செவிகொடுக்காமலோ இருந்தால், நீங்கள் அந்த வீட்டையோ, பட்டணத்தையோ விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிவிடுங்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்தப் பட்டணத்திற்கு நடக்கப்போவது, சோதோம், கொமோரா பட்டணங்களுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும் கடினமானதாயிருக்கும். “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப்போல புத்திக்கூர்மை உள்ளவர்களாயும், புறாக்களைப்போல் கபடற்றவர்களாயும் இருங்கள். மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்; அவர்கள் உங்களைத் தங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சவுக்கால் அடிப்பார்கள். என் நிமித்தமாக ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் முன்னால், நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள். அவர்கள் உங்களைக் கைது செய்யும்போது, என்ன சொல்வது, எப்படிச் சொல்வது எனக் கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில், என்ன சொல்லவேண்டும் என்பது உங்களுக்குக் கொடுக்கப்படும். ஏனெனில் பேசுவது நீங்களாய் இருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார். “சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களை கொலைசெய்வார்கள். என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான். நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில், மற்றொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மானிடமகனாகிய நான் வருவதற்கு முன்னால், நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்கமாட்டீர்கள், என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். “ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல. ஒரு மாணவன் தனது ஆசிரியரைப் போலவும், வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால், அதுவே போதுமானது. ஒரு வீட்டின் தலைவன் பெயல்செபூல் என அழைக்கப்பட்டால், அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக அழைக்கப்படுவார்கள்! “எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். மறைத்தது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. நான் உங்களுக்கு இருளிலே சொன்னவற்றை, பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை, வீட்டின் கூரையின் மேலிருந்து அறிவியுங்கள். உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. எனவே பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள். “மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன். மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன். “பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்கவேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, ஒரு போர்வாளைக் கொண்டுவருவதற்காகவே வந்தேன். “எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்; ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’   “தம் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல. தம் வாழ்வைக் காக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். “உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்கள். என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருவர் இறைவாக்கினராய் இருப்பதனால், அவரை இறைவாக்கினர் என்று யாராவது ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். ஒருவர் நீதிமான் என்பதால் யாராவது அவரை ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு யாராவது ஒரு குவளை குளிர்ந்த நீரைக் கொடுத்தால், கொடுத்தவர்கள் தமக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டார்கள் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

மத்தேயு 10:1-42 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள். போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள். உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான். எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள். ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது. எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள். மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள். அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள். என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை. சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது. உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன். மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன். எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே. தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான். சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 10:1-42 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். தீய ஆவிகளை மேற்கொள்ளும் வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்கினார். எல்லா விதமான நோய்களையும் பிணிகளையும் குணப்படுத்தும் வல்லமையையும் இயேசு அவர்களுக்கு வழங்கினார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருமாறு: சீமோன் (மற்றொரு பெயர் பேதுரு.) மற்றும் அவரது சகோதரன் அந்திரேயா, செபதேயுவின் குமாரன் யாக்கோபு மற்றும் அவரது சகோதரன் யோவான், பிலிப்பு மற்றும் பார்த்தலோமியு, தோமா மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து. இயேசுவை அவரது எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தவன் இந்த யூதாஸ் ஆவான். இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம், “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள். தொழு நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டுங்கள். இவ்வல்லமைகளை உங்களுக்குத் தாராளமாய் வழங்குகிறேன். எனவே, மற்றவர்களுக்குத் தாராளமாய் உதவுங்கள். உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள். பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப்படவேண்டும். “நீங்கள் ஒரு நகரத்திலோ ஊரிலோ நுழையும்பொழுது, தகுதிவாய்ந்த மனிதரைக் கண்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லும்வரை அவருடன் தங்கி இருங்கள். நீஙகள் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொல்லுங்கள். அவ்வீட்டில் உள்ளவர்கள் உங்களை வரவேற்றால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நீங்கள் அவர்களுக்கு விரும்பிய சமாதானம் அவர்களுக்குக் கிடைக்கட்டும். வீட்டிலுள்ளவர்கள் உங்களை வரவேற்காவிட்டால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுக்கு நீங்கள் விரும்பிய சமாதானத்தைத் திரும்பப் பெறுங்கள். ஒரு வீட்டிலுள்ளவர்களோ அல்லது நகரத்திலுள்ளவர்களோ உங்களை வரவேற்கவோ அல்லது உங்கள் பேச்சைக் கேட்கவோ மறுத்தால், அவ்விடத்தை விட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்த தூசியைத் தட்டிவிடுங்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நியாயத்தீர்ப்பு நாளிலே சோதாம் மற்றும் கொமோரா ஆகிய ஊர்களுக்கு நேர்ந்ததைக் காட்டிலும் மோசமானது அவ்வூருக்கு நடக்கும். “கவனியுங்கள்! நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கிடையில் அகப்பட்ட வெள்ளாட்டினைப் போல இருப்பீர்கள். எனவே, பாம்புகளைப்போல சாதுரியமாய் இருங்கள். ஆனால் புறாவைப்போல கபடற்றவர்களாயிருங்கள். மக்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் உங்களைக் கைது செய்து கொண்டு போய் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவார்கள். உங்களை (அவர்களது) ஜெப ஆலயங்களில் வைத்து சாட்டையால் அடிப்பார்கள். ஆளுநர்களுக்கும் மன்னர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் முன்னால் நிறுத்தப்படுவீர்கள். என்னிமித்தம் உங்களுக்கு மக்கள் இதைச் செய்வார்கள். அப்போது நீங்கள் என்னைப் பற்றி அம்மன்னர்களுக்கும் ஆளுநர்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் எடுத்துச் சொல்வீர்கள். நீங்கள் கைது செய்யப்படும்பொழுது, எதைச் சொல்வது எப்படிச் சொல்வது என்று கவலைகொள்ளாதீர்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் பேச வேண்டியவை அருளப்படும். அப்பொழுது உண்மையில் பேசுவது நீங்களாயிருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவர் உங்கள் மூலமாகப் பேசுவார். “சகோதரர்களே தமது சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தந்தையரே தம் பிள்ளைகளுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுப்பார்கள். பிள்ளைகளே தமது பெற்றோர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள். ஆனால், இறுதிவரை உறுதியாயிருக்கிறவன் இரட்சிக்கப்படுவான். ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது. “ஒரு மாணவன் ஆசிரியரைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு வேலைக்காரன் தன் முதலாளியைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு மாணவன் தன் ஆசிரியரின் அளவிற்கு முன்னேறுவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானைப்போல முன்னேற்றமடைவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வீட்டின் தலைவனே ‘பெயல்செபூல்’ என்றழைக்கப்பட்டால், அக்குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அதனிலும் மோசமான பெயரால் அழைக்கப்படுவார்கள். “எனவே, அத்தகைய மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். மறைந்துள்ள யாவும் வெளியே வரும். மர்மமாயுள்ள அனைத்தும் தெளிவாக அறியப்படும். நான் இவற்றை இருளில் (இரகசியமாக) கூறுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றை வெளிச்சத்தில் கூற வேண்டுமென நான் விரும்புகிறேன். நான் இவற்றை அமைதியாக உங்களுடன் மட்டும் மெதுவாகப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றைத் தாராளமாக எல்லா மக்களுக்கும் கூற வேண்டும். “மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்களால் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியும். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாது. சரீரத்தோடு ஆத்துமாவையும் சேர்த்துக் கொல்லக்கூடிய ஒருவரிடம் (தேவனிடம்) மட்டுமே நீங்கள் பயம்கொள்ள வேண்டும். அவர் சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்திற்கு அனுப்ப வல்லவர். பறவைகள் விற்கப்படும் பொழுது இரண்டு சிறிய பறவைகளின் விலை ஓரணா மட்டுமே. ஆனால் இரண்டில் ஒன்று கூட உங்கள் பிதாவானவரின் அனுமதி இன்றி சாக முடியாது. உங்கள் தலையிலுள்ள முடிகளின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். எனவே பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் நீங்கள் அதிக மதிப்பு வாய்ந்தவர்கள். “ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் (நின்று கொண்டு) என்னிடம் நம்பிக்கை உடையவனாய் இருப்பதாகக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவான். நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன். மாறாக, ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் என்னிடம் நம்பிக்கை உடையவனல்ல எனக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவானல்ல. நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன். “பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நான் வந்திருப்பதாய் நினைக்காதீர்கள். சமாதானத்தை ஏற்படுத்த நான் வரவில்லை. ஒரு பட்டயத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்துள்ளேன். கீழ்க்கண்டவை நடந்தேறவே நான் வந்துள்ளேன்: “‘மகன் தன் தந்தைக்கும், மகள் தன் தாய்க்கும், மருமகள் தன் மாமியாருக்கும், எதிராவார்கள்.’ தன் குடும்பத்து மக்களே ஒருவருக்கு ஒருவர் எதிராவார்கள். “என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைப் பின்பற்றும்பொழுது உண்டாகும் துன்பத்தை ஏற்றுக்கொள்ளாதவன், என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் வாழ்வை அதிகம் நேசிக்கிறவன், மெய்யான வாழ்வை இழக்கிறான். எனக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறவன், மெய்யான வாழ்வை அடைவான்.” “உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொண்டவன். என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். நல்லவரை அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்கிறவன், நல்லவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவான். யாரேனும் என்னைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சிறிய அளவேனும் உதவினால், அவன் தக்க வெகுமதியை நிச்சயம் பெறுவான். என்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்திருந்தாலும், அவனுக்குத் தக்க வெகுமதி நிச்சயம் கொடுக்கப்படும்.”

மத்தேயு 10:1-42 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான். எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள். ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள். மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள். என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல. சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.