மத்தேயு 1:15-23
மத்தேயு 1:15-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும். இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான். அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது. அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான். தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
மத்தேயு 1:15-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எலியூத் எலெயாசாருக்குத் தகப்பன், எலெயாசார் மாத்தானுக்குத் தகப்பன், மாத்தான் யாக்கோபுக்குத் தகப்பன், யாக்கோபு யோசேப்புக்குத் தகப்பன், யோசேப்பு மரியாளின் கணவன், மரியாளிடம் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். இவ்வாறு ஆபிரகாமிலிருந்து தாவீதுவரை பதினான்கு தலைமுறைகளும், தாவீதிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும்வரை பதினான்கு தலைமுறைகளும், பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதில் இருந்து கிறிஸ்துவரை பதினான்கு தலைமுறைகளும் இருந்தன. இயேசுகிறிஸ்துவின் பிறப்பு இவ்வாறு நிகழ்ந்தது: இயேசுவின் தாய் மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தாள். ஆனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து வாழும் முன்பே அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்றிருந்தது தெரியவந்தது. அவளது கணவன் யோசேப்பு ஒரு நீதிமானாயிருந்தான். எனவே அவளை மக்கள் முன்பு வெளிப்படையாக அவமானப்படுத்த விரும்பாமல், திருமண ஒப்பந்தத்தை இரகசியமாக முறித்துவிட நினைத்தான். யோசேப்பு இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கர்த்தரின் தூதன் அவனுக்குக் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, நீ மரியாளை உனது மனைவியாக சேர்த்துக்கொள்ளத் தயங்காதே, ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியாலேயே கருவுற்றிருக்கிறாள். அவள் ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவருக்கு, ‘இயேசு’ என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பார்” என்றான். கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாகச் சொல்லியிருந்தது நிறைவேறவே இவை நடந்தன: “ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள்.” இம்மானுயேல் என்பதன் அர்த்தம், “இறைவன் நம்மோடு இருக்கிறார்” என்பதே.
மத்தேயு 1:15-23 பரிசுத்த பைபிள் (TAERV)
எலியூத்தின் குமாரன் எலியாசார். எலியாசாரின் குமாரன் மாத்தான். மாத்தானின் குமாரன் யாக்கோபு. யாக்கோபின் குமாரன் யோசேப்பு. யோசேப்பின் மனைவி மரியாள். மரியாளின் குமாரன் இயேசு. கிறிஸ்து என அழைக்கப்பட்டவர் இயேசுவே. எனவே ஆபிரகாம் முதல் தாவீதுவரை பதினான்கு தலைமுறைகள். தாவீது முதல் யூதர்கள் அடிமைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதுவரைக்கும் பதினான்கு தலைமுறைகள். யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து கிறிஸ்து பிறக்கும்வரை பதினான்கு தலைமுறைகள். இயேசு கிறிஸ்துவின் தாய் மரியாள். இயேசுவின் பிறப்பு இப்படி நிகழ்ந்தது. மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவர்கள் திருமணத்திற்கு முன்பே மரியாள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரியாள் கருவுற்றிருந்தாள். மரியாளின் கணவனாகிய யோசேப்பு மிகவும் நல்லவன். மக்களின் முன்னிலையில் மரியாளை அவன் அவமதிக்க விரும்பவில்லை. எனவே யோசேப்பு மரியாளை இரகசியமாகத் தள்ளிவிட நினைத்தான். யோசேப்பு இந்த சிந்தையாயிருக்கும்பொழுது, கர்த்தருடைய தூதன் யோசேப்பின் கனவில் தோன்றி, “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, மரியாளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்காதே. அவள் கருவிலிருக்கும் குழந்தை பரிசுத்த ஆவியானவரால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள். அக்குழந்தைக்கு இயேசு எனப் பெயரிடு. அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்” என்றான். இவையெல்லாம் தீர்க்கதரிசியின் மூலமாகத் தேவன் சொன்னவைகளின் நிறைவேறுதல்களாக நடந்தன. தீர்க்கதரிசி சொன்னது இதுவே: “கன்னிப் பெண் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்.” (இம்மானுவேல் என்பதற்கு, “தேவன் நம்முடன் இருக்கிறார்” என்று பொருள்.)
மத்தேயு 1:15-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார். இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.