மல்கியா 3:1-5

மல்கியா 3:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“பாருங்கள், நான் என் தூதுவனை அனுப்புவேன், அவன் எனக்கு முன்பாக எனக்கு ஒரு வழியை ஆயத்தம் செய்வான்; நீங்கள் தேடுகிற யெகோவா தம்முடைய ஆலயத்திற்கு திடீரென வருவார்; நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின், தூதுவனானவர் வருவார்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ஆனால் அவர் வரும் நாளைச் சகிக்க யாரால் முடியும்? அவர் தோன்றுகையில் அவர்முன் யாரால் நிற்கமுடியும்? ஏனெனில் அவர் கொல்லனின் நெருப்பைப்போல் இருப்பார், துணிதுவைப்போரின் சலவைக்கட்டியைப்போலவும் இருப்பார். அவர் வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரிக்கிற கொல்லனைப்போல் உட்கார்ந்து, லேவியின் மக்களைச் சுத்தமாக்குவார்; அவர் தங்கத்தைப்போலவும், வெள்ளியைப்போலவும் அவர்களைச் சுத்திகரிப்பார். அப்பொழுது யெகோவாவுக்கு நீதியுடன் தங்கள் காணிக்கையை கொண்டுவரும் மனிதர்கள் இருப்பார்கள். எனவே சென்ற நாட்களிலும், முந்திய வருடங்களிலும் நடந்ததுபோல, யூதாவின் காணிக்கைகளும் எருசலேமின் காணிக்கைகளும் யெகோவாவுக்கு பிரியமானவைகளாயிருக்கும். “அப்பொழுது நியாயந்தீர்க்கும்படி நான் உங்கள் மத்தியில் வருவேன். சூனியக்காரருக்கும், விபசாரிகளுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும் எதிராக சாட்சி சொல்வேன், எனக்குப் பயப்படாமல் வேலையாட்களுக்குக் கூலி கொடுக்காது ஏமாற்றுகிறவர்களுக்கும், விதவைகளையும் தந்தையற்றவர்களையும் ஒடுக்குகிறவர்களுக்கும், அயல்நாட்டினரை நீதியாக நடத்தத் தவறுகிறவர்களுக்கும் எதிராக நான் விரைந்துவந்து சாட்சி சொல்வேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.

மல்கியா 3:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் செய்வான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்திற்கு உடனடியாக வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளைத் தாங்கிக்கொள்பவன் யார்? அவர் வெளிப்படும்போது நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய நெருப்பைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்; அவர் லேவியின் சந்ததியைச் சுத்திகரித்து, அவர்கள் யெகோவாவுடையவர்களாக இருப்பதற்காகவும், நீதியாகக் காணிக்கையைச் செலுத்துவதற்காகவும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். அப்பொழுது ஆரம்பநாட்களிலும் கடந்த வருடங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்கும். நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரர்களுக்கும், விபசாரக்காரர்களுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும், திக்கற்றபிள்ளைகளுமாகிய கூலிக்காரர்களின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கும், அநியாயம் செய்கிறவர்களுக்கும் விரோதமாக முக்கிய சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

மல்கியா 3:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் என் தூதனை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அவர் எனக்காகப் பாதையை ஆயத்தம் செய்வார். திடீரென்று அவர் தமது ஆலயத்துக்கு வருவார். அவரே நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஆண்டவர். அவரே நீங்கள் விரும்பும் புதிய உடன்படிக்கைக்கான தூதர். உண்மையில் அவர் வந்துக்கொண்டிருக்கிறார்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார். “எவனொருவனும் அந்த நேரத்திற்காக தயார் செய்யமுடியாது. அவர் வரும்போது எவரொருவரும் அவருக்கு எதிரே நிற்க முடியாது. அவர் எரியும் நெருப்பைப் போன்றவர். அவர் ஜனங்கள் பொருட்களைச் சுத்தப்படுத்திட பயன்படுத்தும் சவுக்காரம் போன்றவர். அவர் லேவியர்களைச் சுத்தமாக்குவார். அவர் நெருப்பினால் வெள்ளியைச் சுத்தமாக்குவதுபோன்று அவர்களைச் சுத்தமாக்குவார். அவர் அவர்களை சுத்தமான பொன்னையும், வெள்ளியையும் போன்று செய்வார். பிறகு அவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சரியான வழியில் செய்வார்கள். பிறகு கர்த்தர் யூதாவிலும் எருசலேமிலும் இருந்து வருகிற அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வர். இது கடந்த காலத்தில் உள்ளது போல் இருக்கும். இது வெகு காலத்திற்கு முன்னால் உள்ளதைப் போன்றிருக்கும். பிறகு நான் உங்களிடம் வருவேன். நான் சரியானவற்றைச் செய்வேன். நான் ஜனங்கள் செய்த தீமைகளை குறித்து சொல்லுகிறவர் போன்று இருப்பேன். சிலர் தீய மந்திரங்களைச் செய்கிறார்கள். சிலர் விபச்சாரப் பாவத்தைச் செய்கிறார்கள். சிலர் பொய்யான வாக்குறுதிகளைச் செய்கின்றனர். சிலர் தமது வேலைக்காரர்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் தாம் வாக்குறுதியளித்ததுபோன்று பணம் கொடுப்பதில்லை. ஜனங்கள் விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் உதவுவதில்லை. ஜனங்கள் பரதேசிகளுக்கு உதவுவதில்லை. ஜனங்கள் என்னை மதிப்பதில்லை!” சர்வவல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.

மல்கியா 3:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடைய வர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய்க் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்றபிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக் கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மல்கியா 3:1-5

மல்கியா 3:1-5 TAOVBSI