மல்கியா 2:8-15

மல்கியா 2:8-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால் நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை உங்கள் போதனைகளால் இடறிவிழப்பண்ணினீர்கள்; நான் லேவியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நீங்கள் மீறிவிட்டீர்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “நீங்கள் என்னுடைய வழிகளைப் பின்பற்றாது, என் சட்டத்தின் விஷயங்களில் பாகுபாடு காட்டியதால், நான் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அவமானப்படுத்தி, இழிவுக்குள்ளாகும்படி செய்திருக்கிறேன்.” யூதா மக்களே! நம் எல்லோருக்கும் ஒரே தகப்பன் அல்லவா இருக்கிறார்? நம் எல்லோரையும் ஒரே இறைவன்தானே படைத்தார். அப்படியிருக்க நாம் ஒருவருக்கொருவர் உண்மையற்றவர்களாயிருந்து, நம் தந்தையர்களுடன் இறைவன் செய்துகொண்ட உடன்படிக்கையை ஏன் தூய்மைக்கேடாக்க வேண்டும்? யூதா நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது. இஸ்ரயேலிலும், எருசலேமிலும் அருவருக்கத்தக்க செயல் செய்யப்பட்டிருக்கிறது: யூதா மனிதர் அந்நிய தெய்வங்களை ஆராதிக்கிற பெண்களைத் திருமணம் செய்ததினால், யெகோவா விரும்பும் பரிசுத்த ஆலயத்தை அசுத்தப்படுத்தியிருக்கிறார்கள். இதைச் செய்கிற மனிதனை குறித்தோ, அவன் யாராயிருந்தாலும் அவனை யெகோவா யாக்கோபின் கூடாரங்களில் வாழாதபடி முழுவதும் அகற்றிவிடட்டும்; அவன் சேனைகளின் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்துகிறவனாய் இருந்தாலும், அவனை அகற்றிவிடட்டும். நீங்கள் இன்னொன்றைச் செய்கிறீர்கள்: யெகோவாவின் பலிபீடத்தை கண்ணீரினால் நிரப்புகிறீர்கள். யெகோவா உங்கள் காணிக்கைகளைக் கண்ணோக்கிப் பாராமல் இருப்பதாலும், அவற்றை உங்கள் கைகளிலிருந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளாததினாலும் அழுது புலம்புகிறீர்கள். நீங்களோ, “இது ஏன்?” என்றும் கேட்கிறீர்கள். ஏனென்றால் நீயோ உனது திருமண உடன்படிக்கையின் மனைவி உன் துணையாயிருந்தும், அவளுக்குத் துரோகம் செய்திருக்கிறாய்; இதனால் உனது வாலிப காலத்து மனைவிக்கும் உனக்கும் இடையே உடன்படிக்கையின் சாட்சியாய் இருந்த யெகோவா விளக்கம் கேட்கிறார். உங்கள் இருவரையும் யெகோவா ஒருவராய் இணைக்கவில்லையா? நீங்கள் உடலிலும் ஆவியிலும் அவருடையவர்களே. ஏன் ஒருவராய் இணைத்தார்? அவர் தனக்கு இறை பக்தியுள்ள சந்ததியை பெறுவதற்காகவே இவ்வாறு செய்தார். எனவே நீங்கள் உங்கள் ஆவியிலே உங்களைக் காத்துக்கொண்டு, உங்கள் வாலிப வயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாதீர்கள்.

மல்கியா 2:8-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறச்செய்தீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம்செய்ததினால் நானும் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அற்பமானவர்களும் இழிவானவர்களுமாக்கினேன். நம்மெல்லோருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மை உருவாக்கவில்லையோ? நாம் நம்முடைய முற்பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன்தன் சகோதரனுக்கு ஏன் துரோகம் செய்யவேண்டும்? யூதா மக்கள் துரோகம் செய்தார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; யெகோவா சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா மக்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் மகள்களை திருமணம்செய்தார்கள். இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாக இருந்தாலும், உத்திரவு கொடுக்கிறவனாக இருந்தாலும், சேனைகளின் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்துகிறவனாக இருந்தாலும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இல்லாமல் யெகோவா அழிப்பார். நீங்கள் இரண்டாவது முறையும் இதைச் செய்து, யெகோவாவுடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதிக்கமாட்டார், அதை உங்கள் கைகளில் பிரியமாக ஏற்றுக்கொள்ளவுமாட்டார். ஏன் என்று கேட்கிறீர்கள்; யெகோவா உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் செய்தாயே. அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்பு ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாமல், உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

மல்கியா 2:8-15 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர், “ஆசாரியர்களாகிய நீங்கள் என்னைப் பின்பற்றுவதை நிறுத்தினீர்கள். நீங்கள் பலர் தவறு செய்வதற்காக போதனைகளைப் பயன்படுத்தினீர்கள். நீங்கள் வேவியோடு செய்த உடன்படிக்கையை அழித்தீர்கள்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். “நீங்கள் நான் சொன்ன வழியில் வாழவில்லை. நீங்கள் என் போதனைகளை ஜனங்களுக்குப் போதிக்கையில் பட்சபாதம் காண்பித்தீர்கள். எனவே நான் உங்களை முக்கியமற்றவர்களாகச் செய்வேன். ஜனங்கள் உங்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள்.” நாங்கள் அனைவரும் ஒரே தந்தையை (தேவன்) உடையவர்கள். அதே தேவன் எங்கள் ஒவ்வொருவரையும் படைத்தார். எனவே ஜனங்கள் தமது சகோதரர்களை எதற்கு ஏமாற்ற வேண்டும்? அந்த ஜனங்கள் தம் உடன்படிக்கையை மதிக்கவில்லை என்பதை காட்டுகிறார்கள். அவர்கள் நமது முற்பிதாக்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையை மதிக்கவில்லை. யூதாவின் ஜனங்கள் மற்ற ஜனங்களை ஏமாற்றினார்கள். எருசலேமிலும் இஸ்ரவேலிலும் உள்ள ஜனங்கள் பயங்கரமான காரியங்களைச் செய்தனர். யூதாவிலுள்ள ஜனங்கள் கத்தருடைய பரிசுத்தமான ஆலயத்தை மதிக்கவில்லை. தேவன் அந்த இடத்தை நேசிக்கிறார். யூதாவின் ஜனங்கள் அயல் நாட்டு தேவதைகளை தொழுதிடத் தொடங்கினார்கள். கர்த்தர் யூதாவின் குடும்பத்திலிருந்து அந்த ஜனங்களை நீக்குவார். அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஆனால் அது உதவாது. நீங்கள் அழமுடியும். கர்த்தருடைய பலிபீடத்தை கண்ணீரால் மூட முடியும். ஆனால் கர்த்தர் உங்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டார். கர்த்தர் நீங்கள் கொண்டு வருகிற பொருட்களால் திருப்தி அடையமாட்டார். நீங்கள், “கர்த்தரால் எங்கள் காணிக்கைகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?” என்று கேட்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த தீமைகளைக் கர்த்தர் பார்த்தார். அவர் உங்களுக்கு எதிரான சாட்சி. நீங்கள் உங்கள் மனைவியரை ஏமாற்றியதை அவர் பார்த்தார். நீ இளமையாய் இருக்கும்போதே அப்பெண்ணை மணந்துகொண்டிருக்கிறாய். அவள் உனது பெண் சிநேகிதியாய் இருந்தாள். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துக்கொண்டீர்கள். அவள் உனது மனையியானாள். ஆனால் நீ அவளை ஏமாற்றினாய். தேவன் கணவர்களும் மனைவிகளும் ஒரே உடலாகவும் ஒரே ஆவியாகவும் இருக்க வேண்டுமென விரும்பினர். ஏன்? அதனால்தான் அவர்கள் பரிசுத்தமான குழந்தைகளைப் பெறமுடியும். எனவே அந்த ஆவிக்குரிய கூடி வருதலை பாதுகாத்துக்கொள். உன் மனைவியை நீ ஏமாற்றாதே. அவள் உனது இளமைகாலம் முதற்கொண்டே உன் மனைவியாக இருக்கிறாள்.

மல்கியா 2:8-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறப்பண்ணினீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம்பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன். நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ? நாம் நம்முடைய பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் துரோகம்பண்ணுவானேன்? யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணினார்கள். இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாயினும், உத்தரவு கொடுக்கிறவனாயினும், சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாயினும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இராதபடிக்குக் கர்த்தர் சங்கரிப்பார். நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார். ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே. அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.