லூக்கா 9:28-36

லூக்கா 9:28-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். அவர் ஜெபம்பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி, அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள். அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான். இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள். அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று. அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.

லூக்கா 9:28-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு இதைச் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குபின், அவர் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் தன்னுடனே கூட்டிக்கொண்டு, மன்றாடும்படி ஒரு மலைக்குச் சென்றார். அவர் மன்றாடிக்கொண்டிருக்கையில், அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது. அவருடைய உடைகள், வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா ஆகிய இரண்டுபேர்களும் மகிமையான பிரகாசத்தில் தோன்றி, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். எருசலேமில் சீக்கிரமாய் இயேசு நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவனுடைய கூட்டாளிகளும், கடுமையான தூக்க மயக்கத்திலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தூக்கம் தெளிந்து விழித்தபோது, அவருடைய மகிமையையும், அவருடன் நின்ற இரண்டுபேரையும் கண்டார்கள். அவ்விருவர் இயேசுவைவிட்டுப் புறப்படும்போது, பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது, நாம் இங்கு மூன்று கூடாரங்களை அமைப்போம். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்” என்றான். அவன் தான் சொல்வது என்னவென்று அறியாமல் சொன்னான். பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு மேகம் தோன்றி அவர்களை மூடிக்கொண்டது. அம்மேகம் சூழ்ந்தபோது அவர்கள் பயந்தார்கள். அப்பொழுது மேகத்திலிருந்து, “இவர் என் மகன், நான் தெரிந்துகொண்டவர்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரலைக் கேட்டபொழுது, இயேசு மட்டும் இருப்பதை சீடர்கள் கண்டார்கள். அவர்களோ, இந்த சம்பவத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்கள். தாங்கள் கண்டதை அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை.

லூக்கா 9:28-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது. அன்றியும் மோசே எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடு காணப்பட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள், அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவனோடிருந்தவர்களும் தூக்கமயக்கமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடு நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள். அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகும்போது, பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது என்னவென்று தெரியாமல் சொன்னான். இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள். அப்பொழுது: இவர் நான் தெரிந்துகொண்ட என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள்.

லூக்கா 9:28-36 பரிசுத்த பைபிள் (TAERV)

இச்செய்திகளை இயேசு கூறினதற்கு எட்டு நாட்களுக்குப் பின்னர், அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்வதற்காக ஒரு மலையின்மீது ஏறினார். இயேசு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது அவரது முகம் மாற்றமடைந்தது. அவரது ஆடைகள் ஒளி விடும் வெண்மையாக மாறின. பின்னர் இரண்டு மனிதர்கள் இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசேயும், எலியாவும் ஆவர். மோசேயும் எலியாவும் கூட ஒளி பொருந்தியோராக காணப்பட்டனர். எருசலேமில் நிகழவிருக்கும் இயேசுவின் மரணத்தைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பேதுருவும் மற்றவர்களும் உறங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் விழித்து இயேசுவின் மகிமையைக் கண்டனர். இயேசுவோடுகூட நின்றுகொண்டிருந்த அந்த இரண்டு மனிதர்களையும் அவர்கள் பார்த்தனர். மோசேயும், எலியாவும் பிரிந்து செல்லும்போது பேதுரு, “குருவே, நாம் இங்கிருப்பது நல்லது. நாங்கள் இங்கு மூன்று கூடாரங்களை, ஒன்று உமக்காகவும் ஒன்று மோசேக்காகவும், ஒன்று எலியாவுக்காகவும், அமைப்போம்” என்று கூறினான். (பேதுரு தான் சொல்லிக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டிருக்கவில்லை) இவ்வாறு பேதுரு சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் அவர்களைச் சூழ்ந்தது. மேகம் சூழ்ந்ததும் பேதுரு, யாக்கோபு, யோவான், ஆகியோர் பயந்தனர். மேகத்தினின்று ஒரு அசரீரி, “இவர் எனது குமாரன். நான் தேர்ந்துகொண்டவர் இவரே, இவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றது. அசரீரி முடிந்ததும் இயேசு மட்டுமே அங்கிருந்தார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் எதுவும் பேசவில்லை. அவர்கள் பார்த்தவற்றைக் குறித்து ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை.