லூக்கா 9:12-17

லூக்கா 9:12-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள். ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடை நிறைய எடுக்கப்பட்டது.

லூக்கா 9:12-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மாலை வேளையானபோது பன்னிரண்டு பேர்களும் அவரிடம் வந்து, “கூடியிருக்கும் இந்த மக்களை அனுப்பிவிடும். அவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய், சாப்பாட்டையும் இருப்பிடத்தையும் தேடிக்கொள்ளட்டும். நாம் சற்று தூரமான ஒரு இடத்தில் இருக்கிறோமே” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். அவர்கள் அதற்கு, “எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன. இல்லையென்றால், நாங்கள் போய் இந்த மக்களுக்கெல்லாம் உணவை வாங்கவேண்டும்” என்றார்கள். அங்கே ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். ஆனால் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “அவர்களை ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக உட்கார வையுங்கள்” என்றார். சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து, மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாகப் பங்கிட்டார். பின்பு அவர், அந்தத் துண்டுகளைச் சீடர்களிடத்தில் கொடுத்து, மக்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.

லூக்கா 9:12-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மாலைநேரத்தில், பன்னிரண்டுபேரும், அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்திரமாக இருப்பதினால், மக்கள், சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும்போய்த் தங்குவதற்கும், உணவுப்பொருள்களை வாங்கிக்கொள்வதற்கும் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள். அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி சீடர்களிடத்தில் கொடுத்தார். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான உணவுப்பொருட்கள் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுக்கப்பட்டது.

லூக்கா 9:12-17 பரிசுத்த பைபிள் (TAERV)

மதியத்திற்குப் பின்பு பன்னிரண்டு சீஷர்களும் இயேசுவிடம் வந்து, “இது மக்கள் வசிக்கிற இடம் அல்ல. மக்களை அனுப்பிவிடுங்கள். அவர்கள் உணவைத் தேடவும், இரவைக் கழிப்பதற்காக அக்கம் பக்கத்து நகரங்களிலும், பண்ணைகளிலும் இடம் தேடவும் வேண்டும்” என்றார்கள். ஆனால் இயேசு சீஷர்களை நோக்கி, “அவர்கள் உண்ணும்படியாக எதையாவது நீங்கள் கொடுங்கள்” என்றார். சீஷர்கள் “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே உள்ளன. இங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாங்கள் உணவு வாங்கி வர முடியுமா?” என்று கேட்டனர். (அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தனர்.) இயேசு தன் சீஷர்களிடம், “மக்களிடம் ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக அமரும்படி கூறுங்கள்” என்றார். சீஷர்களும் அவ்வாறே கூற எல்லா மக்களும் அதன்படியே அமர்ந்தனர். அப்போது இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்தார். இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்னர் இயேசு உணவைப் பகிர்ந்து தன் சீஷர்களிடம் கொடுத்து, அவ்வுணவை மக்களுக்குக் கொடுக்குமாறு கூறினார். எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். நிரம்ப உணவும் எஞ்சியது. சாப்பிடாது எஞ்சியதை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர்.