லூக்கா 9:1-50

லூக்கா 9:1-50 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒன்றாய்க் கூப்பிட்டு, பிசாசுகளையெல்லாம் துரத்தவும், நோய்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையையும், அதிகாரத்தையும் கொடுத்தார். அத்துடன், இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கிக்கவும், நோயுள்ளவர்களை குணமாக்கவும், அவர் அவர்களை அனுப்பினார். இயேசு அவர்களிடம்: “பயணத்திற்கென்று ஒன்றையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஊன்றுகோலையோ, பையையோ, உணவையோ, பணத்தையோ, மாற்று உடையையோ, கொண்டுபோக வேண்டாம். நீங்கள் எந்த வீட்டிற்குள் போகிறீர்களோ, அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும்வரை, அங்கேயே தங்கியிருங்கள். அங்கேயுள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், நீங்கள் அவர்களின் பட்டணத்தைவிட்டுப் போகும்போது, அவர்களுக்கு எதிரான சாட்சியாக, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிப் போடுங்கள்” என்றார். அப்படியே அவர்கள் புறப்பட்டு, கிராமங்கள்தோறும், எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவித்து, மக்களைச் சுகப்படுத்தினார்கள். சிற்றரசன் ஏரோது, நடந்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டான். யோவான் இறந்தோரிலிருந்து உயிரோடு திரும்பவும் எழுப்பப்பட்டிருக்கிறான் என்று சிலர் சொன்னதால், அவன் குழப்பமடைந்தான். வேறுசிலர் எலியா தோன்றியிருக்கிறார் என்றும், இன்னும் சிலர் முற்காலத்திலிருந்த இறைவாக்கினர் ஒருவர் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் ஏரோது, “நான் யோவானைச் சிரச்சேதம் செய்தேனே. இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்படுகிறேனே, இவன் யார்?” என்று சொல்லி, அவரைப் பார்க்க முயற்சி செய்தான். அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்ததை இயேசுவுக்கு அறிவித்தார்கள். இயேசு அவர்களையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா எனப்பட்ட ஒரு பட்டணத்திற்கு சென்றார். ஆனால் மக்கள் அதை அறிந்து, கூட்டமாய் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்களை வரவேற்று, இறைவனுடைய அரசைப்பற்றி அவர்களுடன் பேசி, குணமடைய வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். மாலை வேளையானபோது பன்னிரண்டு பேர்களும் அவரிடம் வந்து, “கூடியிருக்கும் இந்த மக்களை அனுப்பிவிடும். அவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய், சாப்பாட்டையும் இருப்பிடத்தையும் தேடிக்கொள்ளட்டும். நாம் சற்று தூரமான ஒரு இடத்தில் இருக்கிறோமே” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். அவர்கள் அதற்கு, “எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன. இல்லையென்றால், நாங்கள் போய் இந்த மக்களுக்கெல்லாம் உணவை வாங்கவேண்டும்” என்றார்கள். அங்கே ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். ஆனால் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “அவர்களை ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக உட்கார வையுங்கள்” என்றார். சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து, மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாகப் பங்கிட்டார். பின்பு அவர், அந்தத் துண்டுகளைச் சீடர்களிடத்தில் கொடுத்து, மக்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். ஒருமுறை இயேசு தனிமையாக மன்றாடிக்கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும், அவருடனே இருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அவர்கள் அதற்கு பதிலாக, “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகுகாலத்திற்கு முன்வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர்பெற்று வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். பேதுரு அதற்கு, “நீர் இறைவனின் கிறிஸ்து!” என்றான். இயேசு அவர்களிடம், “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார். பின்பு இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டும். நான் யூதரின் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படவும், கொல்லப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழும்பவும் வேண்டும்” என்றார். பின்பு இயேசு, அவர்கள் எல்லோரையும் நோக்கி, “யாராவது என் பின்னே வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தினந்தோறும் தம் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் யாரும் அதை இழந்துபோவார்கள். என் நிமித்தம் தம் உயிரை இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். யாராவது முழு உலகத்தையும் தமக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனாலோ அல்லது பறிகொடுத்தாலோ, அதனால் அவர்களுக்குப் பலன் என்ன? யாராவது என்னைக்குறித்தும் என் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்பட்டால், மானிடமகனாகிய நானும் எனது மகிமையிலும் எனது தந்தையின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது, அவர்களைக்குறித்து வெட்கப்படுவேன். “இங்கே நிற்கிறவர்களில் சிலர் இறைவனுடைய அரசைக் காணும்முன் மரணமடைய மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்” என்றார். இயேசு இதைச் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குபின், அவர் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் தன்னுடனே கூட்டிக்கொண்டு, மன்றாடும்படி ஒரு மலைக்குச் சென்றார். அவர் மன்றாடிக்கொண்டிருக்கையில், அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது. அவருடைய உடைகள், வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா ஆகிய இரண்டுபேர்களும் மகிமையான பிரகாசத்தில் தோன்றி, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். எருசலேமில் சீக்கிரமாய் இயேசு நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவனுடைய கூட்டாளிகளும், கடுமையான தூக்க மயக்கத்திலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தூக்கம் தெளிந்து விழித்தபோது, அவருடைய மகிமையையும், அவருடன் நின்ற இரண்டுபேரையும் கண்டார்கள். அவ்விருவர் இயேசுவைவிட்டுப் புறப்படும்போது, பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது, நாம் இங்கு மூன்று கூடாரங்களை அமைப்போம். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்” என்றான். அவன் தான் சொல்வது என்னவென்று அறியாமல் சொன்னான். பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு மேகம் தோன்றி அவர்களை மூடிக்கொண்டது. அம்மேகம் சூழ்ந்தபோது அவர்கள் பயந்தார்கள். அப்பொழுது மேகத்திலிருந்து, “இவர் என் மகன், நான் தெரிந்துகொண்டவர்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரலைக் கேட்டபொழுது, இயேசு மட்டும் இருப்பதை சீடர்கள் கண்டார்கள். அவர்களோ, இந்த சம்பவத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்கள். தாங்கள் கண்டதை அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை. மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெருங்கூட்டம் அவரைச் சந்தித்தது. மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரைக் கூப்பிட்டு, “போதகரே, என் பிள்ளையை வந்து பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை. ஒரு தீய ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாய் நுரைக்கிறது. அது அவனைவிட்டுப் போகாமல் அலைக்கழிக்கிறது. அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர்களால் முடியவில்லை” என்றான். அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத, சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்று அந்த பிள்ளையின் தகப்பனிடம் சொன்னார். அந்தச் சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பிசாசு அவனை வலிப்புக்குள்ளாக்கித் தரையில் தள்ளி வீழ்த்தியது. இயேசுவோ அந்த அசுத்த ஆவியை அதட்டி சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார். அவர்கள் எல்லோரும், இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தனது சீடர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்லப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார். அவர்களோ அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததினால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக்குறித்து அவரிடம் கேட்கவும் தயங்கினார்கள். சீடர்களுக்கிடையில் தங்களில் யார் பெரியவன் என்பதை பற்றி ஒரு வாக்குவாதமும் எழுந்தது. இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார். பின்பு அவர் சீடர்களிடம், “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்கிறவர்கள் யாரோ, அவர்கள் என்னையே ஏற்றுக்கொள்கிறார்கள்; என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் எல்லோரிலும் மிகவும் சிறியவராய் இருக்கிறவர்களே மிகப்பெரியவர்களாய் இருக்கிறார்கள்” என்றார். அப்பொழுது யோவான் இயேசுவிடம், “ஆண்டவரே, ஒருவன் உமது பெயரில் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் நம்மில் ஒருவனல்லாதபடியால், நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான். அதற்கு இயேசு, “அவனைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், நமக்கு விரோதமாய் இராதவன், நமது சார்பாகவே இருக்கிறான்” என்றார்.

லூக்கா 9:1-50 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் வரவழைத்து, எல்லாப் பிசாசுகளைத் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், நோயாளிகளை குணமாக்கவும் அவர்களை அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: பயணத்தின்போது தடியையோ பையையோ அப்பத்தையோ பணத்தையோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு உடைகளைக் கொண்டுபோகவும் வேண்டாம் என்றார். எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாததற்கு சாட்சியாக உங்களுடைய கால்களில் படிந்துள்ள தூசியை உதறிப்போடுங்கள் என்றார். புறப்பட்டுப்போய், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணமாக்கினார்கள். அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட எல்லாவற்றையும் கேள்விப்பட்டதுமட்டுமல்லாமல்; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான் என்றும், சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து: யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான். அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனிமையாக இருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தின் வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார். மக்கள் அதை அறிந்து, அவர் பின்னால் போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து அவர்களோடு பேசி, சுகமடையவேண்டும் என்றிருந்தவர்களைச் சுகப்படுத்தினார். மாலைநேரத்தில், பன்னிரண்டுபேரும், அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்திரமாக இருப்பதினால், மக்கள், சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும்போய்த் தங்குவதற்கும், உணவுப்பொருள்களை வாங்கிக்கொள்வதற்கும் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள். அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி சீடர்களிடத்தில் கொடுத்தார். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான உணவுப்பொருட்கள் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுக்கப்பட்டது. பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான். அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார். மேலும் மனிதகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார். பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; எனக்காகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன? என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார். இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும் முன்னே, மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது. அன்றியும் மோசே எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடு காணப்பட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள், அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவனோடிருந்தவர்களும் தூக்கமயக்கமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடு நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள். அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகும்போது, பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது என்னவென்று தெரியாமல் சொன்னான். இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள். அப்பொழுது: இவர் நான் தெரிந்துகொண்ட என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள். மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள். அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான். சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது. அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான். இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும்குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள். பின்பு தங்களுக்குள் யார் பெரியவனாக இருப்பான் என்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டானது. இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தம் அருகில் நிறுத்தி, அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்கள் எல்லோருக்குள்ளும் எவன் சிறியவனாக இருக்கிறானோ அவனே பெரியவனாக இருப்பான் என்றார். அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களோடுகூட உம்மைப் பின்பற்றாததினால், அவனைத் தடுத்தோம் என்றான். அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் என்றார்.

லூக்கா 9:1-50 பரிசுத்த பைபிள் (TAERV)

பன்னிரண்டு சீஷர்களையும் இயேசு ஒருங்கே வருமாறு அழைத்தார். நோய்களைக் குணமாக்கும் வல்லமையையும், பிசாசுகளை விரட்டும் அதிகாரத்தையும் அவர்களுக்கு அளித்தார். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், நோயுற்றோரைக் குணமாக்கவும் இயேசு சீஷர்களை அனுப்பினார். அவர் சீஷர்களை நோக்கி, “நீங்கள் பயணம் செய்யும்போது கைத்தடியை எடுக்காதீர்கள். பையையோ, உணவையோ, பணத்தையோ எடுத்துச் செல்லாதீர்கள். நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வீட்டினுள் நுழைந்தால், புறப்படும் நாள்வரைக்கும் அங்கேயே தங்கி இருங்கள். ஏதாவது நகரத்து மக்கள் உங்களை வரவேற்காவிடில், அந்த நகரத்திற்கு வெளியே போய் உங்கள் பாதத்தில்பட்ட தூசிகளை உதறிவிடுங்கள். இது அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்” என்றார். பின்பு சீஷர்கள் அங்கிருந்துச் சென்றனர். பல நகரங்கள் வழியாகப் பயணம் செய்தனர். எல்லா இடங்களிலும் நற்செய்தியைக் கூறி மக்களைக் குணப்படுத்தினர். இவ்வாறு நடந்துகொண்டிருந்த எல்லாச் செய்திகளையும் ராஜாவாகிய ஏரோது கேள்விப்பட்டான். சிலர் “யோவான் ஸ்நானகன் இறந்த பின்பு மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளான்” எனவும், வேறு சிலர், “எலியா மீண்டும் வந்துள்ளான்” எனவும் வேறு சிலர், “பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுள் ஒருவர் உயிரோடு எழுந்துள்ளார்” எனவும் கூறியதால் அவன் குழப்பமடைந்திருந்தான். ஏரோது, “யோவானின் தலையை வெட்டினேன். நான் கேள்விப்படும் இக்காரியங்களைச் செய்கின்ற மனிதன் யார்?” என்று சொன்னான். ஏரோதும் இயேசுவைப் பார்க்கத் தொடர்ந்து முயன்று வந்தான். சீஷர்கள் திரும்பி வந்ததும் தம் பயணத்தின்போது அவர்கள் செய்த செயல்கள் அனைத்தையும் இயேசுவிடம் சொன்னார்கள். பின்னர், இயேசு அவர்களை பெத்சாயிதா என்னும் நகரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இயேசுவும் சீஷர்களும் தனிமையில் ஒருமித்திருக்க முடிந்தது. ஆனால் இயேசு சென்ற இடத்தை மக்கள் அறிய நேர்ந்தது. அவர்கள் அவரைப் பின்பற்றி வந்தனர். இயேசு அவர்களை வரவேற்று தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து அவர்களுக்குக் கூறினார். நோயுற்றிருந்த மக்களைக் குணப்படுத்தினார். மதியத்திற்குப் பின்பு பன்னிரண்டு சீஷர்களும் இயேசுவிடம் வந்து, “இது மக்கள் வசிக்கிற இடம் அல்ல. மக்களை அனுப்பிவிடுங்கள். அவர்கள் உணவைத் தேடவும், இரவைக் கழிப்பதற்காக அக்கம் பக்கத்து நகரங்களிலும், பண்ணைகளிலும் இடம் தேடவும் வேண்டும்” என்றார்கள். ஆனால் இயேசு சீஷர்களை நோக்கி, “அவர்கள் உண்ணும்படியாக எதையாவது நீங்கள் கொடுங்கள்” என்றார். சீஷர்கள் “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே உள்ளன. இங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாங்கள் உணவு வாங்கி வர முடியுமா?” என்று கேட்டனர். (அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தனர்.) இயேசு தன் சீஷர்களிடம், “மக்களிடம் ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக அமரும்படி கூறுங்கள்” என்றார். சீஷர்களும் அவ்வாறே கூற எல்லா மக்களும் அதன்படியே அமர்ந்தனர். அப்போது இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்தார். இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்னர் இயேசு உணவைப் பகிர்ந்து தன் சீஷர்களிடம் கொடுத்து, அவ்வுணவை மக்களுக்குக் கொடுக்குமாறு கூறினார். எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். நிரம்ப உணவும் எஞ்சியது. சாப்பிடாது எஞ்சியதை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர். ஒருமுறை இயேசு தனிமையாகப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அனைவரும் அங்கே வந்தனர். இயேசு அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று பேசிக்கொள்கிறார்கள்” எனக் கேட்டார். சீஷர்கள், “சிலர் யோவான் ஸ்நானகன் எனக் கூறுகின்றனர். பிறர் எலியா என்கிறார்கள். மற்றும் சிலர் நீங்கள் பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து உயிரோடு எழுந்துள்ள ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கின்றனர்.” எனப் பதில் கூறினர். அப்போது இயேசு அவரது சீஷர்களை நோக்கி “நீங்கள் என்னை யார் என நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். பேதுரு, “நீர் தேவனிடமிருந்து வந்த கிறிஸ்து” என்று பதிலளித்தான். பிறருக்கு இதனைச் சொல்லாதபடிக்கு இயேசு அவர்களை எச்சரித்தார். பின்பு இயேசு, “மனிதகுமாரன் பல விஷயங்களில் துன்புற வேண்டும். மூத்த யூதத் தலைவர்களும், முக்கியமான போதகர்களும், வேதபாரகரும் அவரை நிராகரிப்பர். மனித குமாரன் கொல்லப்படுவார். ஆனால் மூன்று நாட்களுக்குப் பின்னர் மரணத்தினின்று உயிர்த்தெழுவார்” என்றார். தொடர்ந்து அவர்களிடம் இயேசு, “என்னைப் பின்பற்றிவர யாரேனும் விரும்பினால், அவன் தனக்கு விருப்பமான செயல்களுக்கு மறுப்புச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் துயரங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும். தனது உயிரைக் காப்பாற்ற விரும்பும் மனிதன் அதை இழந்துபோவான். தனது உயிரை எனக்காகக் கொடுக்கிற ஒவ்வொரு மனிதனும் அதைக் காப்பாற்றிக்கொள்வான். ஒருவன் அழிந்துபோன நிலையில் இருந்தால் உலகம் முழுவதும் அவனுடையதாக இருந்தாலும் அதனால் எந்தப் பயனுமில்லை. ஒருவன் என்னைக் குறித்தோ, அல்லது என் போதனையைக் குறித்தோ வெட்கப்பட்டால், நான் எனது மகிமையோடும், பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களின் மகிமையோடும் வருகைதரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்கின்றேன். இங்கு நிற்பவர்களில் சிலர் தாம் மரணமடைவதற்கு முன் தேவனுடைய இராஜ்யத்தைக் காண்பார்கள்” என்றார். இச்செய்திகளை இயேசு கூறினதற்கு எட்டு நாட்களுக்குப் பின்னர், அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்வதற்காக ஒரு மலையின்மீது ஏறினார். இயேசு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது அவரது முகம் மாற்றமடைந்தது. அவரது ஆடைகள் ஒளி விடும் வெண்மையாக மாறின. பின்னர் இரண்டு மனிதர்கள் இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசேயும், எலியாவும் ஆவர். மோசேயும் எலியாவும் கூட ஒளி பொருந்தியோராக காணப்பட்டனர். எருசலேமில் நிகழவிருக்கும் இயேசுவின் மரணத்தைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பேதுருவும் மற்றவர்களும் உறங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் விழித்து இயேசுவின் மகிமையைக் கண்டனர். இயேசுவோடுகூட நின்றுகொண்டிருந்த அந்த இரண்டு மனிதர்களையும் அவர்கள் பார்த்தனர். மோசேயும், எலியாவும் பிரிந்து செல்லும்போது பேதுரு, “குருவே, நாம் இங்கிருப்பது நல்லது. நாங்கள் இங்கு மூன்று கூடாரங்களை, ஒன்று உமக்காகவும் ஒன்று மோசேக்காகவும், ஒன்று எலியாவுக்காகவும், அமைப்போம்” என்று கூறினான். (பேதுரு தான் சொல்லிக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டிருக்கவில்லை) இவ்வாறு பேதுரு சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் அவர்களைச் சூழ்ந்தது. மேகம் சூழ்ந்ததும் பேதுரு, யாக்கோபு, யோவான், ஆகியோர் பயந்தனர். மேகத்தினின்று ஒரு அசரீரி, “இவர் எனது குமாரன். நான் தேர்ந்துகொண்டவர் இவரே, இவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றது. அசரீரி முடிந்ததும் இயேசு மட்டுமே அங்கிருந்தார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் எதுவும் பேசவில்லை. அவர்கள் பார்த்தவற்றைக் குறித்து ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை. மறுநாள் மலையிலிருந்து இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இறங்கி வந்தனர். ஒரு பெரிய கூட்டம் இயேசுவை சந்தித்தது. அக்கூட்டத்தில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே! தயவு செய்து வந்து என் மகனைப் பாருங்கள். அவன் எனக்கு ஒரே குமாரன். பிசாசிடம் இருந்து ஓர் அசுத்த ஆவி என் மகனைப் பற்றிக்கொள்ளும்போது அவன் கத்துகிறான். அவன் தனது நிலையை இழக்கும்போது வாயிலிருந்து நுரைதள்ளுகிறது. அசுத்த ஆவி அவனைக் காயப்படுத்தி, அவனை எப்போதும் விடாமல் துன்புறுத்துகிறது. உங்கள் சீஷர்களிடம் என் மகனை விட்டு அந்த அசுத்த ஆவி நீங்குமாறு செய்யக் கெஞ்சினேன். அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை” என்று உரக்கக் கூறினான். இயேசு, “இப்போது வாழும் மக்களாகிய உங்களுக்கு விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை தவறானதாகக் காணப்படுகிறது. எத்தனை காலம் நான் உங்களோடு தங்கியும், உங்களைப் பொறுத்துக்கொண்டும் இருக்கட்டும்?” என்று பதிலளித்தார். பின்பு அம்மனிதனை நோக்கி, “உனது மகனை இங்கே கொண்டு வா” என்றார். அந்தப் பையன் வந்துகொண்டிருக்கும் போது அசுத்த ஆவி அவனைக் கீழே தள்ளிற்று. அந்தப் பையன் தனது நிலையையிழந்து நடுங்கிக்கொண்டிருந்தான். ஆனால் இயேசு அந்த அசுத்த ஆவி அவனைவிட்டு வெளியேறக் கண்டிப்புடன் கட்டளையிட்டார். அப்பையன் நலம் பெற்றான். இயேசு பையனைத் தந்தையிடம் ஒப்படைத்தார். தேவனின் மகத்துவத்தையும் பெருமையையும் கண்டு எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தார்கள். இயேசு செய்த எல்லா செயல்களையும் கண்டு இன்னும் மக்கள் மிகுந்த ஆச்சரியமுற்றனர். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை நோக்கி, “நான் உங்களுக்கு இப்போது கூறப்போகிற செய்திகளை மறவாதீர்கள். மனிதகுமாரன் சில மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொடுக்கப்படுவார்” என்றார். ஆனால் அவர்களோ அவர் கூறியதன் பொருளை உணர்ந்துகொள்ளவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளாதபடி அதன் பொருள் அவர்களுக்கு மறைமுகமானதாய் இருந்தது. அவர்களோ இயேசு கூறியதன் பொருளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளப் பயந்தார்கள். இயேசுவின் சீஷர்கள் தமக்குள் மிகவும் முக்கியமானவர் யார் என்பதைக் குறித்து விவாதிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் என்ன எண்ணிக்கொண்டிருந்தார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு ஒரு சிறிய குழந்தையை எடுத்துத் தன்னருகே, அதனை நிறுத்தினார். பின்பு தனது சீஷர்களை நோக்கி, “என் பெயரினால் ஒருவன் ஒரு சிறிய குழந்தையை இதுபோல ஏற்றுக்கொண்டால் அவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான். என்னை ஏற்றுக்கொள்ளும்போது அம்மனிதன் என்னை அனுப்பினவரை (தேவனையும்) ஏற்றுக்கொள்கிறான். உங்களில் மிகவும் தாழ்மையுள்ள மனிதன் எவனோ, அவனே மிகவும் முக்கியமான மனிதன் ஆவான்” என்றார். “குருவே, மனிதர்களை விட்டு வெளியேறும்படியாக உம்முடைய பெயரினால் ஒரு மனிதன் பிசாசுகளை வற்புறுத்திக்கொண்டிருந்தான். அவன் நம் கூட்டத்தைச் சாராதவனாகையால் அவன் அதைச் செய்யாதபடி நிறுத்த நாங்கள் கூறினோம்” என்றான் யோவான். இயேசு யோவானை நோக்கி, “அவனைத் தடுக்காதீர்கள். ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக இல்லையென்றால் அவன் உங்களைச் சார்ந்தவன்” என்றார்.

லூக்கா 9:1-50 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும்வேண்டாம். எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்ததூசியை உதறிப்போடுங்கள் என்றார். அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள். அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட யாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும், சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து: யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்கவிரும்பினான். அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார். சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள். ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடை நிறைய எடுக்கப்பட்டது. பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான். அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். மேலும் மனுஷகுமாரன் பலபாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார். பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார். இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். அவர் ஜெபம்பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி, அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள். அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான். இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள். அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று. அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள். மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள். அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான். ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது. அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது. அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள். பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று. இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி, அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார். அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான். அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.