லூக்கா 8:40-48

லூக்கா 8:40-48 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு திரும்பிவந்தபோது, அவருக்காக காத்துக்கொண்டிருந்த மக்கள் அவரை வரவேற்றனர். அப்பொழுது ஜெப ஆலயத் தலைவனான யவீரு என்னும் பெயருடைய ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவரைத் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கெஞ்சினான். ஏனெனில், அவனுடைய ஒரே மகளான பன்னிரண்டு வயதுடைய சிறுமி மரணத் தருவாயில் இருந்தாள். இயேசு வழியே அவனுடன் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது. அக்கூட்டத்தில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் தன் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் அவளை எவராலும் குணமாக்க முடியவில்லை. அவள் இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது. அப்பொழுது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். அனைவரும் மறுத்தனர். அப்போது, பேதுரு அவரிடம், “ஐயா, மக்கள் கூட்டமாய்க் கூடி உம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே” என்றான். ஆனால் இயேசுவோ, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டிருக்கிறார்; என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை நான் அறிவேன்” என்றார். அப்பொழுது அந்தப் பெண், தான் மறைந்திருக்க முடியாதென்று கண்டு, நடுங்கிக்கொண்டுவந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவள் எல்லா மக்களுக்கு முன்பாகவும், தான் அவரைத் தொட்ட காரணத்தையும், தான் உடனே குணமடைந்ததையும் அறிவித்தாள். அப்பொழுது இயேசு அவளிடம், “மகளே, உன் விசுவாசம் உன்னை குணப்படுத்தியது. சமாதானத்தோடே போ” என்றார்.

லூக்கா 8:40-48 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பெயருள்ள ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே மகள் மரணவேதனையில் இருந்தபடியால், தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகும்பொழுது மக்கள்கூட்டம் அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சுகமாக்கப்படாமலிருந்த ஒரு பெண், அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது. அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.

லூக்கா 8:40-48 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றபோது மக்கள் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவருக்காகக் காத்திருந்தனர். யவீரு என்னும் பெயருள்ள மனிதன் இயேசுவிடம் வந்தான். ஜெப ஆலயத்தின் தலைவனாக யவீரு இருந்தான். இயேசுவின் பாதங்களில் விழுந்து வணங்கி யவீரு தன் வீட்டுக்கு வருகை தருமாறு அவரை வேண்டினான். யவீருக்கு ஒரே ஒரு குமாரத்தி இருந்தாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதாகி இருந்தது. அவள் இறக்கும் தருவாயில் இருந்தாள். யவீருவின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது எல்லா பக்கங்களிலிருந்தும் இயேசுவை மக்கள் சூழ்ந்து கொண்டனர். இரத்தப் போக்கினால் பன்னிரண்டு ஆண்டுகள் துன்புற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் அவர்களுள் ஒருத்தி ஆவாள். மருத்துவர்களிடம் சென்று அவள் தனது பணத்தை எல்லாம் செலவழித்திருந்தாள். ஆனால் எந்த மருத்துவராலும் அவளைக் குணமாக்க இயலவில்லை. அப்பெண் இயேசுவுக்குப் பின்னாக வந்து அவரது அங்கியின் கீழ்ப் பகுதியைத் தொட்டாள். அந்நேரமே அவளின் இரத்தப் போக்கு நின்றுவிட்டது. அப்போது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். எல்லாருமே தாம் இயேசுவைத் தொடவில்லை என்று கூறினர். பேதுரு, “குருவே! உங்களைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது” என்றான். அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டது உண்மை. என்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன்” என்றார். தன்னால் ஒளிக்க முடியாததை உணர்ந்த பெண், நடுங்கியவளாய் இயேசுவின் முன்னே விழுந்து வணங்கினாள். மக்கள் அனைவரும் கேட்கும்படி தான் இயேசுவைத் தொட்டதன் காரணத்தைக் கூறினாள். பின்னர் தான் இயேசுவைத் தொட்டவுடன் குணமடைந்ததையும் சொன்னாள். இயேசு அவளை நோக்கி, “என் மகளே, நீ விசுவாசித்ததால் குணமாக்கப்பட்டாய். சமாதானத்தோடு போ” என்றார்.

லூக்கா 8:40-48 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்