லூக்கா 8:26-39

லூக்கா 8:26-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் கலிலேயா கடலின் மறுகரையிலுள்ள கதரேனருடைய நாட்டிற்குப் படகில் சென்றார்கள். இயேசு கரையில் இறங்கியபோது, அந்தப் பட்டணத்திலிருந்து பிசாசு பிடித்த ஒருவன் அவருக்கு எதிர்ப்பட்டான். அவன் நீண்டகாலமாக உடைகள் உடுத்தாதவனும், வீட்டில் வாழாதவனுமாய், கல்லறைகளிலேயே தங்கியிருந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, கூச்சலிட்டு, அவருடைய பாதத்தில் விழுந்தான். அவன் அவரிடம், “இயேசுவே, மகா உன்னதமான இறைவனின் மகனே, என்னிடம் உமக்கு என்ன வேண்டும்? நான் உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன், என்னைத் துன்புறுத்தவேண்டாம்” என்று உரத்த குரலில் சத்தமிட்டுச் சொன்னான். ஏனெனில், அவனைவிட்டு வெளியே வரும்படி, இயேசு அந்தத் தீய ஆவிக்குக் கட்டளையிட்டிருந்தார். பலமுறை அது அவனைப் பிடித்திருந்தது. அதனால் அவனுடைய கையையும், காலையும் சங்கிலியால் கட்டி, காவலில் வைத்திருந்த போதுங்கூட, அவன் சங்கிலிகளை உடைத்து எறிந்து விடுவான். அந்த தீய ஆவியினால் அவன் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு பிசாசு பிடித்தருந்தவனை, “உனது பெயர் என்ன?” என்று கேட்டார். அவன் அதற்குப் பதிலாக, “லேகியோன்” என்றான். ஏனெனில், பல தீய ஆவிகள் அவனுக்குள் புகுந்திருந்தன. தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன. அங்கிருந்த மலைப்பகுதியில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. பிசாசுகள் தாங்கள் அந்தப் பன்றிகளுக்குள்ளே போவதற்கு, இயேசு அனுமதிக்கவேண்டும் என்று, அவரைக் கெஞ்சிக்கேட்டன. அப்படியே அவர் அவைகளுக்கு அனுமதி கொடுத்தார். பிசாசுகள், அவனைவிட்டுப் புறப்பட்டுப் பன்றிகளுக்குள்ளே புகுந்தன. அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கீழே பாய்ந்து, ஏரியில் விழுந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பன்றிகளுக்கு நடந்ததைக் கண்டபோது, ஓடிப்போய் பட்டணத்தில் உள்ளவர்களுக்கும், நாட்டுப்புறத்தில் உள்ளவர்களுக்கும் அதை அறிவித்தார்கள். என்ன நடந்தது என அறியும்படி, மக்கள் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், உடை உடுத்தி மனத்தெளிவடைந்தவனாய், இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயந்தார்கள். சம்பவித்ததைக் கண்டவர்கள், பிசாசு பிடித்திருந்தவன் எவ்விதமாய் குணமடைந்தான் என்று அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது கதரேனர் நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் பயமடைந்ததினால், தங்களைவிட்டுப் போய்விடும்படி இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். எனவே, அவர் படகில் ஏறி புறப்பட்டுப் போனார். பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், தானும் இயேசுவுடனேகூடப் போகும்படி அவரைக் கெஞ்சிக்கேட்டான். ஆனால் இயேசு அவனிடம், “நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், இறைவன் உனக்கு செய்ததையெல்லாம் அறிவி” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார். அப்படியே அவன் புறப்பட்டுப், பட்டணத்திலுள்ள எல்லோருக்கும் இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதைக் குறித்துச் சொன்னான்.

லூக்கா 8:26-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள். அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாகப் பிசாசுகள் பிடித்தவனும், ஆடையணியாதவனும், வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவனுமாக இருந்த அந்தப் பட்டணத்து மனிதன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தமாகச் சொன்னான். அந்த அசுத்தஆவி அவனைவிட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி பலகாலமாக அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. அந்த இடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி மக்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனிதன் ஆடை அணிந்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவன் சுகமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் எல்லோரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படகில் ஏறி, திரும்பிப்போனார். பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் சொல் என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான்.

லூக்கா 8:26-39 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் கலிலேயாவில் இருந்து ஓர் ஏரியைக் கடந்து சென்றனர். கதரேனர் மக்கள் வாழ்கின்ற பகுதியை வந்தடைந்தனர். இயேசு படகில் இருந்து இறங்கிய போது, அந்த நகரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அம்மனிதன் பிசாசுகள் பிடித்தவனாக இருந்தான். பல காலமாக அவன் ஆடைகள் எதுவும் அணியவில்லை. வீட்டில் வசிக்காமல் இறந்தவர்களைப் புதைத்த குகைகளில் வசித்தான். பிசாசு அவனை அடிக்கடி ஆக்கிரமித்தது. அம்மனிதனைச் சிறையில் அடைந்தனர். அவனது கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டன. ஆனால் அம்மனிதன் சங்கிலிகளை அறுத்து விலக்கிவிடுவான். மக்களே இல்லாத இடங்களுக்கு அம்மனிதனை அவனுக்குள் இருந்த பிசாசு இழுத்துச் சென்றது. இயேசு அந்த அசுத்த ஆவிக்கு அம்மனிதனை விட்டு வெளியே வருமாறு கட்டளையிட்டார். அம்மனிதன் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, உரத்த குரலில், “இயேசுவே, உன்னத தேவனின் குமாரனே! நீர் என்னிடம் எதிர்ப்பார்ப்பதென்ன? தயவுசெய்து என்னைக் கொடுமைப்படுத்தாதிரும்” என்றான். இயேசு அவனை நோக்கி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அம்மனிதன், “லேகியோன்” என்று பதிலளித்தான். (அவன் பல பிசாசுகள் தன்னைப் பிடித்திருந்தமையால் தனது பெயர் “லேகியோன்” என்று குறிப்பிட்டான்) நித்தியமான இருளுக்குத் தங்களை அனுப்பாதவாறு பிசாசுகள் இயேசுவை வேண்டிக்கொண்டன. அம்மலையின் மீது ஒரு கூட்டமான பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. பிசாசுகள் அப்பன்றிக் கூட்டத்தில் செல்வதற்குத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவை வேண்டின. இயேசு அவ்வாறே செய்ய அனுமதித்தார். பிசாசுகள் அம்மனிதனைவிட்டு வெளியேறி பன்றிகளின் உள்ளே புகுந்தன. பன்றிகள் பாறைகளில் உருண்டு ஏரிக்குள் விழுந்தன. எல்லாப் பன்றிகளும் மூழ்கி மடிந்தன. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் நடந்ததைப் பார்த்து அங்கிருந்து ஓடிப்போனார்கள். அவர்கள் நடந்ததை வயற்புறங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று மக்களுக்குக் கூறினர். நடந்ததைக் காண விரும்பிய மக்கள் இயேசுவிடம் சென்றனர். அவர்கள் இயேசுவை நெருங்கியபோது இயேசுவின் பாதத்தருகே அம்மனிதன் உட்கார்ந்து இருக்கக் கண்டனர். அம்மனிதன் ஆடைகள் அணிந்தவனாக, மனநலம் பெற்றவனாகக் காணப்பட்டான். பிசாசுகள் அவனைவிட்டு நீங்கி இருந்தன. அதைக் கண்டு அச்சம் கொண்டனர் மக்கள். நடந்தவற்றைக் கண்ட மக்கள் பிறரிடம் இயேசு அந்த மனிதனைக் குணமாக்கிய வகையைக் கூறினர். இயேசுவை அங்கிருந்து போய்விடுமாறு கெதரேன பகுதி மக்கள் அனைவரும் கூறினர். அவர்கள் மிகவும் பயந்தவர்களாகக் காணப்பட்டனர். எனவே இயேசு படகில் ஏறி, கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். இயேசுவால் குணம் பெற்ற மனிதன் தானும் கூடவே வர விரும்புவதாக அவரை வேண்டினான். ஆனால் இயேசு அந்த மனிதனிடம், “வீட்டுக்குப்போய் தேவன் உனக்குச் செய்ததைப் பிறருக்குக் கூறு” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார். ஆகவே அவன் இயேசு தனக்குச் செய்ததை நகரமெங்கும் சென்று மக்களுக்குக் கூறினான்.

லூக்கா 8:26-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள். அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டன. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார். பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.