லூக்கா 8:22-56

லூக்கா 8:22-56 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு நாள் இயேசு தம்முடைய சீடர்களிடம், “ஏரியின் மறுகரைக்குப் போவோம் வாருங்கள்” என்றார். அப்படியே அவர்கள், ஒரு படகில் ஏறிப் புறப்பட்டார்கள். அவர்கள் போய்க்கொண்டிருக்கையில், இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது புயல்காற்று ஏரியின்மேல் வீசியது. படகில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதால், அவர்கள் பெரிய ஆபத்துக்கு உள்ளானார்கள். அப்போது சீடர்கள் இயேசுவிடம் வந்து, அவரை எழுப்பி, “ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம்!” என்றார்கள். அவர் எழுந்து காற்றையும், கொந்தளிக்கும் தண்ணீரையும் கடிந்துகொண்டார்; புயல் தணிந்து, எல்லாம் அமைதியாயிற்று. அப்பொழுது அவர் தமது சீடர்களிடம், “உங்கள் விசுவாசம் எங்கே?” என்று கேட்டார். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “இவர் யாரோ? காற்றுக்கும், கடலுக்கும் கட்டளையிடுகிறார். அவையும் அவருக்குக் கீழ்ப்படிகின்றன” என்று பயத்துடனும், வியப்புடனும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கலிலேயா கடலின் மறுகரையிலுள்ள கதரேனருடைய நாட்டிற்குப் படகில் சென்றார்கள். இயேசு கரையில் இறங்கியபோது, அந்தப் பட்டணத்திலிருந்து பிசாசு பிடித்த ஒருவன் அவருக்கு எதிர்ப்பட்டான். அவன் நீண்டகாலமாக உடைகள் உடுத்தாதவனும், வீட்டில் வாழாதவனுமாய், கல்லறைகளிலேயே தங்கியிருந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, கூச்சலிட்டு, அவருடைய பாதத்தில் விழுந்தான். அவன் அவரிடம், “இயேசுவே, மகா உன்னதமான இறைவனின் மகனே, என்னிடம் உமக்கு என்ன வேண்டும்? நான் உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன், என்னைத் துன்புறுத்தவேண்டாம்” என்று உரத்த குரலில் சத்தமிட்டுச் சொன்னான். ஏனெனில், அவனைவிட்டு வெளியே வரும்படி, இயேசு அந்தத் தீய ஆவிக்குக் கட்டளையிட்டிருந்தார். பலமுறை அது அவனைப் பிடித்திருந்தது. அதனால் அவனுடைய கையையும், காலையும் சங்கிலியால் கட்டி, காவலில் வைத்திருந்த போதுங்கூட, அவன் சங்கிலிகளை உடைத்து எறிந்து விடுவான். அந்த தீய ஆவியினால் அவன் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு பிசாசு பிடித்தருந்தவனை, “உனது பெயர் என்ன?” என்று கேட்டார். அவன் அதற்குப் பதிலாக, “லேகியோன்” என்றான். ஏனெனில், பல தீய ஆவிகள் அவனுக்குள் புகுந்திருந்தன. தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன. அங்கிருந்த மலைப்பகுதியில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. பிசாசுகள் தாங்கள் அந்தப் பன்றிகளுக்குள்ளே போவதற்கு, இயேசு அனுமதிக்கவேண்டும் என்று, அவரைக் கெஞ்சிக்கேட்டன. அப்படியே அவர் அவைகளுக்கு அனுமதி கொடுத்தார். பிசாசுகள், அவனைவிட்டுப் புறப்பட்டுப் பன்றிகளுக்குள்ளே புகுந்தன. அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கீழே பாய்ந்து, ஏரியில் விழுந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பன்றிகளுக்கு நடந்ததைக் கண்டபோது, ஓடிப்போய் பட்டணத்தில் உள்ளவர்களுக்கும், நாட்டுப்புறத்தில் உள்ளவர்களுக்கும் அதை அறிவித்தார்கள். என்ன நடந்தது என அறியும்படி, மக்கள் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், உடை உடுத்தி மனத்தெளிவடைந்தவனாய், இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயந்தார்கள். சம்பவித்ததைக் கண்டவர்கள், பிசாசு பிடித்திருந்தவன் எவ்விதமாய் குணமடைந்தான் என்று அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது கதரேனர் நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் பயமடைந்ததினால், தங்களைவிட்டுப் போய்விடும்படி இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். எனவே, அவர் படகில் ஏறி புறப்பட்டுப் போனார். பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், தானும் இயேசுவுடனேகூடப் போகும்படி அவரைக் கெஞ்சிக்கேட்டான். ஆனால் இயேசு அவனிடம், “நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், இறைவன் உனக்கு செய்ததையெல்லாம் அறிவி” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார். அப்படியே அவன் புறப்பட்டுப், பட்டணத்திலுள்ள எல்லோருக்கும் இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதைக் குறித்துச் சொன்னான். இயேசு திரும்பிவந்தபோது, அவருக்காக காத்துக்கொண்டிருந்த மக்கள் அவரை வரவேற்றனர். அப்பொழுது ஜெப ஆலயத் தலைவனான யவீரு என்னும் பெயருடைய ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவரைத் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கெஞ்சினான். ஏனெனில், அவனுடைய ஒரே மகளான பன்னிரண்டு வயதுடைய சிறுமி மரணத் தருவாயில் இருந்தாள். இயேசு வழியே அவனுடன் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது. அக்கூட்டத்தில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் தன் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் அவளை எவராலும் குணமாக்க முடியவில்லை. அவள் இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது. அப்பொழுது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். அனைவரும் மறுத்தனர். அப்போது, பேதுரு அவரிடம், “ஐயா, மக்கள் கூட்டமாய்க் கூடி உம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே” என்றான். ஆனால் இயேசுவோ, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டிருக்கிறார்; என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை நான் அறிவேன்” என்றார். அப்பொழுது அந்தப் பெண், தான் மறைந்திருக்க முடியாதென்று கண்டு, நடுங்கிக்கொண்டுவந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவள் எல்லா மக்களுக்கு முன்பாகவும், தான் அவரைத் தொட்ட காரணத்தையும், தான் உடனே குணமடைந்ததையும் அறிவித்தாள். அப்பொழுது இயேசு அவளிடம், “மகளே, உன் விசுவாசம் உன்னை குணப்படுத்தியது. சமாதானத்தோடே போ” என்றார். இயேசு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் யவீருவின் வீட்டில் இருந்து ஒருவன் வந்தான். அவன் யவீருவிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் போதகரைத் தொந்தரவு செய்யவேண்டாம்” என்றான். இயேசு இதைக் கேட்டதும் யவீருவிடம், “பயப்படாதே; விசுவாசமுள்ளவனாய் மட்டும் இரு. அவள் பிழைப்பாள்” என்றார். அவர் யவீருவினுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோருடன், அந்தப் பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தவிர, வேறு ஒருவரையும் தன்னுடன் உள்ளே போக அவர் அனுமதிக்கவில்லை. இதற்கிடையில், அங்கிருந்த மக்களெல்லாரும் இறந்த சிறுமிக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “அழாதீர்கள். இவள் இறந்து போகவில்லை, தூங்குகிறாள்” என்றார். அவள் இறந்துபோனதை அறிந்திருந்த மக்கள், அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் இயேசு அவளுடைய கையைப் பிடித்து, “பிள்ளையே, எழுந்திரு!” என்றார். அப்பொழுது, அவளுடைய உயிர் திரும்பவும் வந்தது. உடனே அவள் எழுந்து உட்கார்ந்தாள். இயேசு அவர்களிடம், அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி சொன்னார். அவளுடைய பெற்றோர்கள் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களிடம், “நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார்.

லூக்கா 8:22-56 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள். படகில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது இயேசு தூங்கிவிட்டார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்களுடைய படகு தண்ணீரினால் நிறைந்து ஆபத்து ஏற்பட்டது. அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, சாகப்போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் தண்ணீரின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டானது. அவர் அவர்களை நோக்கி: உங்களுடைய விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள். அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாகப் பிசாசுகள் பிடித்தவனும், ஆடையணியாதவனும், வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவனுமாக இருந்த அந்தப் பட்டணத்து மனிதன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தமாகச் சொன்னான். அந்த அசுத்தஆவி அவனைவிட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி பலகாலமாக அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. அந்த இடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி மக்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனிதன் ஆடை அணிந்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவன் சுகமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் எல்லோரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படகில் ஏறி, திரும்பிப்போனார். பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் சொல் என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பெயருள்ள ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே மகள் மரணவேதனையில் இருந்தபடியால், தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகும்பொழுது மக்கள்கூட்டம் அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சுகமாக்கப்படாமலிருந்த ஒரு பெண், அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது. அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார். அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான். இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல், எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார். அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார். அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

லூக்கா 8:22-56 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு நாள் இயேசுவும், அவரது சீஷர்களும் ஒரு படகில் அமர்ந்தனர். இயேசு அவர்களிடம், “ஏரியைக் கடந்து அக்கரை செல்ல என்னோடு வாருங்கள்” என்றார். அவர்கள் அவ்வாறே செல்ல ஆரம்பித்தனர். படகு செல்கையில் இயேசு தூக்கத்தில் ஆழ்ந்தார். ஏரியின் மீது ஒரு பெரிய புயல் வீசிற்று. படகுக்குள் நீர் நிரம்ப ஆரம்பித்தது. அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டனர். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினர். அவர்கள், “ஐயா, ஐயா, நாம் மூழ்கிவிடப் போகிறோம்” என்றனர். இயேசு எழுந்தார். அவர் காற்றுக்கும், அலைகளுக்கும் கட்டளையிட்டார். உடனே காற்று ஓய்ந்தது. ஏரி அமைதியுற்றது. இயேசு தன்னோடு இருந்தவர்களை நோக்கி, “உங்கள் விசுவாசம் எங்கே?” என்றார். இயேசுவைப் பின்பற்றி வந்தவர்களோ அச்சமும் ஆச்சரியமும் கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் “இம்மனிதர் எப்படிப்பட்டவர்? காற்றுக்கும், நீருக்கும் கட்டளையிட அவை அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறிக் கொண்டனர். இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் கலிலேயாவில் இருந்து ஓர் ஏரியைக் கடந்து சென்றனர். கதரேனர் மக்கள் வாழ்கின்ற பகுதியை வந்தடைந்தனர். இயேசு படகில் இருந்து இறங்கிய போது, அந்த நகரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அம்மனிதன் பிசாசுகள் பிடித்தவனாக இருந்தான். பல காலமாக அவன் ஆடைகள் எதுவும் அணியவில்லை. வீட்டில் வசிக்காமல் இறந்தவர்களைப் புதைத்த குகைகளில் வசித்தான். பிசாசு அவனை அடிக்கடி ஆக்கிரமித்தது. அம்மனிதனைச் சிறையில் அடைந்தனர். அவனது கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டன. ஆனால் அம்மனிதன் சங்கிலிகளை அறுத்து விலக்கிவிடுவான். மக்களே இல்லாத இடங்களுக்கு அம்மனிதனை அவனுக்குள் இருந்த பிசாசு இழுத்துச் சென்றது. இயேசு அந்த அசுத்த ஆவிக்கு அம்மனிதனை விட்டு வெளியே வருமாறு கட்டளையிட்டார். அம்மனிதன் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, உரத்த குரலில், “இயேசுவே, உன்னத தேவனின் குமாரனே! நீர் என்னிடம் எதிர்ப்பார்ப்பதென்ன? தயவுசெய்து என்னைக் கொடுமைப்படுத்தாதிரும்” என்றான். இயேசு அவனை நோக்கி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அம்மனிதன், “லேகியோன்” என்று பதிலளித்தான். (அவன் பல பிசாசுகள் தன்னைப் பிடித்திருந்தமையால் தனது பெயர் “லேகியோன்” என்று குறிப்பிட்டான்) நித்தியமான இருளுக்குத் தங்களை அனுப்பாதவாறு பிசாசுகள் இயேசுவை வேண்டிக்கொண்டன. அம்மலையின் மீது ஒரு கூட்டமான பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. பிசாசுகள் அப்பன்றிக் கூட்டத்தில் செல்வதற்குத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவை வேண்டின. இயேசு அவ்வாறே செய்ய அனுமதித்தார். பிசாசுகள் அம்மனிதனைவிட்டு வெளியேறி பன்றிகளின் உள்ளே புகுந்தன. பன்றிகள் பாறைகளில் உருண்டு ஏரிக்குள் விழுந்தன. எல்லாப் பன்றிகளும் மூழ்கி மடிந்தன. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் நடந்ததைப் பார்த்து அங்கிருந்து ஓடிப்போனார்கள். அவர்கள் நடந்ததை வயற்புறங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று மக்களுக்குக் கூறினர். நடந்ததைக் காண விரும்பிய மக்கள் இயேசுவிடம் சென்றனர். அவர்கள் இயேசுவை நெருங்கியபோது இயேசுவின் பாதத்தருகே அம்மனிதன் உட்கார்ந்து இருக்கக் கண்டனர். அம்மனிதன் ஆடைகள் அணிந்தவனாக, மனநலம் பெற்றவனாகக் காணப்பட்டான். பிசாசுகள் அவனைவிட்டு நீங்கி இருந்தன. அதைக் கண்டு அச்சம் கொண்டனர் மக்கள். நடந்தவற்றைக் கண்ட மக்கள் பிறரிடம் இயேசு அந்த மனிதனைக் குணமாக்கிய வகையைக் கூறினர். இயேசுவை அங்கிருந்து போய்விடுமாறு கெதரேன பகுதி மக்கள் அனைவரும் கூறினர். அவர்கள் மிகவும் பயந்தவர்களாகக் காணப்பட்டனர். எனவே இயேசு படகில் ஏறி, கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். இயேசுவால் குணம் பெற்ற மனிதன் தானும் கூடவே வர விரும்புவதாக அவரை வேண்டினான். ஆனால் இயேசு அந்த மனிதனிடம், “வீட்டுக்குப்போய் தேவன் உனக்குச் செய்ததைப் பிறருக்குக் கூறு” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார். ஆகவே அவன் இயேசு தனக்குச் செய்ததை நகரமெங்கும் சென்று மக்களுக்குக் கூறினான். இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றபோது மக்கள் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவருக்காகக் காத்திருந்தனர். யவீரு என்னும் பெயருள்ள மனிதன் இயேசுவிடம் வந்தான். ஜெப ஆலயத்தின் தலைவனாக யவீரு இருந்தான். இயேசுவின் பாதங்களில் விழுந்து வணங்கி யவீரு தன் வீட்டுக்கு வருகை தருமாறு அவரை வேண்டினான். யவீருக்கு ஒரே ஒரு குமாரத்தி இருந்தாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதாகி இருந்தது. அவள் இறக்கும் தருவாயில் இருந்தாள். யவீருவின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது எல்லா பக்கங்களிலிருந்தும் இயேசுவை மக்கள் சூழ்ந்து கொண்டனர். இரத்தப் போக்கினால் பன்னிரண்டு ஆண்டுகள் துன்புற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் அவர்களுள் ஒருத்தி ஆவாள். மருத்துவர்களிடம் சென்று அவள் தனது பணத்தை எல்லாம் செலவழித்திருந்தாள். ஆனால் எந்த மருத்துவராலும் அவளைக் குணமாக்க இயலவில்லை. அப்பெண் இயேசுவுக்குப் பின்னாக வந்து அவரது அங்கியின் கீழ்ப் பகுதியைத் தொட்டாள். அந்நேரமே அவளின் இரத்தப் போக்கு நின்றுவிட்டது. அப்போது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். எல்லாருமே தாம் இயேசுவைத் தொடவில்லை என்று கூறினர். பேதுரு, “குருவே! உங்களைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது” என்றான். அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டது உண்மை. என்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன்” என்றார். தன்னால் ஒளிக்க முடியாததை உணர்ந்த பெண், நடுங்கியவளாய் இயேசுவின் முன்னே விழுந்து வணங்கினாள். மக்கள் அனைவரும் கேட்கும்படி தான் இயேசுவைத் தொட்டதன் காரணத்தைக் கூறினாள். பின்னர் தான் இயேசுவைத் தொட்டவுடன் குணமடைந்ததையும் சொன்னாள். இயேசு அவளை நோக்கி, “என் மகளே, நீ விசுவாசித்ததால் குணமாக்கப்பட்டாய். சமாதானத்தோடு போ” என்றார். இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஜெப ஆலயத்தின் தலைவனின் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, “உங்கள் குமாரத்தி இறந்துவிட்டாள். போதகரை மேலும் தொல்லைப்படுத்த வேண்டாம்” என்றான். இயேசு அதைக் கேட்டார். அவர் யவீருவை நோக்கி, “பயப்படாதே, விசுவாசத்துடனிரு, உன் குமாரத்தி குணம் பெறுவாள்” என்றார். இயேசு வீட்டை அடைந்தார். பேதுரு யோவான், யாக்கோபு, பெண்ணின் தந்தை, தாய் ஆகியோரை மட்டுமே உள்ளே வர அனுமதித்தார். பிறரை உள்ளே விடவில்லை. எல்லா மக்களும் அச்சிறுமி இறந்ததற்காக அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தனர். ஆனால் இயேசு, “அழாதீர்கள். அவள் இறக்கவில்லை. அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள்” என்றார். அச்சிறுமி இறந்தாள் என அறிந்திருந்ததால் மக்கள் இயேசுவைப் பார்த்துச் சிரித்தனர். ஆனால் இயேசு அவளது கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்து நில்” என்றார். அவள் ஆவி அவளுக்குள் திரும்ப வந்தது. அவள் உடனே எழுந்து நின்றாள். இயேசு, “அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். சிறுமியின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். நடந்ததைப் பிறருக்குக் கூறாமல் இருக்கும்படியாக இயேசு அவர்களுக்குக் கூறினார்.

லூக்கா 8:22-56 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள். படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது. அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய்,, அமைதலுண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள். அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டன. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார். பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான். இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான். இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல், எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.