லூக்கா 8:1-21
லூக்கா 8:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள். அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும், ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள். சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது, அவர் உவமையாகச் சொன்னது: விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார். அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான். கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள். ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான். வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை. ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார். அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது. அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள். அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.
லூக்கா 8:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்குப் பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் பிரயாணம் செய்து, இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அந்தப் பன்னிரண்டு பேர்களும் அவருடனே சென்றார்கள். தீய ஆவிகளின் பிடிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் குணமாக்கப்பட்ட சில பெண்களுங்கூட அவருடனே சென்றார்கள். மகதலேனா என அழைக்கப்பட்ட மரியாளும் அவர்களுடன் இருந்தாள். அவளிலிருந்து ஏழு பிசாசுகள் துரத்தப்பட்டிருந்தன. ஏரோதுவின் வீட்டு நிர்வாகியான கூசாவின் மனைவி யோவன்னாளும் அவர்களுடன் இருந்தாள். அத்துடன் சூசன்னாளும் வேறு பலரும் இருந்தார்கள். இந்தப் பெண்கள் தங்களுடைய வருமானத்திலிருந்து இயேசுவுக்கு ஆதரவளித்து உதவி செய்தார்கள். பல்வேறு பட்டணங்களிலிருந்து, மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவிடம் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; அவை மிதிபட்டன; ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தன, அவை முளைத்தபோது ஈரம் இல்லாததினால், அப்பயிர்கள் வாடிப்போயின. வேறுசில விதைகளோ முட்செடிகளின் இடையே விழுந்தன, அவை முளைத்து வளர்ந்தபோது, முட்களும்கூட வளர்ந்து பயிர்களை மூடி நெருக்கிப்போட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல மண்ணில் விழுந்தன. அவை முளைத்து நூறுமடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இயேசு இதைச் சொல்லி முடித்தபின்பு, சத்தமாய்க் கூப்பிட்டு, “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார். பின்பு அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இந்த உவமையின் அர்த்தம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இறைவனுடைய அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கோ, நான் உவமைகள் மூலமாகவே பேசுகிறேன். இதனால் அவர்கள், “ ‘கண்டும் காணாதவர்களாகவும்; கேட்டும் விளங்கிக்கொள்ளதவர்களாகவும் இருப்பார்கள்.’ “இந்த உவமையின் பொருள் இதுவே: விதை இறைவனுடைய வார்த்தை. பாதை ஓரத்தில் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்கும் சிலரைக் குறிக்கிறது. அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடி சாத்தான் வந்து, அவ்வார்த்தையை அவர்களுடைய இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான். கற்பாறையின்மேல் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்ட வேறுசிலரைக் குறிக்கிறது. அவர்கள் அதைக் கேட்கும்போது, சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டாலும், வேரில்லாதவர்களாய் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே விசுவாசிக்கிறார்கள்; சோதிக்கப்படும் காலத்திலே, விழுந்து போகிறார்கள். ஆனால் முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்ட வேறுசிலரைக் குறிக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் குறித்த கவலைகளினாலும், செல்வங்களினாலும், சிற்றின்பங்களினாலும், மூழ்கி நெருக்கப்பட்டு, முதிர்ச்சி அடையாதிருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ உண்மையும் நன்மையுமுள்ள இருதயம் கொண்டவர்களைக் குறிக்கிறது. அவர்கள் வார்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டு, பலன் கொடுக்கிறார்கள். “யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பானைக்குள்ளோ அல்லது கட்டிலின் கீழோ மறைத்து வைப்பதில்லை. அதை உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி ஒரு விளக்குத்தண்டின் மேலேயே வைப்பார்கள். எனவே, மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. ஆகையால், நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனமாய் இருங்கள். இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.” ஒருமுறை இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைப் பார்க்கும்படி வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாய்க் கூடியிருந்தபடியால், அவர்களால் அவருக்கு அருகே செல்ல முடியவில்லை. அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்றான். அதற்கு இயேசு, “இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கிறவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள்” என்றார்.
லூக்கா 8:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பயணம்செய்து, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைச் சொல்லி பிரசங்கித்து வந்தார். பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள். பொல்லாத ஆவிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் விடுவித்து சுகமாக்கப்பட்ட சில பெண்களும், ஏழு பிசாசுகளின் தொல்லையிலிருந்து விடுதலைபெற்ற மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும், ஏரோதின் மேலாளரான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்களுடைய ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டுவந்த பல பெண்கள் அவரோடு இருந்தார்கள். எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மக்கள்கூட்டம் அவரிடத்தில் வந்தவுடன், அவர் உவமையாகச் சொன்னது: விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைச் சாப்பிட்டுச் சென்றன. சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோனது. சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கூறினார். அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. “அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான். கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமட்டும் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடிவைக்கமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவும் மாட்டான்; உள்ளே நுழைகிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான். வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை. ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்றார். அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் வந்தார்கள் மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது, ஆதலால் அவர் அருகில் செல்லமுடியாமல் இருந்தது. அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள். அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக்கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரர்களுமாக இருக்கிறார்கள் என்றார்.
லூக்கா 8:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)
மறுநாள் இயேசு சில பெரிய பட்டணங்களுக்கும், சில சிறு நகரங்களுக்கும் பிரயாணம் செய்தார். தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு கூறி மக்களுக்குப் போதித்தார். பன்னிரண்டு சீஷர்களும் அவரோடு கூட இருந்தனர். சில பெண்களும் அவரோடு கூட இருந்தனர். இயேசு இந்தப் பெண்களை நோய்களில் இருந்தும் பிசாசின் அசுத்த ஆவிகளில் இருந்தும் குணமாக்கி இருந்தார். இப்பெண்களுள் ஒருத்தி மரியாள். அவள் மக்தலா என்னும் நகரத்திலிருந்து வந்திருந்தாள். ஏழு அசுத்த ஆவிகள் அவளிடமிருந்து விரட்டப்பட்டிருந்தன. இப்பெண்களோடுகூட கூசாவின் (ஏரோதுவின் பொருளாளர்களுள் ஒருவனாக இருந்தவன்) மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும் வேறுபல பெண்களும் இருந்தனர். இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இவர்கள் தங்கள் பணத்தின் மூலம் சேவை செய்தனர். கூட்டமாகப் பலர் சேர்ந்து வந்தனர். ஒவ்வொரு நகரத்திலிருந்தும் மக்கள் இயேசுவிடம் வந்தனர். இயேசு பின்வரும் உவமையை மக்களுக்குக் கூறினார். “ஓர் உழவன் விதை விதைப்பதற்குச் சென்றான். உழவன் விதைத்துக்கொண்டிருந்தபோது, பாதையின் ஓரமாகச் சில விதைகள் விழுந்தன. மக்கள் அவற்றின்மீது நடந்து சென்றனர். பறவைகள் அவற்றைத் தின்றன. சில விதைகள் பாறையின்மீது விழுந்தன. அவை முளைக்க ஆரம்பித்தன. நீர் இல்லாததால் மடிந்தன. முட்புதர்கள் நடுவே சில விதைகள் விழுந்தன. அவை முளைத்தன. ஆனால் பின்னர், அவை முளைக்காதபடி புதர்கள் தடுத்தன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து நூறு மடங்கு தானியத்தைத் தந்தன.” இயேசு இந்த உவமையைக் கூறி முடித்தார். பின்பு இயேசு, “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற மக்களே, கவனியுங்கள்” என்றார். இயேசுவின் சீஷர்கள் அவரை நோக்கி, “இந்த உவமையின் பொருள் என்ன?” என்று கேட்டனர். இயேசு, “தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால், நான் பிற மக்களோடு பேசுவதற்கு உவமைகளைப் பயன்படுத்துகிறேன். நான் இவ்வாறு செய்வது ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், ஆனால் எதையும் காணமாட்டார்கள். அவர்கள் கவனிப்பார்கள்: ஆனால் எதையும் புரிந்துகொள்ளமாட்டார்கள்’” என்றார். “இந்த உவமை இவ்வாறு பொருள்படுகிறது: விதை தேவனுடைய வசனமாகும். பாதையோரத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக் கேட்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால் பிசாசு வந்து அவர்கள் இதயத்தில் இருந்து அந்த போதனையை எடுத்துப் போகிறான். எனவே அந்த மனிதர்கள் போதனையை நம்பி, இரட்சிப்படைய முடியாது. பாறையில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? தேவனுடைய போதனையைக் கேட்டு, மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால், இந்த மனிதர்கள் ஆழமாக வேர் விடுவதில்லை. கொஞ்ச நேரம் நம்பிக்கை வைப்பர். ஆனால் பின்பு தொல்லைகள் வரும். நம்புவதை விடுத்து, தேவனை விட்டு விலகிச் செல்வர். “முட்புதர்களின் நடுவில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக்கேட்டும், கவலை, செல்வம், இவ்வாழ்வின் களிப்பு ஆகியவற்றால் அப்போதனைகளை வளரவிடாது தடுக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. எனவே, அவர்கள் ஒருபோதும் நல்ல பலன் கொடுப்பதில்லை. நல்ல நிலத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனின் போதனைகளை உண்மையான நல்ல இதயத்தோடு கேட்கின்ற மக்களைப் போன்றது. அவர்கள் தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து பொறுமையாக நற்பலனைக் கொடுப்பவர்களாவார்கள். “எந்த மனிதனும் விளக்கைக் கொளுத்தி, ஒரு பாத்திரத்தினால் மூடி, படுக்கையின் கீழே மறைத்து வைப்பது இல்லை. ஆனால் அம்மனிதன் விளக்கை அதற்குரிய விளக்குத் தண்டின்மேல் உள்ளே நுழையும் மக்கள் அனைவருக்கும் ஒளி தரும்படியாக ஏற்றி வைப்பான். மறைக்கப்பட்டவை அனைத்தும் வெளிப்படும். ஒவ்வொரு இரகசியமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். எவ்வாறு கவனிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். புரியும் திறன் பெற்ற மனிதன் மிகுதியாக அறிந்துகொள்வான். புரியும் திறனற்ற மனிதனோ தனக்கு இருப்பதாக அவன் நினைக்கும், புரியும் திறனையும் இழந்துவிடுவான்” என்றார். இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைக் காண வந்தனர். இயேசுவின் தாயும் சகோதரரும் இயேசுவை நெருங்க முடியாதபடி பல மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். ஒருவன் இயேசுவிடம், “உங்கள் தாயும், சகோதரர்களும் வெளியே நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் உங்களைக் காண விரும்புகின்றனர்” என்றான். இயேசு அவர்களுக்கு, “தேவனுடைய போதனையைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிந்து நடக்கிற மக்களே என் தாயும், சகோதரர்களும் ஆவார்கள்” என்று பதிலளித்தார்.