லூக்கா 7:18-28

லூக்கா 7:18-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோவானின் சீடர்கள் இவை எல்லாவற்றையும் யோவானுக்குச் சொன்னார்கள். யோவான் தன்னுடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு, “வரப்போகிற கிறிஸ்து நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்கும்படி, கர்த்தரிடம் அவர்களை அனுப்பினான். அவர்கள் இயேசுவிடம் வந்து, “வரப்போகிறவர் நீர்தானா அல்லது நாங்கள் வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி, யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம் அனுப்பியிருக்கிறார்” என்றார்கள். அதே வேளையிலே வியாதிப்பட்டவர்கள், நோயுற்றிருந்தவர்கள், தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்தவர்கள் ஆகிய பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்றோராய் இருந்த பலருக்கும் அவர் பார்வையைக் கொடுத்தார். எனவே அவர் யோவானின் சீடர்களிடம், “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும் கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார். யோவானின் தூதர்கள் புறப்பட்டுப் போனதும், கூடியிருந்த மக்களுடன் இயேசு யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையானால், எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, விலை உயர்ந்த உடையை உடுத்தி, ஆடம்பரமாக வாழ்பவர்கள் மாளிகைகளிலே இருக்கிறார்கள். அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். “ ‘உமக்கு முன்பாக என்னுடைய தூதனை அனுப்புவேன், அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்.’ நான் உங்களுக்குச் சொல்கிறேன், பெண்களிடத்தில் மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவானைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால் இறைவனுடைய அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான்” என்றார்.

லூக்கா 7:18-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து, நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள். அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ? இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள். இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான். பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 7:18-28 பரிசுத்த பைபிள் (TAERV)

இவை அனைத்தையும் குறித்து யோவானின் சீஷர்கள் யோவானுக்குக் கூறினர். தன் சீஷர்களில் இருவரை யோவான் அழைத்தான். “நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவர் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள கர்த்தரிடம் அவர்களை யோவான் அனுப்பினார். அவ்விதமாகவே அந்த மனிதர் இயேசுவிடம் வந்தனர். அவர்கள், “யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம், ‘நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?’ என்று கேட்டுவர அனுப்பினார்” என்றார்கள். அப்போது இயேசு பலரையும் காய்ச்சலில் இருந்தும் நோய்களில் இருந்தும் குணமாக்கவும், பிசாசினால் வரும் அசுத்த ஆவிகளினின்று விடுதலை பெறவும் செய்தார். குருடர்கள் பலர் மீண்டும் பார்வை பெறுமாறு அவர்களைக் குணப்படுத்தினார். யோவானின் சீஷர்களை நோக்கி இயேசு, “இங்கு நீங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் கூறுங்கள். குருடர்கள் குணமடைந்து பார்க்கிறார்கள். முடவர்கள் குணமடைந்து நடக்கிறார்கள். தொழுநோயாளிகள் நலம் பெறுகின்றனர். செவிடர்கள் நலம் பெற்றுக் கேட்கிறார்கள். மரித்தோர் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தி ஏழைகளுக்குச் சொல்லப்படுகிறது. என்னை ஏற்றுக்கொள்ளுகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்!” என்றார். யோவானின் தொண்டர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் இயேசு யோவானைக் குறித்து அவர்களிடம் பேச ஆரம்பித்தார்: “நீங்கள் வனாந்தரத்துக்கு எதைப் பார்க்கச் சென்றீர்கள்? காற்றில் அசையும் நாணலையா? நீங்கள் எதைப் பார்க்கும்படியாக வெளியே சென்றீர்கள்? நல்ல ஆடைகள் அணிந்த மனிதனையா? அழகிய மெல்லிய ஆடைகள் அணிந்த மக்கள் ராஜாக்களின் உயர்ந்த அரண்மனைகளில் வாழ்வார்கள். உண்மையாகவே யாரைப் பார்க்கச் சென்றீர்கள்? ஒரு தீர்க்கதரிசியையா? ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், யோவான் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மிகவும் சிறந்தவன். இவ்வாறு யோவானைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது: “‘கேளுங்கள்! உங்களுக்கு முன்பாக என் செய்தியாளனை நான் அனுப்புவேன். அவன் உங்களுக்கு வழியை ஆயத்தம் செய்வான்.’ நான் உங்களுக்குச் சொல்கிறேன். உலகில் பிறந்த எந்த மனிதனைக் காட்டிலும் யோவான் பெரியவன். ஆனால் தேவனுடைய இராஜ்யத்தில் முக்கியத்துவம் குறைந்தவன் கூட யோவானைக் காட்டிலும் பெரியவன்.”

லூக்கா 7:18-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து, நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான் ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள். அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங்குருடருக்குப் பார்வையளித்தார். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப்பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள். அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்