லூக்கா 7:11-17

லூக்கா 7:11-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்குப் பின்பு, இயேசு நாயீன் என்னும் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் பெருங்கூட்டமாயிருந்த மக்களும் அவருடன் சென்றார்கள். அவர் பட்டணத்து வாசலுக்கு சமீபமாய் வந்தபோது, இறந்துபோன ஒருவனை அடக்கம்பண்ணும்படி சிலர் சுமந்துகொண்டு வந்தார்கள். இவன் தன் தாய்க்கு ஒரே மகன், அவளோ ஒரு விதவை. பட்டணத்திலிருந்தும் மக்கள் பெருங்கூட்டமாய் அவளுடன் வந்தார்கள். கர்த்தர் அவளைக் கண்டபோது, அவள்மேல் மனதுருகி, “அழாதே” என்று சொன்னார். பின்பு அவர் போய் பாடையைத் தொட்டார். அதை சுமந்து சென்றவர்கள் நின்றார்கள். அவர், “வாலிபனே, எழுந்திரு என்று உனக்கு சொல்லுகிறேன்!” என்றார். இறந்தவன் எழுந்து பேசத் தொடங்கினான்; இயேசு அவனைத் திரும்பவும் அவனுடைய தாயிடம் ஒப்படைத்தார். அவர்கள் எல்லோரும் பயபக்தியுடன் இறைவனைத் துதித்தார்கள். “ஒரு பெரிய இறைவாக்கினர் நம்மிடையே தோன்றியிருக்கிறார். தம்முடைய மக்களுக்கு உதவிசெய்யும்படி இறைவன் வந்திருக்கிறார்” என்றார்கள். இயேசு செய்ததைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா முழுவதிலும், அதைச் சுற்றியுள்ள நாட்டுப்புறத்திலும் பரவியது.

லூக்கா 7:11-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள். அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள். இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி, அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார். எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது.

லூக்கா 7:11-17 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள் இயேசு நாயீன் என்னும் நகரத்திற்குச் சென்றார். இயேசுவின் சீஷர்களும், மிகப் பெரிய கூட்டமான மக்கள் பலரும் அவரோடு பிராயாணம் செய்தனர். நகர வாசலை இயேசு நெருங்கியபோது ஒரு மரண ஊர்வலத்தைக் கண்டார். விதவையான ஒரு தாய் தனது ஒரே குமாரனை இழந்திருந்தாள். அவனது உடலைச் சுமந்து சென்றபோது தாயுடன் அந்நகர மக்கள் பலரும் கூட இருந்தனர். கர்த்தர் (இயேசு) அவளைப் பார்த்தபோது, அவளுக்காக மனதுருகினார். இயேசு அவளிடம் சென்று, “அழாதே” என்றார். பாடையின் அருகே வந்து இயேசு அதைத் தொட்டார். அந்தப் பாடையைச் சுமந்து வந்த மனிதர்கள் நின்றனர். இயேசு இறந்த மனிதனை நோக்கி, “இளைஞனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன்” என்றார். இறந்துபோன குமாரன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். அவனை அவன் தாயிடம், இயேசு ஒப்படைத்தார். எல்லா மக்களும் ஆச்சரியமுற்றனர். அவர்கள், “ஒரு மகா தீர்க்கதரிசி நம்மிடையே வந்துள்ளார்” என்றனர். மேலும் அவர்கள், “தேவன் தம் மக்களைக் கவனித்துக்கொள்கிறார்” என்றார்கள். இயேசுவைப் பற்றிய இச்செய்தி யூதேயா முழுவதும் அதைச் சூழ்ந்த எல்லா இடங்களிலும் பரவிற்று.

லூக்கா 7:11-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.