லூக்கா 6:6-11
லூக்கா 6:6-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு, அவர்களெல்லாரையும் சுற்றிப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.
லூக்கா 6:6-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மற்றொரு ஓய்வுநாளிலே அவர் ஜெப ஆலயத்திற்குள் போய், அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அங்கே சுருங்கிய வலதுகையுடைய ஒருவன் இருந்தான். பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, சுருங்கிய கையுடையவனைப் பார்த்து, “நீ எழுந்து, எல்லோருக்கும் முன்பாக நில்” என்றார். அப்படியே அவன் எழுந்து நின்றான். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளிலே மோசேயின் சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது: நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது அழிப்பதா? என்று எனக்குச் சொல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்” என்றார். இயேசு அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். அவனுடைய கை முற்றிலுமாக குணமடைந்தது. ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கடுங்கோபமடைந்து, தாங்கள் இயேசுவுக்கு என்ன செய்யலாம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
லூக்கா 6:6-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான். அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு, அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது. அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள்.
லூக்கா 6:6-11 பரிசுத்த பைபிள் (TAERV)
மற்றொரு ஓய்வு நாள் வந்தபோது இயேசு ஜெப ஆலயத்திற்குச் சென்றார். இயேசு ஜனங்களுக்குப் போதித்தார். வலதுகை முடமான ஒருவன் அங்கிருந்தான். ஓய்வு நாளில் இயேசு அம்மனிதனைக் குணமாக்குவாரா என்பதைப் பார்ப்பதற்கு வேதபாரகர்களும், பரிசேயர்களும் காத்துக்கொண்டிருந்தனர். குற்றம் சுமத்தும்படியாக இயேசு ஏதேனும் தவறைச் செய்வாரா என அவர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர் முடமான கை கொண்ட அம்மனிதனை நோக்கி, “எழுந்து இம்மக்களுக்கு முன்பாக நில்” என்றார். அம்மனிதன் எழுந்து அங்கே நின்றான். பின் இயேசு அவர்களை நோக்கி, “ஓய்வு நாளில் நல்லதைச் செய்வதா, கெட்டதைச் செய்வதா, எது நல்லதென்று உங்களைக் கேட்கிறேன். ஓர் உயிரைப் பாதுகாப்பதா அல்லது அழிப்பதா எது சரியானது?” என்று கேட்டார். இயேசு சுற்றிலும் எல்லாரையும் நோக்கினார். இயேசு அந்த மனிதனை நோக்கி, “உன் கையை நான் பார்க்கட்டும்” என்றார். அம்மனிதன் கையை நீட்டினான் அந்தக் கை குணமானது. பரிசேயர்களும், வேதபாரகர்களும் மிகவும் கோபமடைந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் “நாம் இயேசுவுக்கு என்ன செய்யக்கூடும்?” என்று கூறிக்கொண்டனர்.