லூக்கா 6:27-36

லூக்கா 6:27-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“எனக்குச் செவிகொடுக்கிறவர்களுக்கு நான் சொல்கிறேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள். ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவன் உங்கள் மேலுடையை எடுத்துக்கொண்டால், உங்களது ஆடையை எடுப்பதற்கு அவனைத் தடுக்காதேயுங்கள். உங்களிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள், உங்களுக்கு உரியதை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பி வற்புறுத்திக் கேட்காதீர்கள். மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள். “உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளுங்கூட அவர்களுக்கு அன்பு காட்டுகிறவர்களுக்கு அன்பு காட்டுகிறார்கள். உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மை செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. மீண்டும் திருப்பிக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கு என்ன மேன்மை? கடனாகக் கொடுத்ததை முழுவதுமாக பெற்றுக்கொள்ளும்படி, பாவிகளும் பாவிகளுக்கு கடன் கொடுக்கிறார்களே. ஆனால் நீங்கள் உங்கள் பகைவரில் அன்பாயிருங்கள், அவர்களுக்கு நன்மை செய்யுங்கள், திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அவர்களுக்குக் கடன்கொடுங்கள். அப்பொழுது உங்கள் வெகுமதி பெரிதாயிருக்கும், நீங்கள் மகா உன்னதமான இறைவனுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில் அவர் நன்றிகெட்டவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் தயவுள்ளவராயிருக்கிறாரே. உங்கள் பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.

லூக்கா 6:27-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“என் வார்த்தைகளைக் கேட்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை அவமதிக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே. மனிதர்கள் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கிறார்களே. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.

லூக்கா 6:27-36 பரிசுத்த பைபிள் (TAERV)

“என் போதனைகளைக் கேட்கிற மக்களே உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களை நேசியுங்கள். உங்களை வெறுக்கிற மக்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களிடம் தீயவற்றைக் கூறுகிற மக்களை ஆசீர்வதிக்குமாறு தேவனை வேண்டுங்கள். உங்களை இழிவாக நடத்துகிறவர்களுக்காகப் பிரார்த்தனை பண்ணுங்கள். ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அடித்தால் அவனை மறு கன்னத்திலும் அடிக்க அனுமதியுங்கள். உங்கள் அங்கியை யாரேனும் ஒருவன் எடுத்தால் உங்கள் சட்டையையும் அவன் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். உங்களிடம் கேட்கிறவனுக்குக் கொடுங்கள். உங்களுக்குரிய பொருளை ஒருவன் எடுத்துக்கொண்டால் அதைத் திரும்பக் கேட்காதீர்கள். உங்களுக்குப் பிறர் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் செய்யுங்கள். “உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால் அதற்காக உங்களைப் புகழ வேண்டியது தேவையா? இல்லை. பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களிடம் அன்பு காட்டுகிறார்களே! உங்களுக்கு நல்லதைச் செய்பவர்களுக்கு நீங்களும் நன்மை செய்தால், அவ்வாறு செய்வதற்காக உங்களைப் புகழ வேண்டுமா? இல்லை. பாவிகளும் அதைச் செய்கிறார்களே! திருப்பி அடைத்துவிட முடிந்தவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களை அதற்காகப் புகழக் கூடுமா? இல்லை. பாவிகளும் கூட பிற பாவிகளுக்கு அதே தொகையைத் திரும்பப் பெறும்படியாக கடன் உதவி செய்கிறார்களே! “எனவே, பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை சிறிதும் இல்லாவிடினும் கூட கடன் கொடுங்கள். நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்தால் அதற்கு மிகுந்த பலனைப் பெறுவீர்கள். மகா உன்னதமான தேவனின் பிள்ளைகள் ஆவீர்கள். ஆம், ஏனெனில் பாவிகளுக்கும், நன்றியற்ற மனிதர்களுக்கும் தேவன் நல்லவர். உங்கள் தந்தை அன்பும் இரக்கமும் உடையவராக இருப்பது போலவே, நீங்களும் அன்பும் இரக்கமும் உடையவர்களாக இருங்கள்.

லூக்கா 6:27-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.

லூக்கா 6:27-36

லூக்கா 6:27-36 TAOVBSIலூக்கா 6:27-36 TAOVBSIலூக்கா 6:27-36 TAOVBSIலூக்கா 6:27-36 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்