லூக்கா 6:17-23 - Compare All Versions
லூக்கா 6:17-23 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு அவர்களுடன் கீழே இறங்கிப்போய், சமவெளியான ஒரு இடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீரு, சீதோன் பட்டணங்களின் கரையோரங்களிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் அவர் சொல்வதைக் கேட்கவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமடையவும் வந்திருந்தார்கள். அசுத்த ஆவிகளினால் துன்பப்பட்டவர்கள் குணமடைந்தார்கள். அவரிலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினால், எல்லா மக்களும் அவரைத் தொடுவதற்கு முயற்சிசெய்தார்கள். மேலும் இயேசு தமது சீடர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “ஏழைகளாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், இறைவனுடைய அரசு உங்களுக்கே உரியது. இப்பொழுது பசியாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீங்கள் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிறவர்களாகிய நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனெனில் நீங்கள் சிரிப்பீர்கள். மானிடமகனாகிய என் நிமித்தம் மனிதர் உங்களை வெறுக்கும்போதும், அவர்கள் உங்களைப் புறக்கணிக்கும்போதும், உங்களை இகழும்போதும், உங்களைத் தீமையானவர்கள் என்று தள்ளிவிடும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். “அந்நாளிலே சந்தோஷப்பட்டு, துள்ளி மகிழுங்கள். ஏனெனில், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும். அவர்களுடைய முன்னோர்களும் இறைவாக்கினரை அப்படித்தான் நடத்தினார்கள்.
லூக்கா 6:17-23 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள். அசுத்தஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினாலே, மக்கள் எல்லோரும் அவரைத் தொடுவதற்காக முயற்சிசெய்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து: “தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது. இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி சிரிப்பீர்கள். மனிதகுமாரனைப் பின்பற்றுவதால் மக்கள் உங்களைப் பகைத்து, உங்களை நிராகரித்து, உங்களை அவமதித்து, உங்களுடைய பெயரைப் பொல்லாததென்று சொல்லி உங்களைத் தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். “அந்த நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; அவர்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படித்தான் செய்தார்கள்.
லூக்கா 6:17-23 TAERV (பரிசுத்த பைபிள்)
இயேசுவும் அவருடைய சீஷர்களும் மலையிலிருந்து இறங்கினர். இயேசு சமவெளியான இடத்தில் நின்றார். அவருடைய சீஷர்கள் கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். மேலும் யூதேயா, எருசலேம் ஆகிய பகுதிகளிலிருந்தும், தீரு, சீதோன் ஆகிய கடலோரத்துப் பட்டணங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்கவும் தங்கள் நோய்களில் இருந்து குணம் பெறவும் அங்கு வந்தனர். பிசாசின் அசுத்த ஆவிகளால் துன்புற்ற மக்களை இயேசு குணமாக்கினார். எல்லா மக்களும் இயேசுவைத் தொடும்படியாக முயன்றனர். ஏனெனில் அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது. இயேசு அவர்கள் எல்லோரையும் குணப்படுத்தினார். இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து, “ஏழைகளே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குரியது. இப்போது பசியால் வாடுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நீங்கள் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நீங்கள் சந்தோஷமாக நகைப்பீர்கள். “மக்கள் உங்களை வெறுக்கும்போதும் நிராகரிக்கும்போதும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீங்கள் மனித குமாரனுக்கு உரியோர். ஆதலால் உங்களைத் தீயோர் என்றும் சொல்லுவார்கள். அவர்கள் அதைச் சொல்லும்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உங்களுக்குப் பரலோகத்தில் பெரிய வெகுமதி காத்திருப்பதால் இத்தருணங்களில் நீங்கள் மகிழுங்கள். உங்களை அவர்கள் மிக இழிவான முறையில் நடத்துவதைப்போலவே அவர்கள் முன்னோர் தீர்க்கதரிசிகளையும் இழிவுபடுத்தினர்.
லூக்கா 6:17-23 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம் பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள். அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். அவரிடத்திலிருந்து வல்லமைபுறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள். மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.