லூக்கா 6:12-49

லூக்கா 6:12-49 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்நாட்களிலே இயேசு ஜெபிப்பதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்; அங்கே இரவு முழுவதும் இறைவனை நோக்கி ஜெபித்தார். காலை நேரம் வந்தபோது, அவர் தமது சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்து, அவர்களை அப்போஸ்தலர் என அழைத்தார். அவர்கள் யாரெனில்: பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், பேதுருவின் சகோதரன் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, செலோத்தே என அழைக்கப்பட்ட சீமோன், யாக்கோபின் சகோதரனாகிய யூதா, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே. இயேசு அவர்களுடன் கீழே இறங்கிப்போய், சமவெளியான ஒரு இடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீரு, சீதோன் பட்டணங்களின் கரையோரங்களிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் அவர் சொல்வதைக் கேட்கவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமடையவும் வந்திருந்தார்கள். அசுத்த ஆவிகளினால் துன்பப்பட்டவர்கள் குணமடைந்தார்கள். அவரிலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினால், எல்லா மக்களும் அவரைத் தொடுவதற்கு முயற்சிசெய்தார்கள். மேலும் இயேசு தமது சீடர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “ஏழைகளாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், இறைவனுடைய அரசு உங்களுக்கே உரியது. இப்பொழுது பசியாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீங்கள் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிறவர்களாகிய நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனெனில் நீங்கள் சிரிப்பீர்கள். மானிடமகனாகிய என் நிமித்தம் மனிதர் உங்களை வெறுக்கும்போதும், அவர்கள் உங்களைப் புறக்கணிக்கும்போதும், உங்களை இகழும்போதும், உங்களைத் தீமையானவர்கள் என்று தள்ளிவிடும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். “அந்நாளிலே சந்தோஷப்பட்டு, துள்ளி மகிழுங்கள். ஏனெனில், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும். அவர்களுடைய முன்னோர்களும் இறைவாக்கினரை அப்படித்தான் நடத்தினார்கள். “ஆனால் செல்வந்தர்களாய் இருக்கிற உங்களுக்கு ஐயோ. ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே உங்கள் ஆறுதலைப் பெற்றுவிட்டீர்கள். நன்றாய் சாப்பிட்டு திருப்தியாய் இருக்கிறவர்களே, உங்களுக்கு ஐயோ. நீங்கள் பட்டினியாய் இருப்பீர்கள். இப்பொழுது சிரித்து மகிழ்கிறவர்களே உங்களுக்கு ஐயோ, ஏனெனில் நீங்கள் புலம்பி அழுவீர்கள். எல்லா மனிதரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது உங்களுக்கு ஐயோ, ஏனெனில் அவர்களுடைய முன்னோரும் பொய் தீர்க்கதரிசிகளை அப்படித்தான் புகழ்ந்தார்கள். “எனக்குச் செவிகொடுக்கிறவர்களுக்கு நான் சொல்கிறேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள். ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவன் உங்கள் மேலுடையை எடுத்துக்கொண்டால், உங்களது ஆடையை எடுப்பதற்கு அவனைத் தடுக்காதேயுங்கள். உங்களிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள், உங்களுக்கு உரியதை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பி வற்புறுத்திக் கேட்காதீர்கள். மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள். “உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளுங்கூட அவர்களுக்கு அன்பு காட்டுகிறவர்களுக்கு அன்பு காட்டுகிறார்கள். உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மை செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. மீண்டும் திருப்பிக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கு என்ன மேன்மை? கடனாகக் கொடுத்ததை முழுவதுமாக பெற்றுக்கொள்ளும்படி, பாவிகளும் பாவிகளுக்கு கடன் கொடுக்கிறார்களே. ஆனால் நீங்கள் உங்கள் பகைவரில் அன்பாயிருங்கள், அவர்களுக்கு நன்மை செய்யுங்கள், திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அவர்களுக்குக் கடன்கொடுங்கள். அப்பொழுது உங்கள் வெகுமதி பெரிதாயிருக்கும், நீங்கள் மகா உன்னதமான இறைவனுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில் அவர் நன்றிகெட்டவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் தயவுள்ளவராயிருக்கிறாரே. உங்கள் பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள். “மற்றவர்கள்மேல் நியாயத்தீர்ப்பு வழங்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் நியாயத்தீர்ப்பு பெறமாட்டீர்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பு செய்யாதிருங்கள், அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படமாட்டீர்கள். மன்னியுங்கள், அப்பொழுது நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும். அமுக்கி குலுக்கி நிரம்பி வழியத்தக்கதாக சரியான அளவினாலே அளக்கப்பட்டு, உங்கள் மடியிலே கொட்டப்படும். நீங்கள் எந்த அளவை பயன்படுத்துகிறீர்களோ, அதனாலேயே உங்களுக்கும் அளக்கப்படும்” என்றார். மேலும் இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? அப்படிச் செய்தால், அவர்கள் இருவரும் குழியிலே விழுவார்கள் அல்லவா? ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல, ஆனால் முழுமையாய் பயிற்சி பெற்ற ஒவ்வொருவனும் தன் ஆசிரியரைப்போல் இருப்பான். “நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்? உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்? வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; பிறகு உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கமுடியும். “நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுப்பதில்லை, கெட்டமரம் நல்ல கனியைக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மரமும் அதன் கனியினாலேயே இனம் தெரியப்படுகிறது. முட்புதர்களிலிருந்து ஒருவரும் அத்திப்பழங்களையோ அல்லது திராட்சைப் பழங்களையோ பறிக்கிறதில்லை. நல்ல மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைத்திருக்கிற நன்மையிலிருந்து, நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான்; தீய மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கிற தீமையிலிருந்து, தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான். ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும். “நான் சொல்கிறதைச் செய்யாமல், ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் என்னைக் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகிறவன், எதற்கு ஒப்பானவன் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். அவன் கற்பாறையிலே ஆழமாய்த் தோண்டி, அதில் அஸ்திபாரமிட்டு வீடு கட்டுகிறவனுக்கு ஒப்பாயிருக்கிறான். வெள்ளம் வந்தபோது, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியது. ஆனால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்ததால் அதை அசைக்கமுடியவில்லை. ஆனால் என் வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாதவனோ, அஸ்திபாரமின்றி நிலத்திலே வீட்டைக் கட்டியவனைப்போல் இருக்கிறான். நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதிய உடனே அது இடிந்து விழுந்து, முற்றுமாய் ஒழிந்தது.”

லூக்கா 6:12-49 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். பொழுதுவிடிந்தபோது, அவர் தம்முடைய சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பெயரிட்டார். அவர்கள் யாரென்றால், பேதுரு என்று தாம் பெயரிட்ட சீமோன், அவனுடைய சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்பட்ட சீமோன், யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே. பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள். அசுத்தஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினாலே, மக்கள் எல்லோரும் அவரைத் தொடுவதற்காக முயற்சிசெய்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து: “தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது. இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி சிரிப்பீர்கள். மனிதகுமாரனைப் பின்பற்றுவதால் மக்கள் உங்களைப் பகைத்து, உங்களை நிராகரித்து, உங்களை அவமதித்து, உங்களுடைய பெயரைப் பொல்லாததென்று சொல்லி உங்களைத் தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். “அந்த நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; அவர்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படித்தான் செய்தார்கள். செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள். திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ; நீங்கள் பசியாக இருப்பீர்கள். இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ; இனித் துக்கப்பட்டு அழுவீர்கள். எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாகப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்களுடைய முற்பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்தும் அப்படித்தான் பேசினார்கள். “என் வார்த்தைகளைக் கேட்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை அவமதிக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே. மனிதர்கள் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கிறார்களே. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள். மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள். கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாக அளந்து, உங்களுடைய மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பார்வையற்றவனுக்கு பார்வையற்றவன் வழிகாட்ட முடியுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? சீடன் தன் குருவிற்கு மேலானவன் இல்லை, பயிற்சியில் முழுமையாக தேறினவன் தன் குருவைப்போல இருப்பான். நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்க்கிறது என்ன? அல்லது நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடுகிறேன் என்று நீ சொல்வது எப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணில் இருக்கிற மரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடும் வழியைப் பார்ப்பாய். நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது. ஒவ்வொரு மரமும் அதின் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. நல்ல மனிதன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக்காட்டுகிறான்; பொல்லாத மனிதன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவனுடைய வாய் பேசும். என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன? என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக்கேட்டு, அதின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுவேன். ஆழமாகத் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க முடியாமல்போனது; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. என் வார்த்தைகளைக் கேட்டும் அதின்படி செய்யாதவன் எவனோ, அவன் அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாக இருக்கிறான்; நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதினவுடனே அது விழுந்து முழுவதும் அழிந்துபோனது” என்றார்.

லூக்கா 6:12-49 பரிசுத்த பைபிள் (TAERV)

அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். மறு நாள் காலையில் இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களுள் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு “அப்போஸ்தலர்கள்” என்று பெயரிட்டார். அவர்கள்: சீமோன் (இயேசு அவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார்) அந்திரேயா என்னும் பேதுருவின் சகோதரன், யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்), சீமோன் (செலோத்தே என்று அழைக்கப்பட்டவன்) யூதா, (யாக்கோபின் குமாரன்) யூதாஸ்காரியோத் என்பவர்கள் ஆவார்கள். இந்த யூதாஸ் இயேசுவைப் பகைவர்களிடம் ஒப்படைத்தவனாவான். இயேசுவும் அவருடைய சீஷர்களும் மலையிலிருந்து இறங்கினர். இயேசு சமவெளியான இடத்தில் நின்றார். அவருடைய சீஷர்கள் கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். மேலும் யூதேயா, எருசலேம் ஆகிய பகுதிகளிலிருந்தும், தீரு, சீதோன் ஆகிய கடலோரத்துப் பட்டணங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்கவும் தங்கள் நோய்களில் இருந்து குணம் பெறவும் அங்கு வந்தனர். பிசாசின் அசுத்த ஆவிகளால் துன்புற்ற மக்களை இயேசு குணமாக்கினார். எல்லா மக்களும் இயேசுவைத் தொடும்படியாக முயன்றனர். ஏனெனில் அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது. இயேசு அவர்கள் எல்லோரையும் குணப்படுத்தினார். இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து, “ஏழைகளே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குரியது. இப்போது பசியால் வாடுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நீங்கள் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நீங்கள் சந்தோஷமாக நகைப்பீர்கள். “மக்கள் உங்களை வெறுக்கும்போதும் நிராகரிக்கும்போதும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீங்கள் மனித குமாரனுக்கு உரியோர். ஆதலால் உங்களைத் தீயோர் என்றும் சொல்லுவார்கள். அவர்கள் அதைச் சொல்லும்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உங்களுக்குப் பரலோகத்தில் பெரிய வெகுமதி காத்திருப்பதால் இத்தருணங்களில் நீங்கள் மகிழுங்கள். உங்களை அவர்கள் மிக இழிவான முறையில் நடத்துவதைப்போலவே அவர்கள் முன்னோர் தீர்க்கதரிசிகளையும் இழிவுபடுத்தினர். “ஆனால் செல்வந்தர்களே நீங்கள் உங்கள் வாழ்வில் சுகமாக வாழ்ந்ததால் இனிமேல் அது உங்களுக்குக் கேடாக இருக்கும். இப்போது திருப்தி பெற்ற மக்களே, அது உங்களுக்குக் கேடாக இருக்கும். ஏனெனில் நீங்கள் பசியடைவீர்கள். தற்போது சிரிக்கும் மக்களே, அது உங்களுக்குக் கேடாக இருக்கும். ஏனெனில் நீங்கள் வேதனையும் அழுகையும் அடைவீர்கள். “எல்லாரும் உங்களைக் குறித்து நல்லதாகச் சொல்லுகையில் மோசமானதே நேரும். பொய் தீர்க்கதரிசிகளைக் குறித்து அவர்கள் முன்னோர் நல்லதாகவே சொன்னார்கள்” என்றார். “என் போதனைகளைக் கேட்கிற மக்களே உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களை நேசியுங்கள். உங்களை வெறுக்கிற மக்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களிடம் தீயவற்றைக் கூறுகிற மக்களை ஆசீர்வதிக்குமாறு தேவனை வேண்டுங்கள். உங்களை இழிவாக நடத்துகிறவர்களுக்காகப் பிரார்த்தனை பண்ணுங்கள். ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அடித்தால் அவனை மறு கன்னத்திலும் அடிக்க அனுமதியுங்கள். உங்கள் அங்கியை யாரேனும் ஒருவன் எடுத்தால் உங்கள் சட்டையையும் அவன் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். உங்களிடம் கேட்கிறவனுக்குக் கொடுங்கள். உங்களுக்குரிய பொருளை ஒருவன் எடுத்துக்கொண்டால் அதைத் திரும்பக் கேட்காதீர்கள். உங்களுக்குப் பிறர் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் செய்யுங்கள். “உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால் அதற்காக உங்களைப் புகழ வேண்டியது தேவையா? இல்லை. பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களிடம் அன்பு காட்டுகிறார்களே! உங்களுக்கு நல்லதைச் செய்பவர்களுக்கு நீங்களும் நன்மை செய்தால், அவ்வாறு செய்வதற்காக உங்களைப் புகழ வேண்டுமா? இல்லை. பாவிகளும் அதைச் செய்கிறார்களே! திருப்பி அடைத்துவிட முடிந்தவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களை அதற்காகப் புகழக் கூடுமா? இல்லை. பாவிகளும் கூட பிற பாவிகளுக்கு அதே தொகையைத் திரும்பப் பெறும்படியாக கடன் உதவி செய்கிறார்களே! “எனவே, பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை சிறிதும் இல்லாவிடினும் கூட கடன் கொடுங்கள். நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்தால் அதற்கு மிகுந்த பலனைப் பெறுவீர்கள். மகா உன்னதமான தேவனின் பிள்ளைகள் ஆவீர்கள். ஆம், ஏனெனில் பாவிகளுக்கும், நன்றியற்ற மனிதர்களுக்கும் தேவன் நல்லவர். உங்கள் தந்தை அன்பும் இரக்கமும் உடையவராக இருப்பது போலவே, நீங்களும் அன்பும் இரக்கமும் உடையவர்களாக இருங்கள். “மற்றவர்களை நியாயம் தீர்க்காதிருங்கள். இதனால் நீங்கள் நியாயம் தீர்க்கப்படமாட்டீர்கள். மற்றவர்களைப் பழிக்காதீர்கள். இதனால் நீங்களும் பழிக்கு ஆளாகமாட்டீர்கள். பிறரை மன்னியுங்கள். இதனால் நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். பிறருக்குக் கொடுங்கள். நீங்களும் பெறுவீர்கள். உங்களுக்கு மிகுதியாக அளிக்கப்படும். உங்கள் கைகளில் கொள்ளமுடியாதபடிக்கு உங்களுக்கு அள்ளி வழங்கப்படும். உங்கள் மடிகளில் கொட்டும்படிக்கு மிகுதியாக உங்களுக்குத் தரப்படும். நீங்கள் பிறருக்குக் கொடுக்கிறபடியே தேவனும் உங்களுக்குக் கொடுப்பார்” என்றார். இயேசு அவர்களுக்கு ஓர் உவமையைக் கூறினார். “ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? இல்லை. இருவரும் குழிக்குள் விழுவார்கள். ஆசிரியரைக் காட்டிலும் மாணவன் நன்கு கற்றுத் தேர்ந்தபோது, தனது ஆசிரியரைப்போல் விளங்குவான். “உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைக் கவனிக்க முடியாதபோது, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை நீ கவனிப்பது ஏன்? நீ உன் சகோதரனை நோக்கி, ‘சகோதரனே! உன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை எடுத்துப் போடட்டுமா?’ என்கிறாய். ஏன் இதைச் சொல்கிறாய்? நீ உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைப் பார்ப்பதில்லை. நீ வேஷமிடுகின்றாய். முதலில் உன் கண்ணில் இருக்கும் மரத்துண்டை எடுத்துவிடு. அப்போது உன் சகோதரன் கண்ணிலிருக்கும் தூசியை எடுத்துப்போடுவதற்கு நீ தெளிவாகப் பார்க்க முடியும். “ஒரு நல்ல மரம் கெட்ட பழத்தைக் கொடுக்காது. அவ்வாறே ஒரு கெட்ட மரமும் நல்ல பழத்தைக் கொடுக்காது. ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும். முட்செடிகளில் இருந்து மக்கள் அத்திப் பழங்களைச் சேர்ப்பதில்லை. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களை அவர்கள் பெறுவதில்லை. நல்ல மனிதனின் இதயத்தில் நல்ல காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் இதயத்தில் இருந்து நல்ல காரியங்களையே வெளிப்படுத்துவான். ஆனால், தீய மனிதனின் இதயத்தில் தீய காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் தீய காரியங்களை வெளிப்படுத்துவான். ஏனெனில் ஒருவனின் வாய் வழியே வெளிப்படும் வார்த்தைகள் அவனுடைய இதயத்தில் இருப்பவற்றின் வெளிப்பாடே ஆகும். “நான் கூறுவதை நீங்கள் செய்யாமல் என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் அழைக்கிறீர்கள்? என்னிடம் வந்து, என் போதனைகளைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிகிற ஒவ்வொரு மனிதனும், வீட்டைக் கட்டுகிற ஒரு மனிதனைப் போல் இருக்கிறான். அவன் ஆழமாகத் தோண்டி, உறுதியான பாறையின் மீது அவனுடைய வீட்டைக் கட்டுகிறான். வெள்ளப்பெருக்கின்போது, அவ்வீட்டை வெள்ளம் அடித்துச் செல்ல முற்படும். ஆனால் வெள்ளப்பெருக்கு அவ்வீட்டை அசைக்க முடியாது. ஏனெனில் அவ்வீடு உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது. “ஆனால் என் வார்த்தையைக் கேட்டு, அவற்றின்படி செய்யாத ஒவ்வொரு மனிதனும் பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டாத மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான். வெள்ளப் பெருக்கின்போது அவ்வீடு எளிதில் இடிந்து போகும். அவ்வீடு முழுக்க நாசமாகிவிடும்” என்றார்.

லூக்கா 6:12-49 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். பொழுதுவிடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன். யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே. பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம் பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள். அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். அவரிடத்திலிருந்து வல்லமைபுறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள். மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது. திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனித் துக்கப்பட்டு அழுவீர்கள். எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள். கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது. அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன். ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்