லூக்கா 5:12-32

லூக்கா 5:12-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரையில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கிற்று. அப்பொழுது இயேசு அவனிடம், “இதைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம்; ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து; அது அவர்களுக்கு சாட்சியாய் இருக்கும்” என்று கட்டளையிட்டார். ஆனால் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று, இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் தங்கள் நோய்களிலிருந்து சுகமடைவதற்கும், மக்கள் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். ஆனால் இயேசுவோ அவர்களைவிட்டுத் தனிமையான இடத்திற்கு விலகிப்போய், அங்கே மன்றாடினார். ஒரு நாள் இயேசு போதித்துக் கொண்டிருந்தார், கலிலேயாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் யூதேயாவிலும் எருசலேமிலுமிருந்து வந்த பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நோயாளிகளை குணமாக்கும்படியான கர்த்தருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது. அப்பொழுது படுக்கையில் இருந்த முடக்குவாதக்காரன் ஒருவனை சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; அவனை வீட்டிற்குள் கொண்டுபோய் இயேசுவுக்கு முன்பாகக் கிடத்துவதற்கு அவர்கள் முயற்சிசெய்தார்கள். மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால் அப்படிச் செய்வதற்கான வழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை; எனவே அவர்கள் வீட்டின்மேல் ஏறி கூரையின் ஓடுகளைப் பிரித்து, அதன் வழியாக படுக்கையில் கிடந்த அவனைக் கூடியிருந்த மக்கள் நடுவே இயேசுவுக்குமுன் இறக்கினார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், “இறைவனை நிந்தித்துப் பேசுகிற இவன் யார்? இறைவனாலன்றி யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று தங்களுக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்து, “உங்கள் மனதில் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்? ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது? ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். உடனே அவர்களுக்கு முன்பாக அவன் எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு இறைவனைத் துதித்தபடி தன் வீட்டிற்குப் போனான். எல்லோரும் வியப்படைந்து இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் திகிலடைந்து, “நாங்கள் இன்று ஆச்சரியமானவற்றைக் கண்டோம்” என்றார்கள். இதற்குப் பின்பு, இயேசு வெளியே சென்று வரி வசூலிக்கும் அலுவலகத்தில் வரி வசூலிக்கிறவனான லேவி என்பவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றான். பின்பு லேவி தன்னுடைய வீட்டிலே இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தான்; வரி வசூலிக்கிறவர்களும் வேறு பலரும் பெருங்கூட்டமாக வந்து, அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் பரிசேயரும் அவர்களுடைய குழுவைச் சேர்ந்த மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவின் சீடர்களிடம், “நீங்கள் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறது ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே மனந்திரும்பும்படி அழைக்கவந்தேன்” என்றார்.

லூக்கா 5:12-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது. அவர் அவனை நோக்கி: நீ இதை யாருக்கும் உடனே சொல்லாமல், நீ எருசலேமுக்குப்போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார். அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள். அவரோ வனாந்திரத்தில் தனிமையாகச்சென்று, ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள எல்லா கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; நோயாளிகளைக் குணமாக்கத்தக்க கர்த்தருடைய வல்லமை அவரிடம் இருந்தது. அப்பொழுது சில மனிதர்கள் பக்கவாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடு எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவருக்கு முன்பாக வைக்கவும் முயற்சித்தார்கள். மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோக முடியாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள்வழியாக மக்களின் மத்தியில் இயேசுவிற்கு முன்பாக அவனைப் படுக்கையோடு இறக்கினார்கள். அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, பக்கவாதக்காரனை நோக்கி: மனிதனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் யோசனைபண்ணி, தேவநிந்தனை சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? என்றார்கள். இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களுடைய இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறது என்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ அல்லது எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டிற்குப்போனான். அதினாலே எல்லோரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள். இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு, வரி வசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிவசூலிக்கும் ஒருவனைக் கண்டு: என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் எல்லாவற்றையும்விட்டு, எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான். அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக வரி வசூலிப்பவர்களும் மற்றவர்களும் அவர்களோடு பந்தியில் இருந்தார்கள். வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவருடைய சீடர்களுக்கு எதிராக முறுமுறுத்து: நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உட்கார்ந்து சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் ஏன்? என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமாக உள்ளவர்களுக்குத் தேவையில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

லூக்கா 5:12-32 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருமுறை இயேசு மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த மனிதன் ஒருவன் வாழ்ந்த ஒரு நகரத்தில் இருந்தார். அந்த மனிதனைத் தொழு நோய் பீடித்திருந்தது. அந்த மனிதன் இயேசுவைப் பார்த்ததும் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, “ஆண்டவரே, என்னைக் குணப்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்கள் என்னைக் குணமாக்க முடியும் என்பது எனக்குத் தெரியும்” என்று வேண்டினான். இயேசு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். இயேசு அவனைத் தொட்டார். உடனே தொழு நோய் அவனை விட்டு மறைந்தது. இயேசு அவனிடம், “இப்போது நடந்ததை யாருக்கும் சொல்லாதே. ஆனால் ஆசாரியனிடம் சென்று காட்டு. மோசே கட்டளையிட்டபடி நீ குணமாகியதற்கேற்ப தேவனுக்கு ஒரு காணிக்கை கொடு. இது நீ குணமாகியதை மக்களுக்குக் காட்டும்” என்றார். ஆனால் இயேசுவைப்பற்றிய செய்தி மிகவும் விரிந்த அளவில் பரவியது. பல மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்பதற்கும், தங்கள் நோய்களினின்று குணமாவதற்கும் வந்தனர். பிரார்த்தனை செய்யும்பொருட்டுத் தனிமையான இடத்தைத் தேடி இயேசு அடிக்கடி வேறு, வேறு இடங்களுக்குச் சென்றார். ஒருநாள் இயேசு மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். பரிசேயர்களும் வேதபாரகரும் கூட அங்கே உட்கார்ந்துகொண்டிருந்தனர். கலிலேயா, யூதேயா, எருசலேம் ஆகிய நகரங்களில் இருந்து அவர்கள் வந்திருந்தனர். தேவன் குணமாக்கும் வல்லமையை இயேசுவுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். பக்கவாதக்காரன் ஒருவன் அங்கிருந்தான். சில மனிதர்கள் அவனை ஒரு சிறுபடுக்கையில் சுமந்து வந்தனர். அவர்கள் அவனைக் கொண்டுவந்து இயேசுவின் முன் வைக்க முயன்றனர். ஆனால் மக்கள் திராளாகக் கூடியிருந்ததால் அவர்களால் இயேசுவினருகே வர வழி கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே அந்த மனிதர்கள் கூரையின் மேலேறி, கூரையில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாகப் படுக்கையோடு பக்கவாதக்காரனைக் கீழே இறக்கினர். அவர்கள் இயேசுவின் முன்னே பக்கவாதக்காரன் படுத்திருக்கும்படியாக அந்த அறைக்குள்ளேயே அவனை இறக்கினர். அவர்கள் விசுவாசமுள்ளவர்கள் என்பதை இயேசு கண்டார். நோயாளியிடம் இயேசு, “நண்பனே, உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். வேதபாரகரும், பரிசேயரும் தமக்குள்ளேயே, “இந்த மனிதன் யார்? தேவனுக்கு எதிரான காரியங்களை இவன் பேசுகிறான். தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும்” என்று எண்ணிக் கொண்டனர். அவர்களின் எண்ணத்தை இயேசு அறிந்திருந்தார். அவர், “நீங்கள் மனதில் இவ்வாறு எண்ணுவது ஏன்? பக்கவாதக்காரனிடம், ‘உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதோ, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதோ, எது எளிது? ஆனால் பூமியில் பாவங்களை மன்னிக்க தேவனுடைய குமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நான் நிரூபிப்பேன்” என்றார். ஆகவே இயேசு பக்கவாதக்காரனை நோக்கி, “எழுந்து நில், உனது படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். அப்போது அம்மனிதன் அங்கு கூடியிருந்த மக்களுக்கு முன்பாக எழுந்திருந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு தேவனை வாழ்த்திக்கொண்டே வீட்டிற்கு நடந்து போனான். எல்லா மக்களும் மிகுந்த ஆச்சரியமுற்றனர். அவர்கள் தேவனை வாழ்த்த ஆரம்பித்தனர். தேவனுடைய வல்லமையைக் குறித்து மிகுந்த பயபக்தியுள்ளவர்களாகி, “இன்று ஆச்சரியமான காரியங்களைக் கண்டோம்” என்றார்கள். இது நடந்த பின்னர், இயேசு வெளியே சென்றுகொண்டிருக்கையில் வரி அலுவலகத்தின் முன்பாக வரி வசூலிப்பவன் ஒருவன் உட்கார்ந்திருக்கக் கண்டார். அவன் பெயர் லேவி. இயேசு அவனை நோக்கி, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தான். பின்பு, லேவி, இயேசுவுக்குப் பெரிய விருந்தளித்தான். லேவியின் வீட்டில் அந்த விருந்து நடந்தது. வரி வசூலிப்பவர்கள் பலரும் வேறு சில மக்களும் அவர்களோடு மேசையின் முன் அமர்ந்திருந்தனர். பரிசேயர்களும், வேதபாரகரும் இயேசுவின் சீஷர்களிடம் புகார் கூறத்தொடங்கி, “நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் மற்ற தீய மக்களோடும் அமர்ந்து அவர்களோடு உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று வினவினர். அவர்களுக்கு இயேசு, “ஆரோக்கியமான மக்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயுற்றோருக்குத்தான் மருத்துவர் தேவை. நல்ல மனிதர்களிடம் மனம் மாறும்படியாகக் கேட்பதற்கு நான் வரவில்லை. தீயவர்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக் கொள்ளும்படியாகக் கேட்பதற்கே நான் வந்திருக்கிறேன்” என்று பதிலுரைத்தார்.

லூக்கா 5:12-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று. அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார். அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள் அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று. அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள். ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள். அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள். இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான். அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள். இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார். அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிற தென்னவென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.