லூக்கா 4:31-37

லூக்கா 4:31-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு போய், ஓய்வுநாளிலே அங்குள்ள மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில் அவருடைய வார்த்தைகள் அதிகாரமுடையதாயிருந்தது. ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒருவன் இருந்தான். அவன் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு, “நசரேயனாகிய இயேசுவே போய்விடும்! எங்களிடம் உமக்கு என்ன வேண்டும்? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும்; நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான். “அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார். அப்பொழுது அந்த தீய ஆவி அவர்கள் எல்லோருக்கும் முன்பாக அவனை விழத்தள்ளி விட்டு, அவனுக்கு காயம் ஏதும் உண்டாக்காமல் வெளியேறியது. எல்லா மக்களும் வியப்படைந்து, “இவை என்ன வார்த்தைகள்! அவர் அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார், அவைகளும் வெளியேறுகின்றன!” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். இயேசுவைப்பற்றிய இச்செய்தி, சுற்றுப்புறம் எங்கும் பரவியது.

லூக்கா 4:31-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு வந்து, ஓய்வுநாட்களில் மக்களுக்குப் போதனை பண்ணினார். அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாக இருந்தபடியால் அவருடைய போதனையைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை மக்களின் நடுவே கீழேத் தள்ளி, அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாமல், அவனைவிட்டுப் போய்விட்டது. எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்தஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அவரைப்பற்றின புகழ் சுற்றிலுமிருந்த இடங்களிலெல்லாம் பரவியது.

லூக்கா 4:31-37 பரிசுத்த பைபிள் (TAERV)

கலிலேயாவில் உள்ள பட்டணமாகிய கப்பர்நகூமுக்கு இயேசு சென்றார். ஓய்வு நாளில் இயேசு மக்களுக்குப் போதித்தார். அவரது போதனைகளைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். ஏனெனில் அவர் மிகுந்த அதிகாரத்துடன் பேசினார். பிசாசினால் அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதன் ஜெப ஆலயத்தில் இருந்தான். அந்த மனிதன் உரத்த குரலில், “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் என்ன விரும்புகிறீர்? நீர் யார் என்பதை நான் அறிவேன். நீர் தேவனுடைய பரிசுத்தமானவர்” என்றான். அசுத்த ஆவியைப் பேசாமல் இருக்கும்படி எச்சரித்தார் இயேசு. “அமைதியாக இருப்பாயாக! இம்மனிதனிலிருந்து வெளியே வா!” என்றார் இயேசு. எல்லாருக்கும் முன்பாக அசுத்த ஆவி அம்மனிதனைத் தரையில் தூக்கி எறிந்தது. பின்பு அசுத்த ஆவி காயப்படுத்தாமல் அம்மனிதனை விட்டு விலகியது. மக்கள் அதைக் கண்டு அதிசயப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “இதன் பொருள் என்ன? அதிகாரத்தோடும் வல்லமையோடும் அவர் அசுத்த ஆவிகளுக்குக் கட்டளை இடுகிறார். அவை வெளியேறுகின்றன” என்று சொல்லிக் கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள எல்லா இடங்களிலும் இயேசுவைப்பற்றிய செய்தி பரவியது.

லூக்கா 4:31-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்