லூக்கா 4:14-19

லூக்கா 4:14-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார்; அவரைப் பற்றியச் செய்தி நாட்டுப்புறம் முழுவதிலும் பரவியது. இயேசு யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் போதித்தார், எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, ஓய்வுநாளிலே தமது வழக்கத்தின்படி அவர் ஜெப ஆலயத்திற்குப்போய், அங்கே வேதவசனத்தை வாசிக்கும்படி எழுந்து நின்றார். அங்கே இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகச்சுருள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் விரித்து, இவ்வாறு எழுதியிருந்த இடத்தைக் கண்டு வாசித்தார்: “கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், ஏனெனில் ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி, அவர் என்னை அபிஷேகம் பண்ணினார். அவர் என்னை சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை அறிவிக்கவும், குருடருக்கு பார்வையை அளிக்கவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய தயவின் வருடத்தைப் பிரசித்தப்படுத்தம் என்னை அனுப்பியிருக்கிறார்.”

லூக்கா 4:14-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். அவரைப்பற்றிய செய்தி சுற்றிலும் இருக்கிற தேசங்களெல்லாம் பரவியது. அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லோராலும் புகழப்பட்டார். ஒரு நாள் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குச் சென்று, வேதத்தை வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புத்தகத்தை விரித்தபோது: யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், இந்த வருடம் யெகோவாவுடைய கிருபையின் வருடம் என்பதைச் சொல்லவும், என்னை அனுப்பினார்,” என்று எழுதியிருக்கிறதை அவர் பார்த்து.

லூக்கா 4:14-19 பரிசுத்த பைபிள் (TAERV)

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். இயேசுவைப் பற்றிய செய்திகள் கலிலேயா தேசத்தைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் பரவின. இயேசு யூதர்களின் ஜெப ஆலயங்களில் போதிக்க ஆரம்பித்தார். எல்லா மக்களும் அவரைப் புகழ்ந்தனர். தான் வளர்ந்த இடமாகிய நாசரேத்திற்கு இயேசு பயணம் செய்தார். யூதர்களின் ஓய்வு நாளில் அவர் வழக்கம் போல் ஜெப ஆலயத்திற்குச் சென்று வாசிப்பதற்காக எழுந்து நின்றார். ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இயேசு புத்தகத்தைத் திறந்து கீழ்வரும் பகுதி எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்: “தேவனுடைய ஆவி என்னிலுள்ளது. ஏதுமற்ற மக்களுக்கு நற்செய்தியைப் போதிப்பதற்கு தேவன் என்னைத் தேர்ந்தார். கைதிகள் விடுதலை பெறவும் குருடர்கள் மீண்டும் பார்வை பெறவும் அம்மக்களுக்குப் போதிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார். தங்கள் துன்பத்தினின்று பலவீனர்கள் விடுதலை பெறும்பொருட்டு தேவன் என்னை அனுப்பினார். மக்களுக்கு தேவன் இரக்கம் காட்டும் காலத்தை அறிவிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார்”

லூக்கா 4:14-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார். தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு