லூக்கா 3:1-6

லூக்கா 3:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ரோம பேரரசன் திபேரியு சீசரது ஆட்சியின் பதினைந்தாவது வருடத்தில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநனாக இருந்தான். அக்காலத்தில் ஏரோது கலிலேயாவை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். அவனது சகோதரன் பிலிப்பு இத்துரேயா, திராகொனித்து ஆகிய பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். லிசானியா என்பவன் அபிலேனே பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். அக்காலத்தில் அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராய் இருந்தார்கள். அப்பொழுது பாலைவனத்தில் இருந்த சகரியாவின் மகன் யோவானுக்கு இறைவனுடைய வார்த்தை வந்தது. அவன் யோர்தான் நதியைச் சுற்றியுள்ள நாட்டுப்புறம் எங்கும் சென்று, மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான். இறைவாக்கினன் ஏசாயாவின் வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதுபோல் இது நடந்தது: “பாலைவனத்தில் கூப்பிடுகிற ஒருவனின் குரல் கேட்கிறது, ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்காக பாதைகளை நேராக்குங்கள். பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும். கோணலான வீதிகள் நேராகும், கரடுமுரடான வழிகள் சீராகும். மனுக்குலம் யாவும் இறைவனின் இரட்சிப்பைக் காணும்.’ ”

லூக்கா 3:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும், அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது. அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும், பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும், மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி, அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.

லூக்கா 3:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

அது திபேரியு இராயன் அரசாண்ட பதினைந்தாவது வருஷமாயிருந்தது. சீசருக்குக் கீழான மனிதர்களின் விவரமாவது; பொந்தியு பிலாத்து யூதேயாவை ஆண்டான். ஏரோது கலிலேயாவை ஆண்டான். ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயாவையும் திராகொனித்தி நாட்டையும் ஆண்டான். அன்னாவும், காய்பாவும் தலைமை ஆசாரியராக இருந்தனர். அப்போது சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனிடமிருந்து ஒரு கட்டளை வந்தது. யோவான் வனாந்தரத்தில் வாழ்ந்து வந்தான். யோர்தான் நதியைச் சுற்றிலுமுள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் யோவான் சென்றான். அவன் மக்களுக்குப் போதித்தான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியாக, இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுமாறு யோவான் மக்களுக்குக் கூறினான். இது ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளின் நிறைவேறுதலாக அமைந்தது: “வனாந்தரத்தில் யாரோ ஒரு மனிதன் கூவிக்கொண்டிருக்கிறான்: ‘கர்த்தருக்கு வழியைத் தயார் செய்யுங்கள். அவருக்குப் பாதையை நேராக்குங்கள். பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். ஒவ்வொரு மலையும் குன்றும் மட்டமாக்கப்படும். திருப்பம் மிக்க பாதைகள் நேராக்கப்படும். கரடுமுரடான பாதைகள் மென்மையாகும். ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய இரட்சிப்பை அறிவான்.’”

லூக்கா 3:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

திபேரியுராயன் ராஜ்யபாரம்பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும், அன்னாவும் காய்பாவும் பிரதானஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று. அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும், மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம், அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்