லூக்கா 24:18-27

லூக்கா 24:18-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான். அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார். தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்; நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன. அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள். அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே! கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?” என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.

லூக்கா 24:18-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் மறுமொழியாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராக இருக்கிறீரோ என்றான். அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் மக்களெல்லோருக்கு முன்பாகவும் செயலிலும் சொல்லிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார். நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாட்களாகிறது. ஆனாலும் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதர்களைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கச்செய்தார்கள். அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப்போய், பெண்கள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதல் எல்லாத் தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.

லூக்கா 24:18-27 பரிசுத்த பைபிள் (TAERV)

கிலேயோபாஸ் என்பவன், “கடந்த சில நாட்களாக அங்கே நிகழ்ந்தவற்றை அறியாத மனிதர் எருசலேமில் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்” என்றான். அவர்களை நோக்கி, இயேசு, “நீங்கள் எதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார். அம்மனிதர்கள் அவரை நோக்கி, “நாசரேத்தில் உள்ள இயேசுவைக் குறித்துப் பேசுகிறோம். தேவனுக்கும் மக்களுக்கும் அவர் ஒரு பெரிய தீர்க்கதரிசி. அவர் பல ஆற்றல் மிக்க காரியங்களைச் சொல்லியும் செய்தும் வந்திருக்கிறார். ஆனால் தலைமை ஆசாரியரும் நம் தலைவர்களும் அவர் நியாயந்தீர்க்கப்பட்டுக் கொல்லப்படுமாறு கொடுத்துவிட்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். இஸ்ரவேல் மக்களை விடுவிப்பவர் இயேசு ஒருவரே என நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படி நடந்துள்ளது. இயேசு கொல்லப்பட்டு மூன்று நாட்களாகிவிட்டன. இன்று எங்கள் பெண்களில் சிலர் எங்களுக்குச் சில ஆச்சரியமான தகவல்களைச் சொன்னார்கள். இன்று அப்பெண்கள் அதிகாலையில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்றார்கள். ஆனால் அவரது உடலை அங்கே காணவில்லை. அவர்களுக்கு ஒரு காட்சியில் தரிசனமான இரண்டு தேவதூதர்களைப் பார்த்தார்கள். ‘இயேசு உயிரோடு இருக்கிறார்’ என அவர்கள் சொன்னார்கள் என்று அப்பெண்கள் வந்து எங்களிடம் சொன்னார்கள். அதன் பின்பு எங்களில் சிலரும் கல்லறைக்குச் சென்றார்கள். பெண்கள் சொன்னபடியே இருந்தது. கல்லறை வெறுமையாக இருந்ததை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவைப் பார்க்கவில்லை” என்றார்கள். பின்பு இயேசு இருவரிடமும், “நீங்கள் அறிவற்றவர்கள். உண்மையை மிகவும் தாமதமாக உணர்ந்துகொள்கிறீர்கள். தீர்க்கதரிசிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் நம்பவேண்டும். கிறிஸ்து தன் மகிமையில் நுழையும்முன்பு இவ்வாறு துன்புற வேண்டும் என்று தீர்க்கதரிசிகள் கூறி இருந்தார்கள்” என்றார். பிற்பாடு சுவடிகளில் தன்னைப்பற்றி எழுதிய ஒவ்வொன்றைப்பற்றியும் இயேசு விளக்க ஆரம்பித்தார். மோசேயின் புத்தகங்கள் தொடங்கி தீர்க்கதரிசிகள் வரைக்கும் இயேசுவைக் குறித்துக் கூறியவற்றை அவர் சொன்னார்.

லூக்கா 24:18-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரணஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள. அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள். அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.