லூக்கா 24:13-53

லூக்கா 24:13-53 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது. அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள். அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்; ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள். அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான். அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார். தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்; நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன. அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள். அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே! கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?” என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார். இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார். அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள். சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார். அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது? என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார். இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார். அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள். அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார். “நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார். பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார். இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார். மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும். இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள். என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார். இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.

லூக்கா 24:13-53 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றைய தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தொலைவிலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போனார்கள். போகும்போது இந்தச் சம்பவங்கள் எல்லாவற்றையுங்குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். இப்படி அவர்கள் பேசி, உரையாடிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே சேர்ந்து அவர்களோடு நடந்துபோனார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாக நடந்துகொண்டே, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் மறுமொழியாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராக இருக்கிறீரோ என்றான். அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் மக்களெல்லோருக்கு முன்பாகவும் செயலிலும் சொல்லிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார். நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாட்களாகிறது. ஆனாலும் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதர்களைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கச்செய்தார்கள். அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப்போய், பெண்கள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதல் எல்லாத் தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அந்த சமயத்தில் தாங்கள் போகிற கிராமத்திற்கு அருகில் வந்தார்கள். அப்பொழுது அவர் தொடர்ந்து போகிறவர்போலக் காண்பித்தார். அவர்கள் அவரைப் பார்த்து: நீர் எங்களுடனே தங்கியிரும், மாலைநேரமானது, பொழுதும்போனது, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களோடு தங்கும்படி உள்ளே போனார். அவர்களோடு அவர் உணவருந்தும்போது, அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, அந்த நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருபேரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு: கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குக் காட்சியளித்தார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு, வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கும்போது தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள். இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார், அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களைப் பார்த்து: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள். என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைவிட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து, நாள்தோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து ஆராதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.

லூக்கா 24:13-53 பரிசுத்த பைபிள் (TAERV)

எம்மா என்னும் ஊருக்கு அதே நாள் இயேசுவின் இரண்டு சீஷர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். எருசலேமில் இருந்து ஏழு மைல் தூரத்தில் அந்த ஊர் இருந்தது. நடந்தவை அனைத்தையும் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இவற்றை விவாதித்துக்கொண்டிருக்கும்போது இயேசு அருகே வந்து அவர்களோடு நடந்தார். (இயேசுவை அடையாளம் கண்டுகொள்வதிலிருந்து ஏதோ ஒன்றால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள்) “நீங்கள், நடக்கும்போது பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் என்ன?” என்று இயேசு கேட்டார். இருவரும் நின்றார்கள். அவர்கள் முகங்கள் சோகத்தால் நிரம்பி இருந்தன. கிலேயோபாஸ் என்பவன், “கடந்த சில நாட்களாக அங்கே நிகழ்ந்தவற்றை அறியாத மனிதர் எருசலேமில் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்” என்றான். அவர்களை நோக்கி, இயேசு, “நீங்கள் எதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார். அம்மனிதர்கள் அவரை நோக்கி, “நாசரேத்தில் உள்ள இயேசுவைக் குறித்துப் பேசுகிறோம். தேவனுக்கும் மக்களுக்கும் அவர் ஒரு பெரிய தீர்க்கதரிசி. அவர் பல ஆற்றல் மிக்க காரியங்களைச் சொல்லியும் செய்தும் வந்திருக்கிறார். ஆனால் தலைமை ஆசாரியரும் நம் தலைவர்களும் அவர் நியாயந்தீர்க்கப்பட்டுக் கொல்லப்படுமாறு கொடுத்துவிட்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். இஸ்ரவேல் மக்களை விடுவிப்பவர் இயேசு ஒருவரே என நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படி நடந்துள்ளது. இயேசு கொல்லப்பட்டு மூன்று நாட்களாகிவிட்டன. இன்று எங்கள் பெண்களில் சிலர் எங்களுக்குச் சில ஆச்சரியமான தகவல்களைச் சொன்னார்கள். இன்று அப்பெண்கள் அதிகாலையில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்றார்கள். ஆனால் அவரது உடலை அங்கே காணவில்லை. அவர்களுக்கு ஒரு காட்சியில் தரிசனமான இரண்டு தேவதூதர்களைப் பார்த்தார்கள். ‘இயேசு உயிரோடு இருக்கிறார்’ என அவர்கள் சொன்னார்கள் என்று அப்பெண்கள் வந்து எங்களிடம் சொன்னார்கள். அதன் பின்பு எங்களில் சிலரும் கல்லறைக்குச் சென்றார்கள். பெண்கள் சொன்னபடியே இருந்தது. கல்லறை வெறுமையாக இருந்ததை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவைப் பார்க்கவில்லை” என்றார்கள். பின்பு இயேசு இருவரிடமும், “நீங்கள் அறிவற்றவர்கள். உண்மையை மிகவும் தாமதமாக உணர்ந்துகொள்கிறீர்கள். தீர்க்கதரிசிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் நம்பவேண்டும். கிறிஸ்து தன் மகிமையில் நுழையும்முன்பு இவ்வாறு துன்புற வேண்டும் என்று தீர்க்கதரிசிகள் கூறி இருந்தார்கள்” என்றார். பிற்பாடு சுவடிகளில் தன்னைப்பற்றி எழுதிய ஒவ்வொன்றைப்பற்றியும் இயேசு விளக்க ஆரம்பித்தார். மோசேயின் புத்தகங்கள் தொடங்கி தீர்க்கதரிசிகள் வரைக்கும் இயேசுவைக் குறித்துக் கூறியவற்றை அவர் சொன்னார். அவர்கள் எம்மாவூர் என்னும் ஊரை அடைந்தார்கள். தன் பயணத்தைத் தொடர விரும்பியது போல இயேசு நடித்தார். ஆனால் அவர்கள் அவர் அங்கே தங்கவேண்டுமென விரும்பினார்கள். அவர்கள் இயேசுவை “எங்களுடன் தங்குங்கள். மிகவும் தாமதமாகிவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது” என்று கெஞ்சிக் கேட்டார்கள். எனவே அவர் அவர்களோடு தங்கச் சென்றார். அவர்களோடு சேர்ந்து இயேசு உணவுண்ண உட்கார்ந்திருந்தார். உணவுக்காக நன்றி சொல்லிவிட்டு, உணவைப் பகிர்ந்தார். அப்போது அம்மனிதர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவர் யார் என அவர்கள் உணர்ந்துகொண்டதும், அவர் மறைந்துவிட்டார். இருவரும் தமக்குள்ளாக, “பாதையில் நம்முடன் இயேசு பேசிக்கொண்டு வந்தபோது ஏதோ எரிவதுப்போல் ஓர் உணர்வு இதயத்தில் எழுந்தது. வேதாகமத்தின் பொருளை அவர் விளக்கியபோது மிகவும் பரவசமாக இருந்தது” என்று பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் எழுந்து திரும்பி எருசலேமை நோக்கிச் சென்றார்கள். எருசலேமில் இயேசுவின் சீஷர்கள் ஒன்றாகக் கூடியிருக்கக் கண்டார்கள். பதினொரு சீஷர்களும் அவர்களோடிருந்த மக்களும் “மரணத்தினின்று உண்மையாகவே அவர் மீண்டும் எழுந்தார்” சீமோனுக்கு (பேதுருவுக்கு) அவர் காட்சியளித்தார் என்றார்கள். அப்போது பாதையில் நடந்த விஷயங்களை இரு மனிதர்களும் கூறினார்கள். உணவைப் பங்கிட்டபோது எவ்வாறு இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள் எனச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோது சீஷர்களின் கூட்டத்தின் நடுவில் இயேசு நின்றிருந்தார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்றார். சீஷர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் பயந்தார்கள். அவர்கள் ஏதோ ஒரு ஆவியைப் பார்த்துக்கொண்டிருப்பதாக எண்ணினார்கள். ஆனால் இயேசு, “நீங்கள் எதற்காகக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? நீங்கள் காண்பதில் ஏன் ஐயம்கொள்கின்றீர்கள்? என் கைகளையும் என் பாதங்களையும் பாருங்கள். உண்மையாகவே நான்தான். என்னைத் தொடுங்கள். எனக்கு உயிருள்ள உடல் இருப்பதைப் பார்க்க முடியும். ஓர் ஆவி இப்படிப்பட்ட உடல் கொண்டிருக்காது” என்றார். இயேசு அவர்களுக்கு இதைக் கூறிய பின்பு, அவர்களுக்குத் தன் கைகளிலும், பாதங்களிலும் உள்ள ஆணித் துளைகளைக் காட்டினார். சீஷர்கள் ஆச்சரியமுற்றவர்களாக இயேசுவை உயிரோடு பார்த்ததால் மிகவும் மகிழ்ந்தார்கள். எனினும் கூட தாம் பார்த்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்களை நோக்கி இயேசு, “உங்களிடம் இங்கே ஏதாவது உணவு இருக்கிறதா?” என்று கேட்டார். அவர்கள் சமைத்த மீனில் ஒரு துண்டைக் கொடுத்தார்கள். சீஷர்களின் முன்னிலையில் இயேசு அந்த மீனை எடுத்து சாப்பிட்டார். அவர்களை நோக்கி இயேசு, “நான் உங்களோடு இருந்த காலத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். மோசேயின் சட்டத்திலும், தீர்க்கதரிசிகளின் நூற்களிலும், சங்கீதத்திலும் என்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற அனைத்தும் நடந்தேயாக வேண்டும் என்று நான் சொன்னேன்” என்றார். பின்பு இயேசு சீஷர்களுக்கு வேதாகமத்தை விளக்கினார். தன்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற காரியங்களை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவினார். பிறகு அவர்களை நோக்கி, “கிறிஸ்து கொல்லப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து எழுவார் என்று எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் நடந்தவை அனைத்தையும் பார்த்தீர்கள். நீங்களே சாட்சிகள். மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட முடியும் என்று நீங்கள் போய் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் தம் மனம் மாறி, தாம் செய்த பாவங்களுக்காக வருந்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அதைச் செய்தால் அவர்கள் தேவனால் மன்னிக்கப்படுவர். எருசலேமிலிருந்து நீங்கள் புறப்பட்டு என் பெயரில் இவற்றைப் போதிக்க வேண்டும். உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் இந்த நற்செய்தி கூறப்பட வேண்டும். கவனியுங்கள், என் பிதா உங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை உங்களுக்கு அனுப்புவேன். விண்ணில் இருந்து அந்த வல்லமையை நீங்கள் பெறும்வரைக்கும் எருசலேமில் தங்கி இருக்கவேண்டும்” என்றார். எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார். சீஷர்கள் அவரை அங்கே வணங்கினர். பிறகு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் மகிழ்வோடு இருந்தார்கள். தேவனை வாழ்த்தியவாறே எப்போதும் அவர்கள் தேவாலயத்தில் தங்கி இருந்தார்கள்.

லூக்கா 24:13-53 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரணஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள. அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள். அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர்போலக் காண்பித்தார். அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு: கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு, வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள். இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து, அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து, நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.