லூக்கா 23:39-56
லூக்கா 23:39-56 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அங்கே தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீர் கிறிஸ்து அல்லவா? உன்னையும், எங்களையும் விடுவியும்” என்று அவரை இகழ்ந்தான். ஆனால் மற்ற குற்றவாளியோ, அவனைக் கண்டித்து, “நீ இறைவனுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் இதே தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாயே. நாம் நியாயப்படி தண்டனை பெற்றிருக்கிறோம். நமது செயல்களுக்கேற்றதையே பெற்றிருக்கிறோம். இவரோ, எந்த தவறும் செய்யவில்லை” என்றான். பின்பு அவன் இயேசுவிடம், “இயேசுவே, உமது அரசில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்ளும்” என்றான். அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இன்றைக்கே நீ என்னுடன்கூட சொர்க்கத்தில் இருப்பாய்” என்றார். அப்பொழுது பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது, பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. சூரியன் இருளடைந்தது. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொல்லி, அவருடைய கடைசி மூச்சைவிட்டார். நூற்றுக்குத் தலைவன் நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக, கூடியிருந்த மக்கள் எல்லோரும் நடந்ததைக் கண்டபோது, அவர்கள் தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்கள். ஆனால் இயேசுவை அறிந்தவர்களும், கலிலேயாவில் இருந்து அவரைப் பின்பற்றி வந்த பெண்களும், தூரத்தில் நின்று இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தின் அங்கத்தினராயிருந்த, யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒருவன் இருந்தான். அவன் நல்லவனும், நீதிமானாயிருந்தான். அவன் அவர்களுடைய தீர்மானத்திற்கோ, அவர்களுடைய செயலுக்கோ உடன்பட்டிருக்கவில்லை. அவன் யூதேயாவின் ஒரு பட்டணமான, அரிமத்தியா என்ற இடத்தைச் சேர்ந்தவன். அவன் இறைவனுடைய அரசுக்காகக் காத்திருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவினுடைய உடலைத் தரும்படி கேட்டான். பின்பு அவன் உடலைக் கீழே இறக்கி, ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கற்பாறையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். கல்லறையில், இதுவரை எவருடைய உடலுமே வைக்கப்படவில்லை. அது ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆயத்த நாளாயிருந்தது. ஓய்வுநாளின் தொடக்கமோ நெருங்கிக் கொண்டிருந்தது. கலிலேயாவிலிருந்து இயேசுவுடன் வந்திருந்த பெண்கள், யோசேப்புக்குப் பின்னேசென்று கல்லறையையும், அதில் எப்படி இயேசுவினுடைய உடல் கிடத்தப்பட்டது என்பதையும் பார்த்தார்கள். பின்பு அவர்கள் வீட்டுக்குப்போய், நறுமணப் பொருட்களையும், நறுமணத் தைலங்களையும் ஆயத்தம் செய்தார்கள். ஆனால் கட்டளையின்படியே, ஓய்வுநாளில் அவர்கள் ஓய்ந்திருந்தார்கள்.
லூக்கா 23:39-56 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான். மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான். அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது. கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
லூக்கா 23:39-56 பரிசுத்த பைபிள் (TAERV)
சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான். ஆனால் இன்னொரு குற்றவாளி அவனைத் தடுத்தான். அவன், “நீ தேவனுக்கு பயப்பட வேண்டும். நாம் எல்லாரும் விரைவில் இறந்து போவோம். நீயும், நானும் குற்றவாளிகள். நாம் செய்த குற்றங்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதால் நீயும் நானும் கொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் இம்மனிதரோ (இயேசு) எந்தத் தவறும் செய்ததில்லை” என்றான். பின்பு இக்குற்றவாளி இயேசுவை நோக்கி, “இயேசுவே, உங்கள் இராஜ்யத்தை ஆரம்பிக்கும்போது என்னை நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்” என்றான். இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார். அப்போது மதிய வேளை. ஆனால் மதிய நேரம் பின்பு மூன்று மணிவரையிலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. சூரியன் தென்படவில்லை. தேவாலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது. இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார். அங்கு நின்ற இராணுவ அதிகாரி நடந்தவற்றை எல்லாம் பார்த்தான். அவன், “இந்த மனிதன் உண்மையிலேயே தேவ குமாரன்தான் என்பதை அறிவேன்” என்று கூறியவாறே தேவனை வாழ்த்தினான். இதைப் பார்க்கவென்று நகரிலிருந்து பலரும் வந்திருந்தார்கள். பார்த்ததும் துயரமிகுதியால் மார்பில் அறைந்தபடி வீட்டுக்குத் திரும்பினார்கள். இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் அங்கு இருந்தார்கள். கலிலேயாவில் இருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த சில பெண்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் சிலுவைக்கு சற்றே தொலைவில் இவற்றைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். அரிமத்தியா என்னும் நகரில் இருந்து ஒரு மனிதன் அங்கே வந்திருந்தான். அவன் பெயர் யோசேப்பு. அவன் நல்ல பக்தியுள்ள மனிதன். தேவனின் இராஜ்யத்தின் வருகையை எதிர் நோக்கி இருந்தான். யூதர் அவையில் அவன் ஒரு உறுப்பினன். பிற யூத அதிகாரிகள் இயேசுவைக் கொல்ல முடிவெடுத்தபோது அவன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இயேசுவின் உடலைக் கேட்கும்பொருட்டு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். உடலை எடுத்துக்கொள்ள பிலாத்து, யோசேப்புக்கு அனுமதி கொடுத்தான். எனவே யோசேப்பு சிலுவையில் இருந்து இயேசுவின் உடலைக் கீழே இறக்கி ஒரு துணியால் உடலைச் சுற்றினான். பிறகு பாறைக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு கல்லறைக்குள் இயேசுவின் உடலை வைத்தான். அக்கல்லறை அதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அப்பொழுது ஆயத்த நாளின் இறுதிப்பகுதி நெருங்கியது. சூரியன் மறைந்த பிறகு ஓய்வு நாள் ஆரம்பிக்கும். கலிலேயாவில் இருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்கள் யோசேப்பைத் தொடர்ந்தனர். அவர்கள் கல்லறையைப் பார்த்தார்கள். இயேசுவின் உடல் உள்ளே கிடத்தப்பட்டிருந்த இடத்தையும் பார்த்தார்கள். இயேசுவின் உடலில் பூசுவதற்காக மணம்மிக்க பொருள்களைத் தயாரிப்பதற்காக அப்பெண்கள் சென்றார்கள். ஓய்வு நாளில் அவர்கள் ஓய்வெடுத்தார்கள். மோசேயின் சட்டம் இவ்வாறு செய்யுமாறு எல்லா மக்களுக்கும் கட்டளை இட்டிருந்தது.
லூக்கா 23:39-56 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.