லூக்கா 23:18-25

லூக்கா 23:18-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள். அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலை பாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான். பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள். அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது. அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து, கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.

லூக்கா 23:18-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்களோ ஒரே குரலில், “இவன் வேண்டாம்! பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். பரபாஸ் என்பவனோ பட்டணத்தில் கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் வைக்கப்பட்டிருந்தான். பிலாத்து இயேசுவை விடுதலைசெய்ய விரும்பி, அவர்களிடம் மீண்டும் பேசினான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்! அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். மூன்றாவது முறையும் பிலாத்து அவர்களிடம் பேசி, “ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? இவனுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஆகவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான். ஆனால் அவர்களோ, “அவன் சிலுவையில் அறையப்படவே வேண்டும்” என்று உரத்த சத்தமாய் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்களுடைய சத்தமே மேற்கொண்டது. பிலாத்துவும், அவர்கள் கேட்டபடியே செய்யத் தீர்மானித்தான். எனவே, அவர்கள் கேட்டுக்கொண்டபடியே, கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டிருந்த பரபாஸை பிலாத்து விடுதலை செய்தான்; இயேசுவையோ, அவர்கள் விருப்பத்தின்படி செய்வதற்காக ஒப்படைத்தான்.

லூக்கா 23:18-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள். அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான். பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள். அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது. அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து, கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.

லூக்கா 23:18-25 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் மக்கள் அனைவரும், “அவனைக் கொல்லுங்கள். பரபாசை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டனர். (நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனிதன் பரபாஸ். அவன் சிலரைக் கொன்றுமிருந்தான்.) பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பினான். எனவே பிலாத்து மீண்டும் அவர்களை நோக்கி, இயேசுவை விடுவிப்பதாகக் கூறினான். ஆனால் அவர்கள் மீண்டும் உரத்த குரலில், “அவனைக் கொல்லுங்கள். அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்றார்கள். மூன்றாம் முறை பிலாத்து மக்களை நோக்கி, “ஏன்? அவன் என்ன தவறு செய்தான்? அவன் குற்றவாளி அல்ல. அவனைக் கொல்வதற்கேற்ற காரணம் எதையும் நான் காணவில்லை. எனவே அவனுக்குச் சிறிய தண்டனை கொடுத்து அவனை விடுதலை செய்வேன்” என்றான். ஆனால் தொடர்ந்து மக்கள் சத்தமிட்டார்கள். இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டுமென வேண்டினார்கள். அவர்கள் மிகவும் உரத்த குரலில் சத்தமிட்டதைக் கேட்டதும் அவர்களின் விருப்பத்தின்படியே செய்ய முடிவெடுத்தான் பிலாத்து. மக்கள் அனைவரும் பரபாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். கலகம் விளைவித்ததற்காகவும் மக்களைக் கொன்றதற்காகவும் பரபாஸ் சிறையில் இருந்தான். பிலாத்து பரபாஸை விடுவித்தான். கொல்லப்படும்பொருட்டு, இயேசுவை மக்களிடம் பிலாத்து ஒப்படைத்தான். மக்களும் அதையே விரும்பினர்.