லூக்கா 22:39-62
லூக்கா 22:39-62 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப்போனார்கள். அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி, அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரைபண்ணுகிறதைக் கண்டு: நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார். அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான். இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான். அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே. நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார். அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான். அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான். அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள். அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான். ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று. அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
லூக்கா 22:39-62 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வழக்கம்போல இயேசு ஒலிவமலைக்குச் சென்றார். அவருடைய சீடர்கள் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். அந்த இடத்தைச் சென்றடைந்தபோது, இயேசு அவர்களிடம், “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு மன்றாடுங்கள்” என்றார். இயேசு அவர்களைவிட்டு, ஒரு கல்லெறி தூரம் விலகிப்போய், முழங்காற்படியிட்டு மன்றாடினார். அவர், “பிதாவே, உமக்கு விருப்பமானால், என்னைவிட்டு இந்தப் பாத்திரத்தை எடுத்துவிடும்; ஆனால் என் விருப்பப்படியல்ல, உமது திட்டமே செய்யப்படட்டும்” என்றார். பரலோகத்திலிருந்து ஒரு தூதன் அவருக்கு முன்தோன்றி, அவரைப் பெலப்படுத்தினான். அவர் மிகவும் வேதனையடைந்தவராய், ஊக்கத்துடன் மன்றாடினார். அவருடைய வியர்வை, இரத்தத் துளிகளைப்போல தரையில் விழுந்தது. இயேசு மன்றாட்டிலிருந்து எழுந்து, தமது சீடர்களிடம் மீண்டும் சென்றார். அப்பொழுது சீடர்கள் கவலையினால் சோர்வுற்று, நித்திரையாய் இருப்பதை அவர் கண்டார். இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? சோதனைக்குட்படாதபடிக்கு எழுந்திருந்து மன்றாடுங்கள்” என்றார். இயேசு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ஆட்கள் கூட்டமாய் வந்தார்கள். பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் என்று அழைக்கப்பட்டவன், அவர்களை வழிநடத்திக் கொண்டுவந்தான். அவன் இயேசுவை முத்தம் செய்வதற்காக, அவருக்குக் சமீபமாய் வந்தான். இயேசுவோ அவனிடம், “யூதாசே, என்னை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கிறாயோ?” என்றார். இயேசுவைப் பின்பற்றியவர்கள், நடக்கப்போவதைக் கண்டு, “ஆண்டவரே, நாங்கள் எங்கள் வாளினாலே வெட்டட்டுமா?” என்று கேட்டார்கள். சீடர்களில் ஒருவன், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டினான். அப்பொழுது, அவனது வலது காது வெட்டுண்டது. ஆனால் இயேசுவோ, “போதும், நிறுத்துங்கள்!” என்று சொல்லி, அவனுடைய காதைத் தொட்டு, அவனைக் குணமாக்கினார். அப்பொழுது இயேசு, தம்மைப் பிடிக்கும்படி வந்திருந்த தலைமை ஆசாரியர்களையும், ஆலயகாவலர் அதிகாரிகளையும், யூதரின் தலைவர்களையும் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்போது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால், இதுவே உங்கள் வேளையாய் இருக்கிறது. இருள் அதிகாரம் செலுத்தும் வேளையே இது” என்றார். அவர்கள் இயேசுவைப் பிடித்து, பிரதான ஆசாரியன் வீட்டிற்குக் கொண்டுசென்றார்கள். பேதுரு சிறிது தூரத்தில் பின்தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். அந்த வீட்டு முற்றத்தின் நடுவில் சிலர் நெருப்புமூட்டி, அதன் அருகே ஒன்றாய் உட்கார்ந்தார்கள். அப்போது பேதுருவும் அவர்களுடன் உட்கார்ந்திருந்தான். பேதுரு அங்கே உட்கார்ந்திருப்பதை, ஒரு வேலைக்காரப் பெண் நெருப்பு வெளிச்சத்திலே கண்டாள். அவள் அவனை உற்றுப்பார்த்து, “இவன் இயேசுவோடு இருந்தான்” என்றாள். ஆனால் பேதுருவோ, “பெண்ணே, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு, வேறொருவன் பேதுருவைக் கண்டு, “நீயும் அவர்களில் ஒருவன் தான்” என்றான். அதற்குப் பேதுரு, “இல்லையப்பா, நான் அல்ல” என்றான். ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப் பின்பு இன்னொருவன், “நிச்சயமாகவே, இவனும் இயேசுவுடனே இருந்தான். ஏனெனில் இவன் கலிலேயன்” என்றான். அதற்குப் பேதுரு, “மனிதனே நீ என்னப் பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது” என்றான். அவன் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கையில், சேவல் கூவிற்று. அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நேருக்கு நேராய் பார்த்தார். உடனே, “இன்று சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று கர்த்தர் சொன்ன வார்த்தை, பேதுருவுக்கு ஞாபகம் வந்தது. அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான்.
லூக்கா 22:39-62 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள். அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி, அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை திடப்படுத்தினான். அவர் மிகவும் வேதனைப்பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம்செய்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாகத் தரையிலே விழுந்தது. அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு: நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார். அவர் அப்படிப் பேசும்போது மக்கள் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தம் செய்வதற்காக அவரிடத்தில் நெருங்கினான். இயேசு அவனைப் பார்த்து: யூதாசே, முத்தத்தினாலேயா மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். அவரைச் சுற்றி நின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான். அப்பொழுது இயேசு: போதும் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனை சுகப்படுத்தினார். பின்பு இயேசு தமக்கு விரோதமாக வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்து படைத்தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து: ஒரு திருடனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே. நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களோடுகூட இருக்கும்போது நீங்கள் என்னைப் பிடிக்கக் முற்படவில்லை; இதுதான் உங்களுடைய நேரமும் இருளின் அதிகாரமுமாக இருக்கிறது என்றார். அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்னேசென்றான். அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான். அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள். அதற்கு அவன்: பெண்ணே, அவனை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தான். சிறிதுநேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனிதனே, நான் இல்லை என்றான். ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான். அதற்குப் பேதுரு: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவியது. அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை உடனே பேதுரு நினைத்து, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.
லூக்கா 22:39-62 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு பட்டணத்தை (எருசலேம்) விட்டு ஒலிவமலைக்குச் சென்றார். அவரது சீஷர்கள் அவரோடு சென்றார்கள். அங்கே சென்றபிறகு சீஷர்களிடம் இயேசு, “நீங்கள் சோதனைக்கு ஆளாகாதவண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார். பின்பு இயேசு ஐம்பது அடி தூரம் அளவு அவர்களைவிட்டுச் சென்றார். அவர் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார்: “பிதாவே, நீங்கள் விரும்பினால் நான் துன்பத்தின் கோப்பையைக் குடிக்காமல் இருக்கும்படிச் செய்யுங்கள். ஆனால், நான் விரும்பும் வழியில் அல்லாமல் நீங்கள் விரும்பும் வழியிலேயே அது நடக்கட்டும்” என்றார். அப்போது பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதன் அவருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டான். வேதனையால் இயேசு வருந்தினார். எனவே மிகவும் வேதனையோடு ஊக்கமாகப் பிரார்த்தனை செய்தார். குருதி கொட்டுவதுபோல அவரது முகத்தில் இருந்து வியர்வை வடிந்தது. இயேசு பிரார்த்தனை செய்து முடிந்த பின்னர், அவரது சீஷர்களிடம் சென்றார். அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். (அவர்கள் துயரம் அவர்களைச் சோர்வுறச் செய்தது.) இயேசு அவர்களை நோக்கி, “ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எழுந்து சோதனைக்கு எதிரான வலிமைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார். இயேசு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மக்கள் கூட்டம் வந்தது. பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் அக்கூட்டத்தை வழிநடத்தி வந்தான். அவன் யூதாஸ். இயேசுவை முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக யூதாஸ் வந்தான். ஆனால் இயேசு அவனை நோக்கி, “யூதாஸ், மனித குமாரனை வஞ்சிக்கும்பொருட்டு நட்பின் முத்தத்தைப் பயன்படுத்துகிறாயா?” என்று கேட்டார். இயேசுவின் சீஷர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன நடக்கப்போகிறதென உணர்ந்தார்கள். சீஷர்கள் இயேசுவிடம், “ஐயா, எங்கள் வாள்களை பயன்படுத்தட்டுமா?” என்றார்கள். சீஷர்களில் ஒருவன் வாளைப் பயன்படுத்தவும் செய்தான். தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை அவன் வெட்டினான். இயேசு “நிறுத்து” என்றார். பின்பு இயேசு வேலைக்காரனின் காதைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார். இயேசுவைச் சிறைப்பிடிக்க வந்த கூட்டத்தில் தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும், தேவாலயக் காவலர்களும் இருந்தனர். இயேசு அவர்களை நோக்கி, “வாளோடும் தடிகளோடும் நீங்கள் ஏன் வந்தீர்கள்? நான் குற்றவாளி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் நான் தேவாலயத்தில் உங்களோடு இருந்தேன். ஏன் என்னை அங்கே சிறைபிடிக்க முயல வில்லை? ஆனால் இது உங்கள் காலம். இருள் (பாவம்) ஆட்சி புரியும் நேரம்” என்றார். அவர்கள் இயேசுவைச் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள். தலைமை ஆசாரியனின் வீட்டுக்கு இயேசுவை அவர்கள் கொண்டுவந்தார்கள். பேதுரு அவர்களைத் தொடர்ந்து வந்தான். ஆனால் அவன் இயேசுவின் அருகே வரவில்லை. வீரர்கள் வீட்டுக்கு வெளிப்புறத்தில் நடுவில் நெருப்பை வளர்த்து அதைச் சுற்றி உட்கார்ந்தார்கள். பேதுருவும் அவர்களோடு அமர்ந்தான். ஒரு வேலைக்காரச் சிறுமி பேதுரு உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். நெருப்பின் ஒளியில் அவனை அவள் பார்க்க முடிந்தது. அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். பின்பு அவள், “இந்த மனிதனும் அவரோடு (இயேசு) கூட இருந்தான்” என்றாள். ஆனால் பேதுரு, அது உண்மையில்லை என்றான். அவன், “பெண்ணே, எனக்கு அவரைத் தெரியாது” என்றான். சற்று நேரத்துக்குப் பின் இன்னொருவன் பேதுருவைப் பார்த்து, “இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களில் நீயும் ஒருவன்” என்றான். ஆனால் பேதுரு “மனிதனே, நான் அவரது சீஷர்களில் ஒருவன் அல்ல” என்றான். ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், இன்னொரு மனிதன், “இது உண்மை, இந்த மனிதன் அவரோடு இருந்தான். இவன் கலிலேயாவைச் சேர்ந்தவன்” என்றான். “எனக்கு நிச்சமாகத் தெரியும்” என்று அம்மனிதன் மீண்டும் வலியுறுத்தினான். ஆனால் பேதுரு, “மனிதனே. நீ கூறுகிற விஷயத்தைக்குறித்து எனக்குத் தெரியாது” என்றான். பேதுரு இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே சேவல் கூவியது. அப்போது கர்த்தர் (இயேசு) திரும்பி பேதுருவின் கண்களைக் கூர்ந்து நோக்கினார். “சேவல் காலையில் கூவும் முன்னரே நீ மூன்று முறை என்னை உனக்குத் தெரியாது என்று கூறுவாய்” என்று கர்த்தர் ஏற்கெனவே தன்னிடம் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்தான். பின்னர் பேதுரு வெளியே சென்று மனமுருகி அழுதான்.