லூக்கா 21:8-13

லூக்கா 21:8-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு அதற்குப் பதிலாக, “நீங்கள் ஏமாறாதபடி விழிப்பாயிருங்கள். ஏனெனில், அநேகர் நான்தான் அவர், காலம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, என் பெயராலே வருவார்கள். அவர்களைப் பின்பற்றவேண்டாம். நீங்கள் யுத்தங்களையும், கலவரங்களையும் கேள்விப்படும்போது, பயப்படவேண்டாம். முதலில் இவை நிகழவே வேண்டும். ஆனாலும், முடிவோ உடனே வராது” என்றார். பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசு அரசிற்கெதிராய் எழும்பும். பல இடங்களில் பெரும் பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், ஆபத்தான நோய்களும் உண்டாகும். பயங்கர சம்பவங்களும், வானத்திலிருந்து பெரிய அடையாளங்களும் காணப்படும். “இவை எல்லாவற்றிற்கும் முன்பாக, உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களிலும், சிறைகளிலும் ஒப்படைப்பார்கள். அரசருக்கு முன்பாகவும், ஆளுநர்களுக்கு முன்பாகவும் கொண்டு செல்லப்படுவீர்கள். இவை எல்லாம் என் பெயரின் பொருட்டு நிகழும். நீங்கள் அவர்களுக்கு சாட்சிகளாய் இருப்பதற்கு, இது ஒரு சந்தர்ப்பமாய் இருக்கும்.

லூக்கா 21:8-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதற்கு அவர்: நீங்கள் ஏமாற்றப்படாதபடிக்கு கவனமாக இருங்கள்; ஏனென்றால், அநேகர் வந்து என் நாமத்தை வைத்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் நெருங்கிவிட்டது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள். சண்டைகளையும் கலவரங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது பயப்படாமலிருங்கள்; இவைகள் முன்னதாக நடக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: மக்களுக்கு எதிராக மக்களும், தேசத்திற்கு எதிராக தேசமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் ஆளுனர்கள் முன்பாகவும் உங்களைக் கொண்டுவந்து துன்பப்படுத்துவார்கள். ஆனாலும் அது நீங்கள் சாட்சி சொல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

லூக்கா 21:8-13 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு, “எச்சரிக்கையாக இருங்கள். முட்டாள் ஆக்கப்படாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், ‘நானே கிறிஸ்து’ என்றும், ‘வேளை வந்தது’ என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள். யுத்தங்களையும் கலவரங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்படாதீர்கள். இவை முதலில் நிகழ வேண்டும். ஆனால் உடனடியாக ஒரு முடிவு வராது” என்றார். பிற்பாடு இயேசு அவர்களிடம், “தேசங்கள் வேறு தேசங்களோடு போரிடும். இராஜ்யங்கள் பிற இராஜ்யங்களோடு போர் செய்யும். பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும். “ஆனால் இவையெல்லாம் நிகழும் முன்னர் மக்கள் உங்களைக் கைது செய்வார்கள். ஜெப ஆலயங்களில் மக்கள் உங்களை நியாயந்தீர்த்து சிறையில் தள்ளுவார்கள். ராஜாக்களின் முன்பும், ஆளுநர்களின் முன்பும் நிற்கும்படியாகக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் நீங்கள் என்னைப்பற்றிப் பிறருக்கு கூறுவதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.

லூக்கா 21:8-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள். யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.