லூக்கா 20:27-40

லூக்கா 20:27-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உ.யிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான். பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான். மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள். மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள். அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்களே என்றார். அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள். அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.

லூக்கா 20:27-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாகத் தன் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அந்த விதவையைத் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று, மோசே எங்களுக்கு எழுதி வைத்திருக்கிறார். ஏழு சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனான். இரண்டாவது சகோதரனும், பின் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக இறந்துபோனார்கள். அப்படியே, ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள். கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள். இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. அவர்களால் இறந்து போகவும் முடியாது; ஏனெனில், அவர்கள் இறைவனின் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள். இறந்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும் முட்புதரைப்பற்றிய சம்பவத்திலே குறிப்பிட்டுச் சொல்கிறார். ஏனெனில், மோசே கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கிறார். அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிர் உள்ளவர்களின் இறைவனே. ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில், எல்லோரும் உயிருள்ளவர்களே” என்றார். மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள். அதற்குப் பின்பு, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.

லூக்கா 20:27-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர்களில் சிலர் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாக இருந்து சந்ததியில்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியைத் திருமணம்செய்து, தன் சகோதரனுக்குச் சந்ததியுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. சகோதரர்கள் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனான். பின்பு இரண்டாம் சகோதரன் அவளைத் திருமணம்செய்து அவனும் சந்ததியில்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனும் அவளை திருமணம் செய்தான். அப்படியே ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள். இவ்விதமாக ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. அவர்கள் இனி மரிக்கவும் மாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் மக்களானபடியால் தேவதூதர்களுக்கு நிகரானவர்களுமாக, தேவனுடைய மக்களுமாக இருப்பார்கள். அல்லாமலும் மரித்தோர் உயிரோடு எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாக்கியத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியென்றால், யெகோவாவை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். அவர் மரித்தோரின் தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார்; எல்லோரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்களே என்றார். அப்பொழுது வேதபண்டிதர்களில் சிலர் அதைக்கேட்டு: போதகரே, நன்றாகச் சொன்னீர் என்றார்கள். அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றும் கேட்கத் துணியவில்லை.

லூக்கா 20:27-40 பரிசுத்த பைபிள் (TAERV)

சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (மக்கள் மரணத்தினின்று உயிர் பெறுவதில்லை என்று சதுசேயர்கள் நம்புகிறார்கள்) அவர்கள் இயேசுவை நோக்கி, “போதகரே, திருமணமான மனிதன் குழந்தைகளின்றி இறந்துபோனால், அவனது சகோதரன் அவன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று மோசே எழுதி இருந்தார். அப்படியானால் இறந்த சகோதரனுக்காகக் குழந்தைகள் அவர்களுக்குப் பிறக்கும். ஓரிடத்தில் ஏழு சகோதரர்கள் வாழ்ந்தனர். முதல் சகோதரன் ஒருத்தியை மணந்து குழந்தைகள் இல்லாமல் இறந்தான். பிறகு இரண்டாம் சகோதரன் அந்தப் பெண்ணை மணந்து இறந்து போனான். மூன்றாமவனும் அவளை மணந்து பின்னர் இறந்தான். ஏழு சகோதரர்களுக்கும் இதுவே நடந்தது. அவர்கள் எல்லோரும் குழந்தைகளின்றி இறந்தார்கள். அவர்கள் அனைவரும் இறந்த பிறகு அவளும் இறந்தாள். எல்லா ஏழு சகோதரர்களும் அவளை மணந்தனர். மரணத்தினின்று மக்கள் எழும்போது, அந்தப் பெண் யாருக்கு மனைவியாவாள்?” என்று கேட்டார்கள். இயேசு சதுசேயரை நோக்கி, “பூமியில் மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்கின்றனர். சிலர் மரணத்தினின்று எழும்பி அடுத்த உலகத்தில் பங்கு பெறும் தகுதியைப் பெறுவர். அந்த வாழ்வில் அவர்கள் மணம் செய்துகொள்ளமாட்டார்கள். அந்த வாழ்வில் அவர்கள் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள். அவர்களால் சாகமுடியாது. அவர்கள் மரணத்தினின்று எழுந்ததால் தேவனின் மக்களாவர். மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவர் என்பதை மோசே தெளிவாகக் காட்டினான். எரியும் புதரைப் பற்றி மோசே எழுதியபோது, அவன் கர்த்தராகிய தேவனை ஆபிரகாமின் தேவன் என்றும், ஈசாக்கின் தேவன் என்றும், யாக்கோபின் தேவன் என்றும் கூறினான். அவர்களின் தேவன் தானே என தேவன் கூறியதால் அந்த மனிதர்கள் உண்மையாக இறக்கவில்லை. வாழும் மக்களின் தேவன் அவரே. தேவனுக்கு உரியவர்கள் வாழ்பவர்களே ஆவர்” என்றார். வேதபாரகரில் சிலர், “போதகரே, உங்கள் பதில் நன்றாக இருந்தது” என்றனர். அடுத்த கேள்வியைக் கேட்க யாருக்கும் துணிச்சல் வரவில்லை.