லூக்கா 2:1-19

லூக்கா 2:1-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்டு, அந்தப் பிள்ளையைக்குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.

லூக்கா 2:1-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்நாட்களில் சீசர் அகுஸ்து, ரோமப் பேரரசு முழுவதும் ஒரு குடிமதிப்பு எடுக்கப்படவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். சீரியா நாட்டிற்கு சிரேனியு என்பவன் ஆளுநனாய் இருந்த காலத்தில் இடம்பெற்ற முதலாம் குடிமதிப்பு இதுவேயாகும். எனவே, ஒவ்வொருவரும் தங்களைப் பதிவு செய்வதற்காக, தங்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றார்கள். அப்பொழுது யோசேப்பும் கலிலேயாவிலுள்ள நாசரேத் பட்டணத்திலிருந்து, யூதேயாவிலுள்ள தாவீதின் பட்டணமான பெத்லகேமுக்குப் போனான். அவன் தாவீதின் குடும்பத்தையும் வம்சத்தையும் சேர்ந்தவனாயிருந்தான். அவன் தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருந்த மரியாளையும் கூட்டிக்கொண்டு, பதிவுசெய்யும்படி போனான். அப்பொழுது அவள் கர்ப்பவதியாயிருந்தாள். அவர்கள் அங்கிருக்கையில், அவளுக்குப் பிரசவநேரம் வந்தது; அவள் தன்னுடைய முதல் பிள்ளையான ஆண்குழந்தையைப் பெற்றாள். பிள்ளையை அவள் துணிகளினால் சுற்றி, தொழுவத்திலிருந்த தொட்டியில் கிடத்தினாள்; ஏனெனில் சத்திரத்தில் தங்குவதற்கு அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அன்றிரவு அருகேயிருந்த வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்கியிருந்து, இரவிலே தங்கள் மந்தையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். கர்த்தரின் தூதன் ஒருவன் அவர்களுக்குக் காட்சியளித்தான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள். ஆனால் அந்தத் தூதன் அவர்களிடம், “பயப்படவேண்டாம், எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கும் நற்செய்தியை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று தாவீதின் பட்டணத்திலே ஒரு இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்; அவரே கர்த்தராகிய கிறிஸ்து. துணிகளினால் சுற்றப்பட்ட ஒரு குழந்தையை தொழுவத்தில் கிடத்தியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம்” என்றான். அப்பொழுது திடீரென பரலோக சேனையின் ஒரு பெருங்கூட்டம் அந்தத் தூதனுடன் காட்சியளித்து, “உன்னதத்தில் இறைவனுக்கு மகிமை உண்டாகட்டும், பூமியில் அவர் தயவு காட்டுகிற மனிதருக்கு சமாதானம் உண்டாகட்டும்” என்று இறைவனைத் துதித்தார்கள். அந்தத் தூதர் அவர்களைவிட்டுப் பரலோகத்துக்குத் திரும்பிப் போனபின்பு, மேய்ப்பர் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் பெத்லகேமுக்குப் போய், நிகழ்ந்திருப்பதாகக் கர்த்தர் நமக்குச் சொல்லியிருக்கிற இந்தச் சம்பவத்தைப் பார்ப்போம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள். விரைவாய்ப் புறப்பட்டு மரியாளையும் யோசேப்பையும் தொழுவத்திலே கிடத்தப்பட்டிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அக்குழந்தையைக் குறித்து இறைதூதர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை எங்கும் பரப்பினார்கள். மேய்ப்பர்கள் சொன்னதைக் கேட்ட எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். மரியாளோ இந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, ஆழ்ந்து யோசித்தாள்.

லூக்கா 2:1-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசத்தின் அதிபதியாக இருந்தபோது இந்த முதலாம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்ய எல்லோரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பு, தான் தாவீதின் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தபடியால், பதிவு செய்வதற்காக, தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட கர்ப்பமாக இருந்த மரியாளைக் கூட்டிக்கொண்டு, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அங்கே அவர்கள் இருக்கும்போது, மரியாளுக்குப் பிரசவநேரம் வந்தது. அவள் தன் தலைப்பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, சத்திரத்திலே அவர்களுக்கு இடம் இல்லாததினால், குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்தாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே அவர்களுடைய ஆட்டுமந்தையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்திலே கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்துநின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களைப் பார்த்து: பயப்படாமலிருங்கள்; இதோ, எல்லா மக்களுக்கும் மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்திருப்பதைப் பார்ப்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். உடனே பரலோக தூதர்சேனையின் கூட்டம் தோன்றி, அந்தத் தூதனோடு சேர்ந்து: “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். தேவதூதர்கள் அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நாம் பெத்லகேம் ஊருக்குப்போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு சொல்லப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, வேகமாக வந்து, மரியாளையும் யோசேப்பையும், கால்நடைத் தீவனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குழந்தையையும் பார்த்தார்கள். பார்த்து, அந்தக் குழந்தையைப்பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயங்களை எல்லா மக்களுக்கும் சொன்னார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட அனைவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மரியாளோ அந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.

லூக்கா 2:1-19 பரிசுத்த பைபிள் (TAERV)

அக்காலத்தில் ரோம ஆளுகைக்குட்பட்ட எல்லா நாட்டினருக்கும் அகஸ்து இராயன் ஒரு கட்டளை அனுப்பினான். எல்லா மக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அக்கட்டளை கூறியது. அதுவே முதல் பதிவாக இருந்தது. சீரியாவின் ஆளுநராக சிரேனியு இருந்தபோது அது நடந்தது. எல்லா மக்களும் பதிவு செய்வதற்கென தங்கள் சொந்த நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்கள். கலிலேயாவில் உள்ள நகரமாகிய நாசரேத்தை விட்டு யோசேப்பு புறப்பட்டான். யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்னும் நகரத்துக்குச் சென்றான். பெத்லகேம் தாவீதின் நகரம் ஆகும். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையால் யோசேப்பு அங்கு சென்றான். மரியாள் அவனைத் திருமணம் செய்யும்பொருட்டு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் சேர்ந்து பதிவு செய்துகொண்டனர். (அந்தச் சமயத்தில் மரியாள் கருவுற்றிருந்தாள்.) யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் இருந்தபோது மரியாளின் குழந்தைப் பேற்றுக்காலம் நெருங்கியது. அவள் தன் முதல் குமாரனைப் பெற்றெடுத்தாள். விடுதிகளில் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மரியாள் குழந்தையைத் துணிகளால் சுற்றி ஆடுமாடுகள் உணவு உண்ணும் ஓர் இடத்தில் வைத்தாள். அந்த இரவில் சில மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கள் ஆடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். தேவதூதன் அம்மேய்ப்பர்கள் முன்னே தோன்றினான். கர்த்தரின் மகிமை அவர்களைச் சுற்றிலும் ஒளிவீசியது. மேய்ப்பர்கள் மிகவும் பயந்தனர். தூதன் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன். அது எல்லாரையும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும். தாவீதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் பிறந்துள்ளார். அவரே கிறிஸ்துவாகிய கர்த்தர். ஒரு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு ஆடுமாடுகள் உணவுண்ணும் இடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே நீங்கள் அவரை அறிந்துகொள்ளுவதற்குரிய அடையாளம்” என்றான். அதே சமயத்தில் ஒரு பெரிய கூட்டமான தூதர்கள் பரலோகத்திலிருந்து வந்து முதல் தூதனோடு சேர்ந்துகொண்டார்கள். எல்லா தூதர்களும், “பரலோகத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள். பூமியில் தேவனை பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்று சொல்லி தேவனைப் போற்றினார்கள். தூதர்கள் மேய்ப்பர்களிடமிருந்து கிளம்பி மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார்கள். மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர், “நாம் பெத்லகேமுக்குப் போய் கர்த்தரால் நமக்குத் தெரிவிக்கப்பட்ட இக்காரியத்தைக் காண்போம்” என்று கூறிக்கொண்டனர். எனவே மேய்ப்பர்கள் வேகமாகச் சென்று மரியாளையும் யோசேப்பையும் கண்டனர். குழந்தை ஆடுமாடுகள் உணவு உண்ணும் இடத்தில் படுத்திருந்தது. மேய்ப்பர்கள் குழந்தையைப் பார்த்தனர். பின்பு தூதர்கள் குழந்தையைக்குறித்துக் கூறியவற்றை அவர்களுக்குச் சொன்னார்கள். மேய்ப்பர்கள் கூறியவற்றைக் கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். மரியாள் அவற்றைத் தன் இதயத்தில் வைத்துக்கொண்டாள். அவள் அவற்றைக்குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.