லூக்கா 19:28-40

லூக்கா 19:28-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவைகளை இயேசு சொன்னபின்பு, அவர் தொடர்ந்து எருசலேமை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். அவர் ஒலிவமலை என்று அழைக்கப்பட்ட குன்றுக்கு அருகேயிருந்த பெத்பகே, பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது அவர், தம்முடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு, “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகும்போது, அங்கே ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள். அதில் ஒருவருமே இதுவரை ஏறிச்சென்றதில்லை. அதை அவிழ்த்து, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம், ‘அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது கர்த்தருக்குத் தேவைப்படுகிறது’ என்று சொல்லுங்கள்” என்றார். இப்படியாக, அனுப்பப்பட்டவர்கள் போய் இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே இருக்கக் கண்டார்கள். அவர்கள் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறபொழுது, அதன் உரிமையாளர்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் அந்தக் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “கர்த்தருக்கு இது தேவைப்படுகிறது” என்றார்கள். சீடர்கள் அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் மேலுடைகளை அந்தக் கழுதைக் குட்டியின்மேல் போட்டு, அதன்மேல் இயேசுவை உட்கார வைத்தார்கள். அவர் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் தங்களுடைய மேலுடைகளை வீதியிலே விரித்தார்கள். ஒலிவமலையிலிருந்து கீழ்நோக்கிப் போகிற பாதை இருக்கிற இடத்துக்கு இயேசு வந்தபொழுது, திரளாய்க் கூடியிருந்த சீடர்கள் எல்லோரும் தாங்கள் கண்ட எல்லா அற்புதங்களுக்காகவும் மகிழ்ச்சியுடன், உரத்த குரலில் இறைவனைத் துதிக்கத் தொடங்கினார்கள்: “கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “பரலோகத்தில் சமாதானமும், உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக!” மக்கள் கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, உமது சீடரைக் கண்டியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் பேசாமல் மவுனமாய் இருந்தால், இந்தக் கல்லுகளே சத்தமிடும்” என்றார்.

லூக்கா 19:28-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார். அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள். அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார். அனுப்பப்பட்டவர்கள்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே பார்த்தார்கள். கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி, அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள். அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள். அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு, கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர் அவரைப் பார்த்து: “போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்” என்றார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

லூக்கா 19:28-40 பரிசுத்த பைபிள் (TAERV)

இவற்றையெல்லாம் கூறியபின்பு இயேசு, எருசலேமை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார். ஒலிவ மலையருகே காணப்பட்ட பெத்பகே, பெத்தானியா ஆகிய ஊர்களருகே இயேசு வந்தபோது, அவர் இரண்டு சீஷர்களை அனுப்பினார். அவர், “நீங்கள் பார்க்கிற அந்த ஊருக்குள் செல்லுங்கள். ஊருக்குள் நுழையும்போதே அங்கு ஒரு கழுதைக் குட்டி கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். எந்த மனிதனும் அதன்மீது ஏறியதில்லை. அக்கழுதையை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். எந்த மனிதனாவது அக்கழுதையை ஏன் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் நீங்கள், ‘எங்கள் எஜமானருக்கு இக்கழுதை வேண்டும்’ என்று சொல்லுங்கள்” என்றார். இரண்டு சீஷர்களும் ஊருக்குள் சென்றார்கள். இயேசு கூறியபடியே கழுதைக்குட்டியைக் கண்டார்கள். சீஷர்கள் கட்டப்பட்டிருந்த அக்கழுதையை அவிழ்த்தார்கள். கழுதையின் சொந்தக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் சீஷரை நோக்கி, “எதற்காகக் கழுதையை அவிழ்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்கள். சீஷர்கள், “ஆண்டவருக்குத் தேவையாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்கள். சீஷர்கள் கழுதைக் குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து தம் மேலங்கியை அதன்மேல் போட்டார்கள். பின்பு இயேசுவைக் கழுதையின் மேல் அமர்த்தினார்கள். இயேசு எருசலேமுக்குச் செல்லும் பாதை வழியாகக் கழுதையின் மேல் ஏறிச் சென்றார். இயேசுவுக்கு முன்பாக சீஷர்கள் தம் அங்கிகளைப் பாதையில் விரித்தார்கள். எருசலேமுக்கு அருகில் இயேசு வந்துகொண்டிருந்தார். அவர் ஒலிவமலை அடி நகரத்திற்கருகே வந்திருந்தார். அவரது சீஷர்கள் அனைவரும் மகிழ்வோடு இருந்தார்கள். அவர்கள் உரத்த குரலில் களிப்புடன் தேவனை வாழ்த்தினார்கள். அவர்கள் தாம் பார்த்த எல்லா வல்லமையான செயல்களுக்கும் தேவனுக்கு நன்றி தெரிவித்தார்கள். அவர்கள், “கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசரை தேவன் ஆசீர்வதிப்பாராக! பரலோகத்தில் அமைதியும் தேவனுக்கு மகிமையும் உண்டாவதாக!” என்றனர். கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, இவற்றைக் கூறாதபடிக்கு சீஷருக்குச் சொல்லுங்கள்” என்றார்கள். ஆனால் இயேசு, “நான் உங்களுக்குச் சொல்கிறேன். இக்காரியங்கள் சொல்லப்பட வேண்டியவை. என் சீஷர்கள் இவற்றைக் கூறாவிட்டால், இக்கற்கள் அவற்றைக் கூறும்” என்று பதிலுரைத்தார்.

லூக்கா 19:28-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார். அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள். அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார். அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள். கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி, அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள். அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள். அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.