லூக்கா 19:1-6

லூக்கா 19:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான்.

லூக்கா 19:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்து, அதன் வழியாகப்போய்க் கொண்டிருந்தார். அங்கே சகேயு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் வரி வசூலிப்பவர்களின் தலைவனாகவும், செல்வந்தனாகவும் இருந்தான். அவன் இயேசு யார் என்று பார்க்க விரும்பினான். ஆனால், அவன் குள்ளனானபடியால், மக்கள் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை. எனவே, சகேயு அவரைப் பார்க்கும்படி முன்னே ஓடிப்போய், ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக்கொண்டான். ஏனெனில், இயேசு அந்த வழியாகவே வந்துகொண்டிருந்தார். இயேசு அவ்விடத்திற்கு வந்தபொழுது, அவர் மேலே அண்ணார்ந்து பார்த்து, “சகேயுவே, உடனடியாய் கீழே இறங்கி வா. நான் இன்றைக்கு உன்னுடைய வீட்டில் தங்கவேண்டும்” என்று, அவனுக்குச் சொன்னார். அவன் உடனே இறங்கிவந்து, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.

லூக்கா 19:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது, வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாக இறங்கி, சந்தோஷத்தோடு அவரை அழைத்துக்கொண்டுபோனான்.

லூக்கா 19:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

எரிகோ பட்டணத்தின் வழியாக இயேசு சென்றுகொண்டிருந்தார். எரிகோவில் சகேயு என்னும் பெயருடைய மனிதன் இருந்தான். அவன் செல்வந்தனும், முக்கியமானவனுமான ஒரு வரி வசூலிப்பவனாவான். அவன் இயேசுவைக் காண விரும்பினான். இயேசுவைக் காண விரும்பிய இன்னும் பலரும் அங்கு இருந்தார்கள். மக்களுக்குப் பின்னே நின்றபடி இயேசுவைப் பார்க்க முடியாதபடி சகேயு குள்ளனாக இருந்தான். எனவே, அவன் இயேசு கடந்து செல்லும் இடத்தையடைய வேகமாக ஓடிச் சென்றான். இயேசுவைப் பார்க்கும்பொருட்டு ஓர் அத்தி மரத்தின்மீது சகேயு ஏறினான். இயேசு அவ்விடத்துக்கு வந்தபோது, மேலே ஏறிட்டுப் பார்த்து சகேயு மரத்தின்மீது இருப்பதைக் கண்டார். இயேசு அவனை நோக்கி, “சகேயுவே, விரைந்து வா. கீழே இறங்கு. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்கவேண்டும்” என்றார். சகேயு விரைந்து கீழே இறங்கினான். தன் வீட்டில் இயேசுவை வரவேற்பதில் அவன் மிகவும் மகிழ்ந்தான்.