லூக்கா 18:31-34

லூக்கா 18:31-34 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர், இயேசு பன்னிரண்டு சீஷர்களிடம் மட்டும் தனித்துப் பேசினார். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நாம் எருசலேமுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். மனிதகுமாரனைக் குறித்து எழுதும்படியாக தேவன் தீர்க்கதரிசிகளுக்குக் கூறிய அனைத்தும் நிறைவேறும். அவரது மக்களே அவருக்கு எதிராகத் திரும்பி அவரை யூதரல்லாத மக்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்து, அவர் மீது உமிழ்வார்கள். அவரை இகழ்ந்து அவமானப்படுத்துவார்கள். அவரைச் சாட்டையினால் அடித்து பின்னர் கொல்வார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிரோடு மீண்டும் எழுவார்” என்றார். சீஷர்கள் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன் பொருள் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது.

லூக்கா 18:31-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய் அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகிறோம், மானிடமகனாகிய என்னைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும். மானிடமகனாகிய நான் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவேன். அவர்கள் என்னை ஏளனம் செய்து, அவமதித்து, என்மேல் துப்புவார்கள். என்னைச் சவுக்கால் அடித்து, என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்று சொன்னார். சீடர்களோ, இவைகளில் ஒன்றையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு சொன்னதின் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் எதைக்குறித்துப் பேசுகிறாரென்றுகூட அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.

லூக்கா 18:31-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியென்றால், அவர் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரிகாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை சாட்டையினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார். இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாக இருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.

லூக்கா 18:31-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.